ஒரு நாட்டின் இதயம் கிராமங்கள் என்றுதான் அந்நாட்களில் பலரும் கூறுவதுண்டு. அவ்வாறான கூற்றுக்கு காரணங்கள் இல்லாமலில்லை. ஏனெனில் நகரங்களைப் பார்க்கிலும் கிராமங்களில் சிறப்பான விடயங்கள் ஏராளமாக இருக்கின்றன.
நகரங்களில் வாழ்கின்ற நாகரிக மனிதர்கள் கிராமத்தைப் பார்த்து ‘பட்டிக்காடு’ என்று பரிகசித்துப் பேசுவதுண்டு. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருவோரை ‘பட்டிக்காட்டான்’ என்று கூறுகின்ற வழக்கம் இன்றும் நிலவுகின்றது. ஆனாலும் அந்தப் பட்டிக்காடுதான் உண்மையில் நாட்டின் இதயமாக இருந்து கொண்டிருக்கின்றது.
நகர மக்களுக்கு உணவுகள் அத்தனையையும் தருபவர்கள் கிராமத்தவர்களாவர். ஒட்டுமொத்த நாடுமே முடங்கிப் போகுமானால் கிராமத்து மக்களுக்கு உணவுக்குப் பிரச்சினை இருப்பதில்லை. ஆனால் கிராமங்களிலிருந்து உணவு கொண்டுவரப்படுவது தடைப்பட்டுப் போவதால் நகரமக்கள் பட்டினியை எதிர்நோக்கும் அவலம் ஏற்படுமென்பதை கொவிட் பெருந்தொற்று காலத்தின் போது நாம் சந்தித்தோம்.
உணவுத்தேவை ஒருபுறம் இருக்கட்டும்! கொழும்பு உட்பட நாட்டின் அத்தனை நகரங்களையும் எடுத்துக் கொண்டோமானால் ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும். நகரங்களில் வாழ்கின்ற கல்வியியலாளர்கள், தொழில்வாண்மை நிபுணர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், வர்த்தகப் பெரும்புள்ளிகள் எல்லோரையும் எடுத்துநோக்கினால் அவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்து சேர்ந்தவர்களாவர்.
‘நகரங்களை சிறப்பாக இயக்குவதற்கு கிராமங்களில் இருந்துதான் விற்பன்னர்கள் வர வேண்டியுள்ளது’ என்ற யதார்த்தம் இங்கே புரிகின்றது. அதுமாத்திரமன்றி தற்காலத்தில் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை எடுத்துக் கொண்டால் கிராமத்து மாணவர்களே சாதனை படைக்கின்றார்கள்.
சமுதாய ஒற்றுமை வாழ்வுக்கும், தன்னிறைவுப் பொருளாதாரத்துக்கும், மனநிம்மதிக்கும், விவசாய சுயபொருளாதாரத்துக்கும் சிறப்பாக விளங்கி வருகின்ற கிராமங்களிலிருந்து தற்போது மக்கள் நகரை நோக்கி அதிகளவில் இடம்பெயரத் தொடங்குகின்றார்களென்றால் அதற்கான காரணங்களை ஆராய்ந்து கிராமத்து மக்களின் மனக்குறைகளைத் தீர்க்க வேண்டியது மிக அவசியம்.
இலங்கையில் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் சமீபத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் நகர்ப்புற சனத்தொகை 44.57 வீதமாக உயர்வடைந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, நகர்ப்புறங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் எண்ணிக்கை 18.2 வீதமாகக் காணப்பட்டது. இந்த 10 ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் நகர்ப்புற சனத்தொகை 44.57 வீதமாக உயர்வடைந்துள்ளது.
நாட்டின் இதயங்களுக்கு நடந்ததென்ன? விவசாயம் மீது கிராமத்து மக்களுக்கு நம்பிக்கை இழந்து விட்டதா? கிராமங்களில் சுயதொழில்வாய்ப்புகள் குறைந்து விட்டதா? இவ்விடயத்தை அலட்சியப்படுத்த முடியாது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கிராமத்து மக்கள் மீது பார்வையைச் செலுத்த வேண்டியது அவசியம்!