நாட்டில் பீடி உற்பத்தி கைத்தொழிலை முறையாக நடத்துவதற்கு புதிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் கடந்த வாரம் அனைத்துத் தரப்பினருடனும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கான கொள்கையொன்றை தயாரிக்கும் நடவடிக்கை நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோகிராம் பீடி இலைக்கு அறவிடப்படும் 5,000 ரூபா செஸ் வரியை நீக்குமாறும் கலந்துரையாடலில் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்படும் 5,000 ரூபா செஸ் வரியுடன் சேர்த்து, ஒவ்வொரு பீடியிலிருந்தும் 2 ரூபா வீதம் அரசு வரியாக வசூலிக்கிறது. கலால் திணைக்களம் இந்த முறையை அறிமுகப்படுத்திய போதிலும், அது சரியாக செயற்படவில்லையென கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் பீடி இலைக்கு அறவிடப்படும் செஸ் வரி காரணமாக அதிகளவான பீடி இலைகள் நாட்டுக்குள் கடத்தப்படுவதாகவும் இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பீடி உற்பத்தி கைத்தொழிலை சீரமைத்து, கலால் துறையின் செயல்பாடுகளை சீரமைக்க கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. பீடி உற்பத்தி கைத்தொழிலில் தற்போது சுமார் 700 பேர் ஈடுபட்டுள்ளதால், பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்படும் செஸ் வரியை நீக்கவும் ஒரு பீடிக்கு விதிக்கப்படும் வரித்தொகையை 3.50 ரூபாயாக உயர்த்தவும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.