சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையால் கடன் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட்டதுடன், இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை விரைவில் பெற்றுக்கொள்ளுமெனவும், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்த பின்னர் ஏற்பட்ட அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடானது, பலதரப்புக் கடன் வழங்குநர்களுக்கு எஞ்சிய தவணைகளை செலுத்துவதற்கும் கடன் மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதற்கும் உதவுமெனவும், நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவால், இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரே, இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளுமெனவும், அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, “சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இரண்டாம் தவணைத் தொகையை பெற்றுக்கொள்வது தொடர்பாக அவசியமாக இருந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பாக நீண்ட மீளாய்வுகள் நடைபெற்றன. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டக் குழு, இலங்கைக்கு வருகை தந்து இரண்டு வாரங்களாக விரிவான மீளாய்வுகளை நடத்தியது. மேலும் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டியிருந்தமையால், அதன்போது எங்களால் அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை.
நாம் மொரோக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டத்தொடரில் இது தொடர்பாக மேலும் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தினோம். அதன்போது, இன்னும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக எமக்கு தெளிவு பெற வேண்டியிருந்ததால், நாம் மீண்டும் இலங்கைக்கு வந்து அவர்களுடன் இணைய வழியில் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்தத் தீர்மானம் மிக்க அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு வரும் செயற்பாடு, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மற்றும் எமது நாட்டின் அதிகாரிகள், குறிப்பாக மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளிகள் ஆகியோருக்கிடையில் நடைபெற்றது.
இங்கு எமக்கு மிக முக்கியமான விடயங்களில் ஒன்றே, நாம் 2023 மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தை பெற்ற பின்னர் ஏற்பட்டிருந்த அனுகூலமான நிலைமைக்கு கடந்த சில வாரங்களில் ஒரு சில தடங்கல்கள் ஏற்பட்டன. சில குழுக்கள் இந்தக் கலந்துரையாடல்கள் தொடர்பாக சரியான புரிதலின்றி, இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடு கிடைக்காமை தொடர்பாக பல்வேறு பிரதிகூலமான கருத்துகளை முன்வைத்தனர்.