மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 5,000 ரூபா ஊக்குவிப்புத்தொகை வழங்கப்படுமென, போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.
இந்த மாதம் ஒக்டோபர் முதல் இந்தாண்டு டிசெம்பர்வரை 3 மாதங்களுக்கு முன்னோடித் திட்டமாக இது நடைமுறைப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் பரிந்துரைகளுக்கமைய, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறிவதற்காக 180,000 நவீன சாதனங்கள் ஏற்கெனவே பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட ஊக்குவிப்புத்தொகை காரணமாக மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதில் பொலிஸ் உத்தியோகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், அவர் தெரிவித்தார். மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் போது, அவர்கள் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்படுமென்பதுடன், பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 25,038 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.