சத்திரசிகிச்சை என்பது வாழ்க்கையில் முகங்கொடுக்கும் மிக மோசமான அனுபவங்களில் ஒன்றாகும். மயக்கவியல் மருத்துவ உலகில் நுழைய முன்னர், அறுவைச் சிகிச்சையுடன் தொடர்புடைய வலி மற்றும் உணர்வு காரணமாக அறுவை சிகிச்சையென்பது ஒரு திகிலூட்டும் அனுபவமாக இருந்தது. அன்று சத்திரசிகிச்சையின் போது சுயநினைவை இழக்கச் செய்வதற்கான முறைகள் இல்லாதிருந்ததால் நோயாளியின் உணர்வைக் கட்டுப்படுத்தி மிகக் குறுகிய காலத்துக்குள் அறுவை சிகிச்சையை முடிக்க வேண்டி இருந்தது. அறுவைசிகிச்சை மருத்துவத்தின் முன்னேற்றம் தொடர்பான இந்த சிக்கல் 177 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1846 ஒக்டோபர் 16ல் தீர்க்கப்பட்டது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது வைத்தியசாலையில் வில்லியம் தோமஸ் மார்டன் என்ற பல் மருத்துவர், எட்வர்ட் கில்பர்ட் அபோட் என்ற நோயாளியின் கழுத்தில் இருந்த கட்டியை அகற்ற டை எதில் ஈதர் என்ற மயக்க மருந்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தி அன்றைய தினம் உலகில் முதன்முறையாக முழுமையான மயக்க மருந்தை வெற்றிகரமாகப் பயன்படுத்திய மருத்துவராக வரலாற்றில் பதியப்பட்டார். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் திகதி “உலக மயக்க மருந்து தினமாக” அனுஷ்டிக்கப்படுகிறது.
பல வழிகளில் உலகம் முழுவதும் மயக்க மருந்து தினத்தை கொண்டாடும் வேளையில், மயக்க மருந்துத் துறை வரலாற்றைப் புரட்டிப் போடும் சத்திரசிகிச்சையொன்று அண்மையில் இலங்கையில் நடைபெற்றது. ‘ Awake craniotomy’ என்ற நோயாளியை சுயநினைவிழக்கச் செய்யாமல் சுயநினைவுடன் இருக்கும் போதே நோயாளியின் பல்வேறு செயற்பாடுகளை அவதானித்துக் கொண்டு அண்மையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மூளை சத்திரசிகிச்சையானது இந்நாட்டின் மருத்துவ வரலாற்றில் புதிய பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.
மிக ஆபத்தான மூளை சத்திர சிகிச்சையின் போது நோயாளியை முற்றாக மயக்காமல் குறைந்தபட்ச மயக்கத்தில் இருக்கும்போது மூளைக் கட்டியை அகற்றிய அதேவேளை, நோயாளியின் திறன்களைக் காட்டும் வண்ணம் அவரை சத்திரசிகிச்சை நடைபெற்றபோதே ஓவியம் வரையச் செய்தமை இந்த வரலாற்றுப் புரட்சியின் அழிக்க முடியாத அடையாளமாகும். கடந்த 9ம் திகதி அனுராதபுரம் நொச்சியாகமவைச் சேர்ந்த 36 வயதுடைய வடிவமைப்பாளரான சமன் ஜயசிங்கவை இந்த சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியது நரம்பியல் நிபுணர் டாக்டர் மதுஷங்க கோமஸ், நரம்பியல் நிபுணர் டொக்டர் ரொஹான் பாரிஸ், மயக்கவியல் நிபுணர் டாக்டர் லெவன் காரியவசம், மயக்கவியல் நிபுணர் டாக்டர் விசாகா கர்னர் உள்ளிட்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய குழுவினராகும்.
இந்த அற்புதமான அனுபவத்தை சமன் தினகரனுக்கு இவ்வாறு கூறினார்.
“எனது பெயர் சமன் ஜயசிங்க. எனக்கு 36 வயதாகின்றது. நான் நொச்சியாகமவில் வசிக்கின்றேன். திருமணமாகி விவாகரத்துப் பெற்றுவிட்டேன். எனது தாய் பண்டார மெனிக்கே. தந்தை சாகர உதய என்னைப் போன்று கலையுடன் தொடர்புபட்டவர். எனக்கு ஏற்பட்ட திடீர் விபத்தின் பின்னர் உயர் தரத்தில் கற்க முடியாது போனது. பாடசாலை செல்லும் காலத்திலிருந்தே நான் நன்றாக சித்திரம் வரைவேன். எனது 19ஆவது வயதில் எங்கள் ஊர் விகாரையில் சங்கரக்கித தேரரால் எனக்கு விகாரை ஓவியங்கள் வரைவதற்கு வாய்ப்பு கிடைத்தது. விகாரைகளில் நெருங்கிச் செயற்பட்டதால் பௌத்த சமயத்தின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. அன்றிலிருந்து நான் விகாரை ஓவியம், சிலைகள் வடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.
சில நாட்களாக நான் வேலை செய்யும் போது அதிக தூக்கம் வருவதை உணர்ந்தேன். உடல்பருமனாக இருப்பதால்தான் அவ்வாறு வருவதாக நினைத்தேன். நாட் செல்லச் செல்ல அது அதிகரித்தது. வலது காலில் லேசான விறைப்பும் இருந்தது. அவ்வப்போது தலை வலியும் ஏற்பட்டது. பின்னர் நான் அனுராதபுரம் வைத்தியசாலையில் நரம்பியல் நோய்கள் தொடர்பாக சிகிச்சை பெற்றேன். முதலில் சில சிறிய சோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியாசாலையின் எம். ஆர். ஐ ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் எனது மூளையின் இடது புறத்தில் அதாவது வலது பக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதியில் கட்டி ஒன்று உள்ளதை வைத்தியர்கள் கண்டுபிடித்தார்கள்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ெடாக்டர் மதுஷங்க கோமஸ் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஹன் பாரிஸ் ஆகியோரே நோயைக் கண்டறிந்தனர். இதற்கிடையில், டாக்டர் திலன் என்னுடன் மிகவும் நட்புடன் பழகினார். அந்த நட்பின் காரணமாக மருத்துவமனையின் சித்திரம் ஒன்று கூட வரைந்தேன். அந்நேரம் மூளைக்கட்டி பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது. இந்த வகை கட்டியானது அரிதான ஆனால் கொடிய வகைக் கட்டி என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தக் கட்டி உருவாகி நோயாளி மரணம் அடையும் வரைக்கும் அறிகுறியேதும் இருக்காது என்றும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர். எனவே ஒக்டோபர் 5ம் திகதி சத்திரசிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். சத்திரசிகிச்சைக்கு முன் நான் பயத்தை உணர்ந்தேன். எனினும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான கட்டியை மயக்க மருந்து இல்லாமல் சத்திரசிகிச்சை செய்ததாகவும், அதற்கு நானும் தயாராக இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினர். இந்த சத்திரசிகிச்சையைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் எனக்கு இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினார்கள். ஒக்டோபர் 09ம் திகதி காலை 7.15 மணியளவில் சத்திரசிகிச்சை கூடத்திற்கு என்னை அனுப்பினார்கள். பின்னர் முதலில் தலையை விறைக்கச் செய்வதற்கான ஊசியை தலையைச் சுற்றி அடித்தார்கள். அதன் பின்னர் எனக்கு சுயநினைவு கொஞ்சமே இருந்தது. வைத்தியர்கள் வழங்கிய உத்தரவுகள் அனைத்தையும் நான் அந்த சுயநினைவுடன் செய்திருந்தேன். பாதி உறக்கத்தில் இருந்த என்னிடம் அவர்கள் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துக் கொண்டும், புத்தகங்களைக் காட்டி ஒவ்வொரு விடயங்களை கேட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதனிடையே துணியால் மூடப்பட்ட தலையின் பின்புறப் பகுதியில் வைத்தியர்கள் சத்திரசிகிச்சையினைச் செய்தார்கள். இன்னும் சிலர் முன்னால் இருந்தார்கள். அந்தநேரத்தில் சத்திர சிகிச்சை செய்யப்படுகின்றது என்பது எனக்கு விளங்கவில்லை. அவர்கள் என்னிடம் தாமரைப் பூ ஒன்றை வரையச் சொன்னார்கள். அரைத் தூக்கத்தில்தான் நான் தாமரைப் பூவை வரைந்திருக்கின்றேன். முதலில் என்ன வரைய முடியும் எனக் கேட்டார்கள். நித்திரைக் கலக்கத்தில் இருந்ததால் நான் சித்திரம் வரைவதில்லை எனக் கூறினேன். பின்னர் அவர்கள் கூறியவற்றை நான் செய்திருக்கின்றேன். சத்திரசிகிச்சை மாலை 3.45 மணிக்கே முடிந்தது. சுமார் 6 மணித்தியாலங்கள் எடுத்திருக்கின்றது. சத்திரசிகிச்சையின் பின்னர் விறைப்புத் தன்மை மாத்திரமே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றிய பின்னர் நித்திரை கொள்வதற்கான மருந்து வழங்கினார்கள். 50 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன். 5 சென்றி மீற்றர் அளவிலான கட்டி இருந்ததாக வைத்தியர்கள் கூறினார்கள். இது மூளையில் மத்தியில் இருந்ததாகவும், அதனால் பாதிப்பைக் குறைப்பதற்காக மயக்கமடையச் செய்யாமல் மேற்கொள்ள வேண்டும் என்றே அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
சமனின் இடது மூளையின் வலது பாதியின் முன்பக்கச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் பிரதேசத்தில் உருவான கட்டியை நீக்கும் சத்திரசிகிச்சை சிக்கலாகியது. அறுவை சிகிச்சையின் போது நோயாளியுடன் தொடர்ச்சியாகக் கதைத்துக் கொண்டு அவரது நினைவாற்றல், வலது புறத்தின் கை மற்றும் கால்களின் அசைவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளிடையே மூளையின் கட்டியை நீக்குதல் ‘Awake craniotomy ‘ என்ற வைத்திய எண்ணக்கருவுக்குரிய ஆச்சரியமிக்க ஒரு சத்திரசிகிச்சையாகும். இலங்கையின் வைத்திய துறையில் ஒரு மைல்கல்லை உருவாக்கிய ‘Awake Craniotomy’ சத்திரசிகிச்சை 2020ம் ஆண்டு டிசம்பர் 3ம் திகதி அனுராதபுரம் போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்டதும் இதே நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மதுஷங்க கோமஸ், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஹன் பாரிஸ் மற்றும் ஏனைய வைத்தியர்களாலேயாகும். இதே வைத்தியர்கள் குழுவினர் 2021 ஜனவரி 15 அன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இரண்டாவது மூளை சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 42 வயது விவசாயி ஒருவரின் கட்டியை அகற்றும் பணிக்காகவே அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ‘Awake Craniotomy’ இன்னமும் வைத்திய துறையில் புதிய எண்ணக்கருவாகும். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மதுஷங்க கோமஸ் மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஹன் பாரிஸ் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டரில் அமைந்துள்ள மிட்லாண்ட் ரோயல் வைத்தியசாலையிலேயே இதற்கான பயிற்சியை பெற்றனர்.
“இதை இலங்கையில் நடைமுறைப்படுத்த விரும்பினோம். இங்கே முக்கிய நன்மை நோயாளிக்கும் வைத்தியசாலைக்கும் கிடைக்கின்றது…” “இந்த Awake craniotomy என்பது, உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் சுயநினைவை இழக்கச் செய்யும் சத்திரசிகிச்சையாகும். இதன் பிரதான நோக்கமாக இருப்பது சிக்கல்களைக் குறைத்து நோயாளியின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்திய பகுதிகளை நீக்குவதாகும். இங்கே இரண்டு முக்கிய நன்மைகள் உள்ளன. ஒன்று சிக்கல்கள் குறைவாக இருப்பது. இரண்டாவது நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டிய காலம் குறைவாக இருப்பதாகும். இதனால் செலவுகள் மற்றும் நோயாளியின் சிரமங்களும் குறைகின்றது. இத்தகைய சத்திர சிகிச்சைகள் எல்லா நோயாளிகளுக்கும் செய்யப்படுவதில்லை. அதனைச் செய்வதற்கு அத்தியவசியமான சில நோயாளர்கள் உள்ளனர். நோயாளி நல்ல சுயநினைவுடன் இருந்தால் மட்டுமே இதை வெற்றிகரமாக செய்ய முடியும். ஏனெனில் சத்திரசிகிச்சை முழுவதும் நோயாளி எங்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வகையான சத்திர சிகிச்சை செய்யப்படுவது மூளையில் கட்டி, புற்று நோய், இரத்த உறைவு, சீழ் கட்டி போன்றவை மூளையின் முக்கிய இடங்களுக்கு அருகில் அமைந்திருக்கும் போதுதான், ‘Awake Craniotomy’முறையில் சத்திர சிகிச்சை செய்வது சாதகமானதாக அமையும்.
சத்திர சிகிச்சையின் போது, மண்டையோட்டை அகற்றி உள்ளே சென்ற பிறகு, மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒரே மாதிரியாக இருக்கும். சத்திரசிகிச்சையின் போது கட்டியை வேறுபடுத்தி அடையாளம் கண்டு கொள்வதற்கு நல்ல அனுபவம் இருக்க வேண்டும், ஏனெனில் இதுபோன்ற அனைத்து கட்டிகளின் வடிவமும் நிறமும் ஒரே மாதிரியாக இருப்பதனாலாகும். முன்னரே பெற்றுக் கொண்ட எம். ஆர். ஐ பரிசோதனை மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகள் போன்ற முறைகள் மூலம் இந்தக் கட்டியைக் கண்டறியலாம்.
இந்த சத்திரசிகிச்சையின் போது, நோயாளியை அதற்காக பயிற்சியளிக்க வேண்டி வரும். தான் சுயநினைவுடன் இருக்கும் போதுதான் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பது நோயாளிக்குத் தெரியும். இதன் காரணமாக, நோயாளி முதலில் பயப்படுவார். சத்திரசிகிச்சைக்கு முன், அந்த நோயாளிக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, இரண்டு பயிற்சி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. அதேபோன்று சத்திரசிகிச்சை கூடம் மற்றும் வைத்தியசாலை வைத்திய குழுவினர் நோயாளிக்கு நெருக்கமாக்கப்படுவர். நாம் கேள்விகளைக் கேட்டும் மற்றும் புத்தகங்களை படங்களுடன் முன்கூட்டியே காண்பித்தும் பழக்கப்படுத்த வேண்டும். மூளை தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே இந்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஏனெனில் உணர்வுப் புள்ளிகளின் செயல்பாட்டைச் சரிபார்ப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும் என்பதனாலாகும். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் மதுசங்க கோமஸ், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஹன் பாரிஸ், மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் லெவன் காரியவசம், மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் விஷாகா கெர்னர் ஆகியோர் மருத்துவக் குழுவில் பங்கேற்றனர்.
“இப்போது எனக்கு முன்னர் இருந்ததை விடவும் சுகம் கிடைத்திருக்கின்றது. 12ம் திகதி டிக்கட் வெட்டி வந்தேன். இப்போது எனக்கு எந்த உடல் உபாதையும் இல்லை. அவர்கள் உலகில் வாழும் கடவுள்கள். சொல்வதற்கு வார்த்தைகளில்லை…..” என்று சமன் ஜயசிங்க கூறினார்.
அவரது அறுவைச் சிகிச்சையின் போது அவர் வரைந்த தாமரை இன்னும் பலரை ஆச்சரியப்படுத்துகிறது, ஏனெனில் அதற்குள் இருப்பது எமக்குத் தெரியாத சக்தி அல்லாமல், மனித இயக்கத் திறனுக்கும் மனதுக்கும் இடையிலான தொடர்பாகும். இன்று, மருத்துவத் துறை அதையெல்லாம் பாதுகாத்துக் கொண்டு வெகுதூரம் சென்றுவிட்டது.
சுபாஷினி ஜயரத்ன தமிழில் - எம். எஸ். முஸப்பிர்