பாராளுமன்றம் என்ற உயரிய சபை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகவும் படிப்பினைகளை வழங்க கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரதும் எதிர்பார்ப்பு.
அதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாகிறது.
அந்த வகையில் அண்மையில் இடம்பெற்று வரும் சில வார்த்தைப் பிரயோகங்கள் அதற்கு மாறானவையாக காணப்படுவதைக் குறிப்பிட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், அடிமைத்தனங்கள், பெண்களை துன்புறுத்துதல், பாராளுமன்ற தேர்தல் உட்பட தேர்தல்களில் பெண்களுக்கான விகிதாசாரத்தை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அவ்வப்போது குரலெழுப்பப்பட்டு வருகின்றது.
குறிப்பாக அவற்றுக்கான சர்வதேச தினங்கள் அண்மித்து வரும் நாட்களில் அந்த குரல்கள் சற்று மேலோங்கி நிற்பதையும் அது தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் துண்டுப் பிரசுர விநியோகங்கள் என முன்னெடுக்கப்படுவதும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பாராளுமன்றத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெண்கள் தொடர்பான விவகாரங்கள் சம்பந்தமாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களால் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.
எனினும் அண்மைக்காலமாகவே சபையில் பாராளுமன்ற உறுப்பினர்களால் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறாக பேசுவதும் ஒரு உயரிய சபையில் பிரயோகிக்கக் கூடாத வார்த்தைப் பிரயோகங்களை முன்வைப்பதும் இடம்பெற்று வருகின்றது.அவ்வாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதற்கு காரணமானவர்களும் தூண்டுபவர்களும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவர்கள்.
குறிப்பாக பாராளுமன்றத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விசேட அதிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக பாராளுமன்ற பார்வையாளர்கள் கலரியில் அமர்ந்து பாராளுமன்ற செயற்பாடுகளை பார்வையிடுவது வழமையானது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாடசாலையில் கீழ் வகுப்பு மாணவர்கள் செயல்படுவதைப் போன்று மிக மோசமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அமைவதை எத்தகைய காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாராளுமன்றம் போன்ற உயரிய சபைகள் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாகவும் படிப்பினைகளையூட்டுவதாகவும் அமைய வேண்டும். அவ்வாறான உயரிய சபையில் சிறுபிள்ளைத்தனமாக மிக மோசமான வகையில் செயற்படுவது கண்டிக்கத்தக்கது. அவ்வாறான செயல்கள் மாணவர்களையும் ஏனைய பார்வையாளர்களையும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் என்பதும் குறிப்பிட வேண்டியது.
அத்துடன் வெளிநாட்டு ராஜதந்திரிகள், அல்லது சர்வதேச அதிதிகள் அதிதிகளுக்கான கலரியில் அமர்ந்திருக்கும் போது இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டால் அது எமது நாட்டுக்கும் எமது நாட்டின் பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தியையே ஏற்படுத்த முடியும். அத்துடன் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக வருபவர்கள் இத்தகைய தவறான சிந்தனைகளைக் கொண்டு செல்லக்கூடாது. அது தவிர்க்கப்பட வேண்டும்.
பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் உரையாற்றும் போது “நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும், வார்த்தை பிரயோகங்கள் அதில் மிக முக்கியம்” என்றும், ஏனென்றால் பாடசாலை மாணவர்களும் களரியில் அமர்ந்துள்ளார்கள் என்று குறிப்பிடுவதுண்டு.
எனினும் வெறும் வாய்ச்சொல் வார்த்தைகளாக மட்டுமே அவை அமைந்து விடுகின்றன. செயற்பாடுகளில் மாற்றங்கள் இதுவரை இடம்பெறவில்லை என்றே சொல்லலாம்.
அண்மையில் பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் பாராளுமன்றத்திற்கு வெளியில் பெரிதாக பேசப்பட்டதுமான அவ்வாறான ஒரு செயற்பாட்டை இங்கு குறிப்பிட முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது உரையின் போது பெண் பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஒருவரை ‘பெல்லி’ (பெட்டை நாய்) என்ன குறிப்பிட்டு தவறான சொற்பிரயோகங்களை பயன்படுத்தியதைக் குறிப்பிட வேண்டும்.
அதே வேளை, அதற்கு பதில் வழங்கும் வகையில் முழு சபையின் கவனத்தையும் திசைதிருப்பும் வகையில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பிரயோகித்த வார்த்தைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
அவ்வாறு தன்னை தவறான வார்த்தையில் திட்டிய பாராளுமன்ற உறுப்பினருக்கு அவர் பதில் கொடுக்கையில் ” பெண்களை அவமரியாதையாக எவர் பேசினாலும் அவர்களை கன்னத்தில் அறைவேன்.” என பகிரங்கமான எச்சரிக்கையொன்றை அவர் சபையில் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக இப்போது இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் இடையில் சர்ச்சைகள் இடம்பெறுவது வழமையாகி விட்டது.
ரஞ்சித் மத்தும பண்டார உட்பட அந்த கட்சியின் உறுப்பினர்கள் பலர் எப்போதும் “தமது கட்சியிலிருந்து, தமது கட்சியின் புண்ணியத்திலேயே டயானா கமகே அரசாங்கத்தின் பக்கம் சார்ந்து இராஜாங்க அமைச்சராக வலம் வருவதாகவும் அங்கிருந்து கொண்டு தாம் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு காரணமான கட்சியைத் தூஷிக்கின்றார் என்றும் குறிப்பிடுவதுண்டு.
அன்றும் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களே இடம்பெற்றன. டயானா கமகே உரையாற்றுகையில் ஏதோ தவறாக சொல்லப் போக, அதற்குப் பதிலளித்த ரஞ்சித் மத்தும பண்டார எம்பி ஆத்திரமடைந்து டயானா கமகேயை யார் கணக்கெடுப்பது என்ற தொனியில் கடுமையாகப் பேசிவிட்டார்.
அந்த சமயம் சபையில் இருக்காத டயானா கமகே, அடுத்த நாள் அமர்வில் சபையில் ரஞ்சித் மத்தும பண்டாரவை விளாசு விளாசென விளாசி விட்டார். அதுமட்டுமன்றி இந்த சபையிலேயோ அல்லது வேறு எங்கேயோ எவரும் பெண்களை அவமரியாதையாக பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் அவர் எவர் என்றும் பாராமல் நான் அவருக்கு கன்னத்தில் அறைவேன். அதற்கும் நான் தயங்கப் போவதில்லை. என்று கூறினார்.
பொதுவாகவே டயானா கமகே பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அது முழு சபையையும் கவர்வதாகவும் வித்தியாசமான விடயங்களை அவர் முன்வைக்கும் போது அவற்றுக்கு கடுமையான அல்லது எதிர் மாறான விமர்சனங்கள் வருவதாகவும் அமையும்.நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் கஞ்சா பயிர்ச் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கலாம் என்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அணிசேர்க்கும் வகையில் முக்கியமாக உல்லாசப் பிரயாணிகளை கருத்திற்கொண்டு இரவு வர்த்தகங்களை ஊக்குவிக்கலாம் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சபையிலும் வெளியிலும் அவர் யோசனைகளை முன் வைத்து வந்துள்ளார். இன்றும் கூட அது தொடர்பில் பலரும் விமர்சனங்களை முன்வைப்பது தொடர்கிறது.
சில வேளைகளில் அவரது யோசனைகளை தவறாக புரிந்து கொண்டுள்ள சிலர் அவரது யோசனைகளை கொச்சைப்படுத்தி விமர்சித்து வருவதும் இடம்பெற்று வருகிறது. இந்த தகாத சொற்பிரியோகங்கள் இப்போதைக்கு பாராளுமன்றத்தில் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.