இஸ்ரேல்-, ஹமாஸ் போர் தீவிரத் தன்மையை நோக்கி நகர்வதாகவும் மீண்டும் ஒரு உலக போருக்கு தயாராவதாகவும் உரையாடப்படுகிறது. அமெரிக்கா இரு விமானம் தாங்கிய போர்க் கப்பல்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக அப்பிராந்தியத்திற்குள் நகர்த்தியுள்ளது. அதேநேரம் யெமனை அண்டிய கடற்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஈரானிய ஆதரவு போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் ஹமுத்தி போராளிகளால் தரைவழியாக வீசப்பட்ட ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்ரேலிய விஜயத்தை அடுத்து பிரித்தானியப் பிரதமரது விஜயம் இஸ்ரேல், -ஹமாஸ் போரை தீவிரப்படுத்தியுள்ளது. இக்கட்டுரை போரின் நகர்வுகளை தேடுவதாக அமையவுள்ளது.
கடந்த 17.10.2023 அன்று காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை மேற்கொண்டது. அத்தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. என்னும் இடிபாடுகளில் கொல்லப்பட்ட பொது மக்கள் சிக்கியிருப்பதாக தெரியவருகிறது. அன்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இஸ்ரேலிய விஜயம் திட்டமிடப்பட்டிருந்த போது ஏன் இஸ்ரேல் காசா மருத்துவமனை மீது தாக்கியது என்பது பிரதான கேள்வியாகும். அத்தாக்குதல் பாரிய நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியதுடன் உலகளாவிய ரீதியில் மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது. அராபிய நாடுகளில் கொந்தளிப்பும் போருக்கான அறைகூவல்களும் ஏற்படத் தொடங்கியுள்ளன. இவற்றை எல்லாம் மீறிக் கொண்டு இஸ்ரேல் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய திட்டமிட்ட போதே அரபுத் தலைவர்களுடன் உச்சி மகாநாடொன்றையும் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அத்தகைய சந்திப்பில் போரை முடிவுக்கு கொண்டுவரவும் குறைந்தபட்சம் இஸ்ரேல் மீது போரை ஏனைய அராபிய நாடுகள் மேற்கொள்ளாதிருக்கவும் முயல்வதாக அமைந்திருந்தது. ஆனால் அவற்றை எல்லாம் தகர்த்து இஸ்ரேல் தனது நலனுக்கும் கட்டுப்பாட்டுக்குள்ளும் போரை நிகழ்த்துவதற்கு ஏற்பவே காசா மருத்துவமனை மீதான தாக்குதலை நடாத்தியுள்ளது. காசா மீதான தாக்குதலால் அமெரிக்க ஜனாதிபதியின் நகர்வுகள் அனைத்தும் கலாவதியாகின. அமெரிக்கா போருக்கு உதவுவதிலும் ஆயுத தளபாடங்களை வழங்குவதிலும் தொழில்நுட்ப நெருக்கடியை கையாளவும் சர்வதேச அளவில் எழுந்துள்ள நெருக்கடியை தணிக்கவும் மட்டுமே இஸ்ரேலுக்கு தேவைப்படுகிறது. அதனைக் கடந்து அமெரிக்காவின் விருப்புக்கு அல்லாது யூதர்களின் விரும்புக்கு அமைவாகவே போரை நடத்த திட்டமிடுகிறது. அல்லது அமெரிக்கா தனது உலகளாவிய முகத்தை பாதுகாத்துக் கொண்டு போரை இஸ்ரேல் நிகழ்த்த அனுமதியளித்துள்ளதாகவே விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இப்போர் இஸ்ரேலிய-, அமெரிக்க கூட்டுத் திட்டமாகவே உள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர், அமெரிக்க இராணுவத் தளபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி என அமெரிக்க அதிகார வர்க்கம் ஒருபுறம் அணிவகுக்க மறுபக்கத்தில் அமெரிக்க போர்க் கப்பல்களும் ஆயுத தளபாடங்களும் அணிவகுத்து இஸ்ரேலின் போரை வழிநடத்துகின்றன. இதே நேரம் மேற்குலகம் இப்போரில் இஸ்ரேலை ஆதரிப்பதென்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்திய பூர்வீகத்தைக் கொண்ட பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் இந்தியப் பிரதமர் போன்றே இஸ்ரேலை ஆதரிக்கும் முடிவை உடனடியாக அறிவித்திருந்தார். அவரது போர்க் கப்பல்களும் தயாராவதாகவே தெரியவருகிறது. இதனால் அமெரிக்கா உட்பட மேற்குலகத்தினும் இஸ்ரேலினதும் கூட்டுத் திட்டமிடலாகவே இப்போர் காணப்படுகிறது. ஹமாஸ் அமைப்பைப் பொறுத்தவரை தீவிர ஊடுருவல் தாக்குதலை இஸ்ரேலிய மண்ணில் மேற்கொண்டாலும் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் பயங்கரவாதமாகவே விமர்சிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேலியர் மேற்கொள்ளும் அரச பயங்கரவாதத்தை எந்த தாராளவாதியும் கண்டு கொள்ளாத நிலையையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கடந்த 70 ஆண்டுகால பலஸ்தீனர்களது உளவியலே யூதர்கள் மீதான போராக மாறியுள்ளது. அது உலகத்தின் கண்களுக்கு பயங்கரவாதமாகவே அமையும். ஆனால் தினம் தினம் பலஸ்தீனர்கள் கொல்லப்படும் போது உலகம் அதற்கு தீர்வையோ அல்லது இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தையோ கண்டுகொள்ளவில்லை. மாறாக மறைமுகத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆதரித்தே நின்றது. தற்போதும் உலகத்திற்கு சமாதானம் பேசுவதாகக் கூறிக் கொண்டு போரை. இஸ்ரேலுக்கு சாதகமாக ஆக்குவதில் கவனமாக நகர்கிறது. அமெரிக்காவே போரின் நகர்வுகளை இஸ்ரேலுக்கு சாதகமாக மாற்றிவருகிறது. காரணம்
ஒன்று, அராபிய நாடுகளது அண்மைய போக்குகள் அனைத்தும் ரஷ்யாவையும், சீனாவையும் சார்ந்ததாக மாறிவருகிறது. நீண்டகால விரோதிகளான சவுதி அரேபியாவையும் ஈரானையும் ஒன்றிணைப்பதில் சீனா வெற்றிகண்டது. அவ்வாறே ஈரான், ரஷ்யாவுக்கு ஆளில்லாத விமானம் உட்பட ஆயுத தளபாடங்களை அமெரிக்க எச்சரிக்கையையும் மீறி வழங்கி நேட்டோவின் உக்ரைன்-ரஷ்யப் போரை தோல்வி நிலைக்கு கொண்டு செல்ல உதவியது. ரஷ்யாவுடன் இணைந்து ஓபெக் எண்ணெய்வள நாடுகள் விலையையும் உற்பத்தியையும் தீர்மானித்துக் கொண்டமை போன்ற பல விடயங்கள் மேற்குக்கு எதிரானதாக அமைந்திருந்தன. அதனால் மேற்காசியப் பிராந்தியம் முழுவதும் ஒரு போரை நிகழ்த்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் மேற்குக்கும் காணப்பட்டது.
இரண்டு, உக்ரைன் -ரஷ்யப் போர், மேற்குக்கு சுமையாகவும் வெல்லப்பட முடியாததாகவும் அமைந்திருந்தது. அதிலிருந்து அமெரிக்கா எப்படியாவது வெளியேற வேண்டும் எனக் கருதியது. அதற்கு தாய்வான் — -சீன போர் அவசியமானதாக அமைந்த போதும், அதனை சீனா வெற்றிகரமானதாக கையாண்டிருந்தது. அதனால் அமெரிக்காவுக்கும் மேற்குலகத்துக்கும் இஸ்ரேல், -ஹமாஸ் போர் அதிகம் இலாபகரமானதாக அமைந்திருக்கிறது. ஐரோப்பா பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் போது போர் மேற்குலகத்துக்கு வாய்ப்பானதாக மாறியுள்ளது.
இதில் போர் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடியை திசை
திருப்புவது என்ற அடிப்படையில் இலாபகரமானதாகும். அவ்வாறே மேற்காசியாவில் குவிந்துள்ள வளங்களை மீளவும் ஒருதடவை சுரண்டுவதற்கு வாய்ப்பான சூழலை போர் தந்திருப்பதாகவே மேற்குலகம் கருதுகிறது.
மூன்று, கீழைத்தேச நாடுகளின் எழுச்சியும் பொருளாதார பாய்ச்சலும் மேற்குலகத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது. குறிப்பாக பிறிக்ஸ் விரிவாக்கம் மேற்காசியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளைக் கொண்டதாக அமைந்துள்ளதனால் மேற்குலகத்துக்கு அதிக நெருக்கடி உருவாகும் நிலை ஏற்பட்டிருந்தது. அதனை இப்போர் குழப்புவதுடன் போரின் பின்னான உலகம் மேற்கின் ஆதிக்கத்திற்குள் மீளவும் உலகத்தை நகர்த்த உதவுவதாக அமையும். அதற்கு அமைவாகவே போரை மேற்குலக நாடுகள் முழுமையாக கையாள ஆரம்பித்துள்ளன. இஸ்லாமிய நாடுகளை முழுமையாக அடிமைப்படுத்துவதும் அந்த நாடுகளின் வளங்களை கையகப்படுத்துவதுடன் ரஷ்யா-, சீனாவின் எழுச்சியை முடிவுக்கு கொண்டுவர முடியுமென கருதுகின்றன. அதற்கான களமாகவே ஹமாஸ்- இஸ்ரேல் போர் உள்ளது.
நான்கு, இஸ்ரேலிய-, ஹமாஸ் போர் இராணுவ ரீதியான திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியதாகவே அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக ஈரானின் அணுவாயுத கனவை மீளவும் அடியோடு தகர்த்துவிட போரை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிடுகிறது. அதற்கான நகர்வுகளை அராபிய உலகம் முழுவதும் முடுக்கிவிடுவதில் காசா மருத்துவ
மனை மீதான தாக்குதல் முக்கியமானதாக அமைந்திருந்தது. இஸ்லாமியர்கள் கொந்தளித்து போரை தீவிரப்படுத்த முயலுவார்கள்.
அது இஸ்ரேலுக்கு மேற்காசியா முழுவதையும் தனது நிலப்பரப்பில் இழுத்து அழிப்பதற்கு உதவுவதாக அமையும்.
அதனையே தற்போது கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. கடந்த போர்களிலும் இஸ்ரேல் அத்தகைய உத்தியைக் கையாண்டே அராபியர்களது வலுவை முடிவுக்கு கொண்டு வந்தது. அதனை மீளவும் ஒருதடவை மேற்கொள்ள ஹமாஸ், -இஸ்ரேல் போர் வாய்ப்பினைக் கொடுத்துள்ளது. இத்தகைய சூழலில் இஸ்ரேலின் மருத்துவ
மனைத் தாக்குதலுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமெரிக்காவின் நகர்வுகளை கண்டித்ததுடன் சிரியாவில் ரஷ்யா அமைத்துள்ள கடற்படைத் தளத்தை இராணுவ ரீதியில் பலப்படுத்தி வருகின்றார்.
ரஷ்யா நீண்டதூர குறுந்தூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் கடற்படைக் கப்பல்கள் என்பவற்றை அதிகம் நகர்த்தி வருகிறது. மறுபக்கத்தில் புட்டினது சீன விஜயம் அதிக முக்கியத்துவம் பெறுவதாக அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பலஸ்தீன ஜனாதிபதி முகமட் அபாஸை (யூன்,13,2023) சீனா அழைத்து கௌரவித்ததுடன் பலஸ்தீன சுதந்திர நாடு அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தது. சீனா பலஸ்தீன -இஸ்ரேலிய இரு நாட்டுத் தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அத்தகைய தீர்வுத் திட்டத்தையே ஐக்கிய நாடுகள் சபை 1948ஆம் ஆண்டு முன்வைத்ததென்பது நினைவு கொள்ளத்தக்கது.
எனவே, இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பிக்க முன்பு காசா நிலப்பரப்பை முழுமையாக தாக்கிவிட்டு நுழைய திட்டமிடுவதாகவே தெரிகிறது. தரைவழித் தாக்குதலை திட்டமிட்ட படி மேற்கொள்ள முடியாத நிலைக்குள் இஸ்ரேலியப் படைகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. அனைத்து எல்லைகளையும் நோக்கி இஸ்ரேல் தாக்குகின்றது. ஹமாஸ் அமைப்புடன் ஈரான் ஹமுத்தி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் காணப்பட்டாலும் முழுமையாக போர் அராபிய உலகத்திடம் கருக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. சீனா, ரஷ்யாவின் நகர்வுகள் நேரடியாக போரில் ஈடுபடுவதைவிட ஆயுத தளபாடங்களை வழங்குவதிலேயே அதிக கவனம் கொண்டதாக அமையவுள்ளது. இப்போர் பிராந்தியத்திற்குள் நிகழ்வதாகவே தெரிகிறது. மேற்குலகம் தனது எல்லைக்கு போரை நகர்த்தாமல் போரின் எல்லையை நோக்கி தனது படைகளையும் ஆயுத தளபாடங்களையும் நகர்த்துகிறது. இஸ்ரேலும் IRON DOME க்குப் பதிலாக IRON BEAM I ஜ நிறுத்தியுள்ளது. போரின் எல்லைகள் இஸ்லாமியர்களது இருப்புக்கு அதிக அச்சுறுத்தலாக மாறவுள்ளன.