அமெரிக்காவினுடைய நீதியும் தர்மமும் வஞ்சகமானதென்பதுடன், அது இஸ்லாமிய மக்களுக்கு வேறு, உலகின் ஏனைய நாடுகளுக்கு வேறென்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
ஆகையினாலேயே உலக பாதுகாப்பு சமன்பாட்டில் தற்போது ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது நீதியையும் தர்மத்தையும் ஏற்படுத்துமென்று இவ்வளவு காலமும் நாம் நம்பியிருந்ததாகவும் ஆயினும், இன்று அது ஒரு வெற்றுச் சபையாகி இஸ்லாமிய மக்களுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் எந்தவித நீதி, நியாயத்தை வழங்காத ஒரு சபையாக மாறியுள்ள நிலையில், உலக இஸ்லாமிய நாடுகளின் அமையம் சவுதியில் ஒன்றுகூடியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பாக அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,
“பலஸ்தீனம் -இஸ்ரேல் பிரச்சினையை தற்செயலான இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையாக பார்க்கவில்லை. இஸ்ரேலானது, பலஸ்தீனை கடந்த 6ஆம் திகதி மட்டுமல்லாமல், 80 வருடகாலமாக காலத்துக்குக்காலம் யுத்தம் செய்து, அந்த மக்களை அழித்துக்கொண்டிருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மோதலினால், இருபக்கமும் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாம் கவலையுடன் அவதானிக்கின்றோம். அதேவேளை, மிகக் கொடூரமான முறையில் காசாவிலுள்ள மருத்துவமனையொன்றின் மீது தாக்குதல் நடத்தி, பாரிய யுத்தக் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் சூழ்நிலையில், உலக நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர் இன்று காஸா மருத்துவமனைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் எனும் அவர்களது இராணுவப்படை காரணமாக உள்ளதாகக் கூறியும் கூட, உலகத்தை வழிநடத்தும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் வேடிக்கை பார்க்கின்றமை கவலையாக உள்ளது. மேலும், ரஷ்ய – உக்ரைன் போரில் உலக நாடுகளின் பார்வை வேறு விதமாகவும் அதேவேளை, இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் உலக நாடுகளின் பார்வை மற்றுமொரு விதமாகவும் இருப்பது மிகவும் வேதனை தருகின்றது” எனத் தெரிவித்தார்.