இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதே தமது நோக்கமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.
நேற்று (21) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை மிக கோலாகலமாக ஆரம்பமானது.
2048 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட மாநாடு ஆரம்பமானதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்த்தன, தலைவர் வஜிர அபேவர்த்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். ஐக்கிய தேசியக் கட்சியை புதிய உலகுக்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பதே இந்த விசேட மாநாட்டின் பிரதான நோக்கமென அறிவிக்கப்பட்டது. ஸ்மார்ட் கட்சி,ஸ்மார்ட் நாடு என்பதுடன் கட்சியின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுமென்றும் இங்கு ஜனாதிபதி தெரிவித்தமை முக்கிய அம்சமாகும்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஸ்மார்ட் தேசமாக மாற்றுவது மற்றும் அதன் பொருளாதாரத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வது என்ற தனது தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும், மாகாண சபைத் தேர்தலும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தல் தேர்தலின் பின்னர் சாத்தியமாகுமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
தேர்தல்முறை மறுசீரமைப்பு யோசனை ஊடாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிகள் எடுத்துவருதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் பின்புலத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.