பொருளாதார ரீதியிலான சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் சரியான பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தைப் பலிக்கடாவாக்குவதற்கு முயற்சிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவர் எமக்குப் பேட்டியளித்தார்.
கே: நாட்டில் அரசியல் நிலைமை சீராக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: மிக எளிமையான பதில் இருக்கிறது. இவை அனைத்தையும் ஒப்பீட்டளவில் பார்க்க வேண்டும். ஒரு வருடம் பின்னோக்கிச் செல்லுங்கள். அன்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் தெளிவாகத் தெரியும். அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் உள்ளது.
கே: சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் உதவியின் இரண்டாவது தவணையை அரசாங்கம் பெறும் என்று எதிர்பார்த்தாலும், அது நிறைவேறாது என்று எதிர்க்கட்சி கூறுகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன?
பதில்: அந்தக் கடன் தவணை எங்களுக்கு கிடைக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால் நாங்கள் ஒரு திட்டத்தின்படி செல்கிறோம். ஒப்பந்தங்கள் தாமதமாகலாம், இலக்குகளை அடைவது கடினமாக இருக்கலாம், ஆனால் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. பெரும்பான்மையானவர்கள் 75 வருட பாரம்பரிய கட்டமைப்பிலிருந்து விடுபட விரும்பினாலும், பாரம்பரிய எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாவது தவணையை நாங்கள் பெற மாட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள், அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரோ தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றுவோம் என்று கூறுகிறார். மேலும் சுருங்கி வரும் பொருளாதாரத்தை நாங்கள் கையாள்கிறோம். இது மிகவும் கடினமான பயணம். இந்த ஒப்பந்தங்களில் உள்ள சிறுசிறு முரண்பாடுகளை நீக்கி இந்தப் பயணத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கின்றோம்.
கே: அரசாங்கத்தின் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சி கூறுகிறதே இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: அரசாங்கம் மிகவும் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெளிவுபடுத்தியுள்ளது. எதிர்க்கட்சியைக் கையாள்வதே அரசாங்கத்தின் மிகப்பெரிய பிரச்சினை. மக்களை வீதிக்கு இறக்க முயன்றனர். அந்தத் தடைகளைத் தாண்டி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம்.
கே: நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். குறிப்பாக தெற்கில் பாதாள உலகம் தலைதூக்கியுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: நாம் கண்டிப்பாக அதில் கவனம் செலுத்த வேண்டும். இங்கு நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நாடு 30 வருடகால யுத்தத்தை சந்தித்திருந்தது. அந்தப் போரில் ஆயுதங்களைப் பயன்படுத்தியவர்கள் ஏராளம். அது ஒருபுறமிருக்க, போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் கும்பல்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது குற்றச்செயல்களை தீவிரப்படுத்துவது வழமை. ஆனால் இந்த நிலை கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு, பாதுகாப்புப் படையினரின் முயற்சியின் கீழ் கடுமையான தடுப்பு முறை அமுல்படுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பாக சுங்கத்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சுங்கத்துறையினரிடம் அகப்படாமல் இந்த நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவர முடியாது. வழக்கமான சோதனைகளை நாம் இரட்டிப்பாக்கியுள்ளோம். மேலும் இந்தச் சூழ்நிலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் மற்றும் ஊடக ஆதரவு தேவை. இது இவ்வாறான குற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும்.
கே: ஆனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், புதிதாக பொலிஸ்மா அதிபர் ஒருவரை அரசாங்கத்தினால் இன்னமும் நியமிக்க முடியாதுள்ளதே?
பதில்: பொலிஸ் மாஅதிபரின் நியமனம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கடமைகள் இரண்டும் வெவ்வேறு விடயங்கள். எந்தவொரு முரண்பாடும் இடம்பெறாமல், மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்க அரச தலைவர் உழைத்து வருகிறார். அந்த நியமனம் மேற்கொள்ளப்படும், பொலிஸ் மாஅதிபர் நியமனம் தாமதமடைவது பொலிஸார் அன்றாடப் பணிகளைச் செய்வதைத் தடுக்காது.
கே: முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஒருவித அழுத்தத்தில் உள்ளதாகத் தெரிகிறது அல்லவா?
பதில்: இதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று கட்சியின் உரிமை. இலங்கை அரசியல் மிகவும் பக்கச்சார்பாக மாறியிருப்பதையே இது காட்டுகிறது. தனியாகப் பாராளுமன்றத்திற்கு வந்த ஒருவரால் நாடு காப்பாற்றப்பட்டது. அவர் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் இன்று என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நீதிமன்றத் தீர்ப்புப் பற்றி நான் பேசவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.
கே: அதிக வரி விதிப்பு பற்றி அனைவரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மருத்துவர்கள் கூட போராட்டம் நடத்துகிறார்கள். வரியைக் குறைக்கவில்லை என்றாலும் நிவாரணம் கிடைக்க வழி இல்லையா?
பதில்: நாங்கள் இன்னும் விரும்பிய இலக்குகளை அடையவில்லை. உலகிலேயே மிகக்குறைந்த வரி வருவாயைக் கொண்ட நாடு நாம்தான். இலக்கை நோக்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அது சுருங்கிய பொருளாதாரத்துடன் செல்ல வேண்டும். அதேசமயம் வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்து, வியாபாரம் பாதிக்கப்பட்டு, வருமானம் குறைந்துள்ளது. ஒரு அரசாங்கம் வரி விதிக்க வேண்டும். முடிந்தவரை, வரிகளால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றுகிறோம். வரி அடிப்படையை அதிகரிப்பதே எங்கள் இலக்கு. உண்மையில் வரி செலுத்த வேண்டிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரி செலுத்துவதில்லை. வரி செலுத்த அவர்களை வழிநடத்துதல் மற்றும் அதிக வரிச்சுமையை சுமப்பவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவோம்.
கே: வாகனங்கள் தவிர பிறபொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் விரும்பிய இலக்குகள் எட்டப்படுமா?
பதில்: நாம் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நாடு, அத்தகைய நாடு இறக்குமதியை முழுமையாக நிறுத்த முடியாது. காய்கறிகளை இறக்குமதி செய்ய அனுமதித்தால், வெள்ளரிகளும் இறக்குமதி செய்யப்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். எங்களிடம் சக்திவாய்ந்த கட்டுப்பாடுகள் கொண்ட கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உள்ளன. மேலும் அதற்கு இறக்குமதி வரி விதிப்பு உள்ளது. சில பொருட்களுக்கு 400 சதவீதம் பெரிய வரி விதிக்கிறோம். அத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அத்தகைய பொருட்களின் இறக்குமதியை நாங்கள் அங்கீகரிக்கிறோம். உள்ளூர் பொருளாதாரத்தை காப்பாற்ற சில பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் நாம் நமது ஏற்றுமதித் தளத்தை மேம்படுத்த வேண்டும்.