நிலையான அபிவிருத்திக்காக தேசிய போக்குவரத்துக் கட்டமைப்பு மின்சாரத்துக்கு மாற்றப்படப் போகின்றதே, என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன?
போக்குவரத்து, கைத்தொழில், சுற்றாடல் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அமைச்சுக்களையும் ஒருங்கிணைத்து 2024ம் ஆண்டை இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பை டிஜிட்டல்மயமாக்கும், இலத்திரனியல் மற்றும் மின்சாரத் துறைக்கு மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
இது அரசின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு வேலைத்திட்டமா?
இது அரசினால் முன்னெடுக்கப்படும் ஒரு வேலைத்திட்டமல்ல. அரசின் முயற்சி, தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், தனியார் துறையின் சிறப்புப் பங்களிப்பைப் பெற்றுக் கொண்டு போக்குவரத்துத் துறையை செலவு குறைந்த, நம்பகமான, வெற்றிகரமான மற்றும் சுற்றாடல் பாதுகாப்புக்கு உகந்ததாக மாற்றுவது தொடர்பான மக்கள் பங்குபற்றலுடனான வேலைத்திட்டமாகவே இது செயல்படுத்தப்படுகிறது.
இ.போ.சபை உள்ளிட்டபேருந்துகள், புகையிரதம் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனத் துறைக்குரிய பல நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீங்கள் 2024ம் ஆண்டினுள் செய்யப்போகும் முக்கிய மாற்றங்கள் என்ன?
மின்மயமாக்கலில் அறிமுகப்படுத்தப்படும் முக்கிய மாற்றங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முதற்கட்டமாக நாம் போக்குவரத்து திணைக்களத்தை முழுமையாகவே டிஜிட்டல்மயமாக்கும் ‘இ-மோட்டரிங்’ என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். இலங்கையில் நீண்டகாலமாக இந்தத் திணைக்களத்தில் பல்வேறு காலதாமதம், முறைகேடுகள், மோசடிகள், ஊழல்கள் பல இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை அனைத்தையும் தடுப்பதற்குள்ள ஒரே தீர்வு டிஜிட்டல் மயமாக்குவதேயாகும். இதனடிப்படையில் நான் இந்த அமைச்சைப் பொறுப்பை ஏற்பதற்கு சில காலத்திற்கு முன்னர் இருந்த அமைச்சர்கள் ‘இ-மோட்டரிங்’ திட்டத்திற்கு, ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையான முறைகளின் பிரகாரம் விலைமனுக்கோரி அவை வழங்கப்பட்டு அனைத்தும் முடிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு சக்திகளினால் தொடர்ச்சியாகப் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்த இடமளிக்கவில்லை. நீங்கள் அறிந்தவகையில் சுங்கம், உள்நாட்டு இறைவரி, கலால் திணைக்களம் போன்றன பல காலங்களுக்கு முன்னரே டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் அவை பல்வேறு சக்திகளால் செயற்படுத்தப்படுவதற்கு இடமளிக்கப்படவில்லை. நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வேரஹெரவுக்கு கொண்டு செல்லப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படுவதற்கு முன்னர் கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டியிருந்தமையே இந்தத் தாமதத்துக்கு காரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்காததால், இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே அமைச்சரவைக்கு அறிவித்து அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது.
ஹுணுப்பிட்டிய கங்காராம பிரதேசத்திற்கு அருகில் கட்டடத் தொகுதியிலுள்ள சில கட்டடங்களைப் பெற்றுக் கொண்டு ஈ-மோட்டரிங் வேலைத்திட்டத்தை அவ்விடத்திற்குக் கொண்டு செல்ல வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சராக உள்ள அமைச்சர் லசன்ன அழகியவண்ண இதனை பொறுப்பேற்றுள்ளார். வாகனத்தை இறக்குமதி செய்து பதிவு செய்து முடியும் வரை முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் மூலம் வாகனத்தைப் பதிவு செய்யும் புரட்சிகரமான மாற்றத்தை அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவ்வாறான புரட்சிகரமான மாற்றங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கவில்லை. இரண்டாவதாக நாம் எரிபொருள் பாவனைக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைப் பொருத்துதல், உற்பத்தி செய்தல் இறக்குமதி என்பனவற்றுக்காக தனியாருக்கு அதிகபட்ச அரச ஒத்துழைப்பை வழங்குவோம். மூன்றாவது மின்சார வாகனங்கள். இதுவரைக்கும் இலங்கையில் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான தரங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவோம். தற்போது மின்சார முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டு இலக்கத் தகடு வழங்கப்படுகின்றன. புகையிரம் மற்றும் பஸ்களில் டிக்கட்டுக்களை வழங்குவதை ஈ-டிக்கட் முறையின் ஊடாக மேற்கொள்ளவுள்ளோம். அப்போது டிக்கட்டுகள் தொடர்பான வருமான இழப்பும், மோசடிகள் இடம்பெறுவதற்குள்ள வாய்ப்பும் நிறுத்தப்படும். மேல் மாகாணத்தில் 2000 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்கு சர்வதேச விலைமனு கோரப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அடுத்த ஆண்டில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் கார்கள், பேருந்துகள், ரயில்கள் போன்றவை எமக்கு கிடைப்பது நடைமுறை சாத்தியமாகுமா?
நான் அமைச்சர் என்பதால் கனவு காணவில்லை. செய்ய முடியாது எனக் கூறிய பல திட்டங்களை நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்தியிருக்கின்றோம். போக்குவரத்துத் துறையின் இந்த திருப்புமுனை முயற்சிக்கு அனைத்து தரப்பினரது இணக்கப்பாடும் கிடைக்குமானால் 2024ம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முடியும். ஏனென்றால், தற்போது, இந்த நாட்டில் தனித்துவம் வாய்ந்த படைப்பாற்றல் கொண்டவர்கள் தங்கள் சொந்த ஆற்றலால் நாடு பெருமை கொள்ளும் வகையில் மின்சார வாகனங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தற்போது வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கிறார்கள். மின்சார சைக்கிள்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள், மின்சார மோட்டார் கார்கள், மின்சார முச்சக்கர வண்டிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் 15-20 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளனர். அவர்கள் சர்வதேசத்துடன் போட்டி போட்டு வெளிநாட்டுச் சந்தைக்கான வழிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கார் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக நீங்கள் நம்புகின்றீர்களா?
ஒருபோதுமில்லை. இன்னும் ஏராளமான பல பிரச்சினைகள் மீதமிருக்கின்றன. குறிப்பாக வாகனங்கள், உதிரிப்பாகங்கள் இறக்குமதியின் போது அவர்கள் முன்வந்து உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, யூ. என். டீ. பி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து விசேட கடன் திட்டங்களை உருவாக்கி வழங்க வேண்டும்.
எமது நாட்டை மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாற்றுவதற்காக சர்வதேச ஆதரவைப் பெற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம். கொவிட் 19 தொற்றின் பின்னர் யூ.என்.டீ.பி நிறுவனம், யூ.என்.எஸ்கேப் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இது தொடர்பான செயற்பாடுகளில் நான் கலந்து கொண்டேன். அனைத்து நாடுகளும் மிகப் பாரியளவில் நிலையான அபிவிருத்திக்காக எரிபொருள் பாவனையிலிருந்து விடுபட்டு மின்சாரத்தில் அல்லது வேறு சக்தியில் செயற்படும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி முன்னேறிச் சென்றுள்ளன. குறிப்பாக அதிகூடிய மக்கள் வாழும் சீனாவிலும், இந்தியாவிலும் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் வாகனங்கள், புகையிரதங்கள் போன்ற அனைத்தும் வாகனங்களும் விரைவாக மின்சாரத்திற்கு மாற்றப்பட்டன. கொரியா உள்ளிட்ட மற்றைய நாடுகளும் இதில் ஆராய்ச்சி செய்கின்றன. சுற்றுச்சூழல் வேலைத்திட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நிதியங்கள் உருவாக்கப்பட்டு இதற்காக உதவியளிக்கின்றன. 2030-/40ம் தசாப்தத்தினுள் உலகில் உள்ள ஏராளமான நாடுகள் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இலத்திரனியல் மற்றும் மின்சார துறைகளின் பாவனையை விரிவுபடுத்துகின்றன.
நமது நாட்டில் மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி?
குறிப்பாக, வெகுஜன ஊடக அமைச்சர் என்ற வகையில், தேசிய தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு இந்நாட்டு மக்கள் அதிகமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த, குறைந்த விலை மின்சார வாகனங்களைப் பயன்படுத்த முன்வருவதற்கும், அதற்காக அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காக பூரண பங்களிப்பை வழங்குவதற்கும் விசேட பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று தனியார் துறை ஊடகங்களும் இந்த போக்குவரத்துக் கட்டமைப்பின் திருப்புமுனைக்கான பயணத்திற்கு பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.
அந்த மாணவர்களுக்கும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கண்காட்சியில் செயன்முறை அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமா?
ஆம். கல்வி அமைச்சுடன் ஒருங்கிணைந்து, தொழில்நுட்பம் கற்கும் அனைத்து மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் நவம்பர் மாதம் 10ம் திகதியிலிருந்து 12ம் திகதி வரையில் இடம்பெறவுள்ள கண்காட்சியைப் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டின் இறுதியில் நடைபெறும் இந்த சர்வதேச இலத்திரனியல் மற்றும் மின்சாரக் கண்காட்சியின் மூலம் போக்குவரத்துத் துறையில் ஒரு பெரிய சவாலை வெற்றிகரமாக முறியடிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்.
சுபாஷினி ஜயரத்ன தமிழில் - எம். எஸ். முஸப்பிர்