* 10 வீதத்திற்கும் குறைந்த வட்டியில் பத்து கோடி கடன் தேவையாம்.
* கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை முச்சக்கர வண்டி திட்டத்தை அங்கீகரித்தாலும் சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை அரச மற்றும் தனியார் வங்கிகள் வழங்கவில்லை.
* ஒரு கிலோ மீற்றருக்கான செலவு 3/- ரூபாய் மட்டுமே.
* 800 கிலோ ஏற்றக்கூடிய மின்சார முச்சக்கர லொறியும் உற்பத்தி செய்துள்ளார்.
* முதலாவது ஏற்றுமதி ஜப்பானுக்கும், கொரியாவுக்குமாகும்.
இலங்கைக்கு இந்தியாவிலிருந்து முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்து கொள்கலனிலிருந்து இறக்கப்படுவது மடபாத்த பிரதேசத்திலாகும். இந்தியாவிலிருந்து கொள்கலன்களில் கொண்டு வரப்படும் முச்சக்கர வண்டிகள் அங்கு இறக்கப்படுகின்றன. எனினும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இலக்ட்ரோனிக் முச்சக்கர வண்டிகள் கொள்கலன்களில் ஏற்றப்படுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட்டுப் போனோம். இதனை நாம் கண்டது மில்டன் மோட்டர்ஸ் முச்சக்கர வண்டிகளை உற்பத்தி செய்யும் இடத்துக்கு முன்பாகவாகும். மில்டனை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகப் படுத்துவது நாங்கள்தான்.
“இந்த முச்சக்கர வண்டிகள் மாதிரிகளாக ஜப்பானுக்கு அனுப்பப்படுகின்றன. நண்பர் ஒருவர் மூலமாக எமக்கு ஜப்பானுக்கு இலக்ட்ரோனிக் முச்சக்கர வண்டிகளுக்கான ஓடர் கிடைத்தது. அவர்கள் கேட்ட உதிரிப் பாகங்களைப் பொருத்தி ஜப்பானுக்கு ஏற்ற வகையில்தான் இந்த முச்சக்கர வண்டிகள் இரண்டையும் புதிதாகத் தயாரித்தோம்”
இந்த முச்சக்கர வண்டிகள் பொதுப் போக்குவரத்துக்காக அல்லாமல், மருத்துவமனை கட்டமைப்புகளுக்குள், கொள்கலன் யார்டுகளினுள் மற்றும் அதிவேக மின்சார புகையிரதங்களிலிருந்து ெபாருட்களை இறங்கி பஸ் தரிப்பிடங்களுக்குச் செல்வது போன்ற தேவைகளுக்காக ஜப்பான் நாட்டினால் ஆர்டர் செய்யப்பட்டதாக மில்டன் கூறினார்.
மில்டன் மேலும் நான்கு மின்சார முச்சக்கர வண்டிகளை கொரியாவுக்கு அனுப்புவதற்காக ஒரு கொள்கலனில் ஏற்றினார். இலங்கையின் மின்சார முச்சக்கர வண்டிகளைத் தயாரிப்பது பற்றிய கட்டுரை ேலக்ஹவுஸ் நிறுவன பத்திரிகைகளில் வெளியானதையடுத்து, கொரியாவில் சிறிது காலம் தங்கி கொரியாவில் மின்சார முச்சக்கரவண்டி பற்றி ஆய்வு செய்யும் வாய்ப்பு மில்டனுக்கு கிடைத்தது.
“பீ.ஜீ.எனர்ஜி என்ற கொரியன் கம்பனிக்குத்தான் இந்த முச்சக்கர வண்டிகளை அனுப்புகிறேன். இந்த முச்சக்கர வண்டிகள் கொரியன் திட்டத்தின் பிரகாரம் செசி மற்றும் உடற் பாகங்களை மாற்றி முழுமையாகவே இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து ஆர்டர்கள் வரும்போது நாம் புதிய இயந்திரங்களைக் கூட கொண்டு வர வேண்டும்”
முச்சக்கர வண்டியை தயாரிப்பதற்குத் தேவையான உயர்தர துருப்பிடிக்காத தகடுகளைப் பெறுவதே தனக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பதாகச் சொல்கிறார் மில்டன். மேலும், மற்ற உலோக பாகங்கள், இறப்பர் பாகங்கள், கண்ணாடிகள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களில் பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
“ இலக்ட்ரோனிக் முச்சக்கர வண்டித் திட்டத்துக்குத் தேவையான பத்துக் கோடி ரூபாய் கடன் தொகையை கைத்தொழில் அபிவிருத்திச் சபை அனுமதித்துள்ளது”
“அப்படியானால் அரச துறையின் வங்கிகளும் இந்த கடனை அங்கீகரிப்பதற்கு ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை?” என்று நான் கேட்டேன்.
“பிணையை வைத்துக் கொண்டும் 20க்கும் அதிக வட்டி வீதத்தில் கடன் வழங்கவே வங்கிகள் முயற்சிக்கின்றன. அந்த வீதத்தில் கடன் பெற்று இந்த துறையை முன்னெடுத்துச் செல்ல முடியாது”
வியட்நாமும் கென்யாவும் தங்கள் நாடுகளில் மின்சார முச்சக்கர வண்டி தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக மில்டன் கூறினார். ஜப்பான் மற்றும் கொரியா அந்த நாடுகளில் தயாரிக்கப்படும் மின்சார மோட்டார் மற்றும் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி வசதிகள் காரணமாகவே மின்சார முச்சக்கர வண்டிகளை கோருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
நாம் மில்டனைச் சந்திக்கச் சென்ற முன்னைய காலங்களை விட தற்போது மில்டனின் தொழிற்சாலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் உதிரிப் பாகங்கள் நிறைந்திருந்தன. என்றாலும் மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு தேவையான சட்ட முறைமை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும்.
இலங்கையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணியை விரயம் செய்யக் கூடாது என்கிறார் மில்டன்.
தற்போதைய மில்டனின் தொழிற்சாலை எவ்வித அரச அனுசரணையும் இல்லாமல் 700 இலட்சம் வங்கிக் கடனைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போதுள்ள இயந்திரங்களின் பெறுமதி 25 கோடிக்கும் அதிகமாகும். வங்கி கடன்களுக்காக இலங்கை வங்கி, பேன் ஏசியா வங்கி மற்றும் வெலிபெல் பினான்ஸ் போன்றன மில்டனுக்கு நிதி அனுசரணையினை வழங்கியிருக்கின்றன. முச்சக்கர வண்டிக்கான எந்தவொரு உதிரிப்பாகத்தையும் இறக்குமதி செய்வது தேவையற்றது என மில்டன் கூறினார்.
இலங்கையின் பல பகுதிகளில், சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உதிரிபாகங்களின் நட் மற்றும் போல்ட்களை இறுக்கித்தான் வாகனங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மில்டன் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் முச்சக்கர வண்டிகள் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உற்பத்தி செய்யப்படுவதை உங்கள் கண்களால் பார்க்க முடியும்.
“இந்த மோல்ட்களை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கு கோடிக்கணக்கான நிதி செலவிடப்பட்டிருக்குமே?” எனக் கேட்டோம்.
“இந்த அச்சுகள் அனைத்தும் இலங்கையில் செய்யப்பட்டவை. இவற்றைச் செய்தது லக்மடு இன்ஜீனியரிங். உடற் பாகங்களைச் செய்யும் இந்த பெரிய இயந்திரங்கள் இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்டவையாகும்” என்றார் மில்டன்.
“இப்போதுள்ள பெட்ரோல் முச்சக்கர வண்டியை மின்சார வண்டியாக மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும்?”
“12 இலட்சம் ரூபாய் செலவாகும். புதிதாகவே நாம் தயாரித்துள்ள இலக்ட்ரோனிக் முச்சக்கர வண்டியை 18 இலட்சத்திற்கு விலை நிர்ணயிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்” என்றார் மில்டன்.
“இப்போது இந்த முச்சக்கர வண்டி இந்தியன் முச்சக்கர வண்டியைப் போல துருப் பிடிக்கா விட்டால் அதனை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாதா?” என நான் கேட்டேன்.
“எனக்கு முதலில் தேவையாக இருப்பது நான் பிறந்த இலங்கையில் இந்த முச்சக்கர வண்டியைப் பதிவு செய்து எமது வீதிகளில் பயணிப்பதை கண்ணாரக் காண்பதேயாகும். இதற்கான உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்வதற்கு சலுகை அடிப்படையில் கடன் கிடைக்குமானால் இந்தியா அல்ல உலகில் எந்த நாட்டுக்கும் இந்த முச்சக்கர வண்டியை ஏற்றுமதி செய்ய முடியும். ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் முடியும்”
மில்டனின் புதிய உற்பத்தியாக இருப்பது டிலிவரி முச்சக்கர வண்டி அல்லது சிறிய லொறியாகும். அதில் 800 கிலோ சுமையை இலகுவாகக் கொண்டு செல்லக் கூடிய தட்டு பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு தொன்னுக்குச் சற்று குறைந்த சுமையை ஏற்ற முடியும். அந்த சிறிய லொறியில் ஓரிரண்டு சுற்றுக்கள் பயணித்ததும் எந்தக் குலுக்கலும் இன்றிப் பயணிப்பதை உணர முடியும். பொதுவாக தற்போதிருப்பது டீசலில் இயங்கக் கூடிய டிலிவரி முச்சக்கர வண்டிகளாகும். அதனை ஸ்டார்ட் செய்யும் போது அப்பிரதேசத்திற்கே கேட்கும் வகையில் சத்தம் எழும்.
“இந்த மின்சார டிலிவரி முச்சக்கர லொறியானது ஏனைய இலக்ட்ரோனிக் முச்சக்கர வண்டியைப் போன்றதாகும். ஸ்டார்ட் செய்தாலும் சத்தம் கேட்காது. ஏனைய டீசல் முச்சக்கர வண்டிகளில் சுமை கூடினால் அப்பிரதேசத்திற்கே கேட்கும் வகையில் அதிக சத்தத்துடன்தான் பாரத்தைச் சுமக்கும். இந்த இலக்ட்ரோனிக் முச்சக்கர லொறியில் அவ்வாறு எந்தச் சத்தமும் வராது. சுற்றாடலுக்கு உகந்தது. புகையையும் வெளியிடாது”
இலக்ட்ரோனிக் முச்சக்கர வண்டியின் இதயமாக இருப்பது அதன் சார்ஜ் செய்யக்கூடிய பெட்டரியாகும். பெட்டரி ஒன்றின் சார்ஜ் செய்யக் கூடிய ஆயுட் காலம் இதில் பிரதானமானதாகும். விடயங்களைத் தேடிப் பார்த்த போது சீனா பெட்டரியின் ஆயுட்காலம் 3 வருடங்கள் என்பதை கண்டு கொண்டோம். அதேபோல் கொரியா பெட்டரியின் ஆயுட்காலம் 10 வருடங்களாகும்.
“ஜப்பான் பெட்டரிதான் சிறந்த உத்தரவாதம். 20 வருடங்கள். நிறையப் பேர் கேட்பதும் அதைத்தான்”
உலகின் முச்சக்கர வண்டி சந்தையினுள் முதலில் வெற்றிக் கொடியை நட்டது இத்தாலியாகும். அதன் பின்னர் முச்சக்கர வண்டி வர்த்தகத்தில் மகுடம் சூடியது இந்தியாவாகும். இந்தியா ஆசிய நாடுகளில் மாத்திரமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் கூட Bajaj மற்றும் TVS முச்சக்கர வண்டிகளுக்கான ஏகபோகத்தை உருவாக்கிக் கொண்டது.
எனினும் அந்த ஏகபோகத்துக்கு எதிராக மில்டனின் இந்த மின்சார முச்சக்கர வண்டியின் புரட்சியை நவம்பர் 10, 11 மற்றும் 12ம் திகதிகளில் பிட்டிபனவில் கண்டு கொள்ள முடியும். 2024ம் ஆண்டை இலத்திரனியல் போக்குவரத்து ஆண்டாக மாற்றுவதற்காக, நாட்டில் முதற்தடவையாக அனைத்துத் துறையினரின் பங்களிப்போடு மின்சாரம் மற்றும் இலத்திரனியல் போக்குவரத்து முறைகள் குறித்த தேசிய கண்காட்சி மற்றும் மாநாடு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. 2023ம் ஆண்டின் உலக போக்குவரத்து தினத்துடன் இணைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மின்சார மற்றும் இலத்திரனியல் போக்குவரத்து முறை தொடர்பான தேசிய கண்காட்சி மற்றும் மாநாடு (Green mobility exhibition and conference) நவம்பர் 10, 11 மற்றும் 12ம் திகதிகளில் ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
வஜிர லியனகே தமிழில் - எம். எஸ். முஸப்பிர்