ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமைக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பல அரசியல் கட்சிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீ.ல.சு.கட்சி, ஐ.ம.மு, ரிஷாத் பதியுதீனின் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனர். அவர்களின் பாராளுமன்ற பதவிகளையும் இவ்வாறு ஒழிக்க முடியுமா? என்பது பலராலும் எழுப்பப்படும் ஒரு கேள்விஆகும்.
அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நீக்குவதற்கு பல அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். முதலாவதாக, சம்பந்தப்பட்ட கட்சியின் அரசியலமைப்பின் மூலம் கட்சி உறுப்பினருக்கு எதிரான நடவடிக்கைக்கு வலுவான, குறித்தொதுக்கப்பட்ட ஓர் ஏற்பாடு காணப்படல் வேண்டும். இரண்டாவதாக, கூறப்பட்ட ஏற்பாட்டின்படி முறைசார்ந்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளல் ஆகியன இயற்கை நீதியின் சட்டத்தின்படி (காரணவிளக்கம் கூறுவதற்கான வாய்ப்பு) அவர்களுக்கு உள்ளதா? என்பது பற்றி ஆகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை யாப்பு மூலம் உத்தியோகபூர்வமாக ஆவணப்படுத்திய ஒரு முன்னணிக் கட்சியாகும். ஐ.தே.க.யாப்பின்படி, கட்சியினால் உறுப்புரிமையை ஒருதலைப்பட்சமாகக்கூட தடைசெய்ய முடியும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள ஏற்பாடுகள் முஸ்லிம் காங்கிரஸைப் போன்று பலமானவை அல்ல. ம.ஐ.முன்னணியின் 32 பக்கங்களைக் கொண்ட யாப்பில் கிட்டத்தட்ட அத்தகைய முறையான ஏற்பாடுகள் காணப்படவில்லை. ஜே.வி.பி. இற்கு உறுப்புரிமை தொடர்பில் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதன் யாப்பு அனுமதியளிக்கிறது. ஸ்ரீ.ல.சு. கட்சியின் யாப்பு தற்போது நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களை நீக்குவது இலகுவானதல்ல.
62 பக்கங்கள் கொண்ட நசீர் அஹமட் தொடர்பான தீர்ப்பில், முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டால், ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நீக்குவது கடினம் அல்ல என்பது வெளிப்படுகிறது. தற்போது 9 அல்லது அதற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள், வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நசீர் அஹமட்டைத் தொடர்ந்து இவர்கள் அனைவரையும் கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு, அதாவது பாராளுமன்றத்தில் இருந்து நீக்குவதற்கு முடியுமா?
அதற்கு ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ என இரண்டு பதில்கள் உள்ளன. இவை, அது தொடர்பான விடயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு இதுவாகும்.
அகற்றுவதற்கான சட்டரீதியான ஏற்பாடு என்ன?
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன்படி, “இராஜினாமா அல்லது பணிநீக்கம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக இடைநிறுத்தப்படும் சந்தர்ப்பத்தில்” மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் காட்டப்பட்டுள்ளன. இதுவேஉறுப்பினர் ஒருவரை நீக்குவதற்கான ஒரேயொரு ஏற்பாடு ஆகும்.
பிரிவு 99 (13) பொருந்தக்கூடிய சட்டத்தின் இரண்டு காலகட்டங்களைக் கொண்டுள்ளது. முதலாவது, கட்சி ஒழுக்கத்தை மீறிய உறுப்பினர்களின் ஆசனங்களைப் பறிப்பதற்கு அரசியல் கட்சிகளினால் முடிந்த 1992 இற்கு முற்பட்ட காலகட்டம்ஆகும்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு (மாகாண சபைகள்) எதிராக வாக்களித்தமையால் ஐக்கிய தேசியக் கட்சியின் சந்திரகுமார விஜேகுணவர்தன (கம்புறுபிட்டிய), தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (ஹக்மன) ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அன்று, கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் (SC 50/87Splமற்றும் SC 51/87 Spl) தோல்வியடைந்த அவர்கள் தமது ஆசனங்களை இழந்தனர்.
1988 மே 24இல் நிறைவேற்றப்பட்ட 14வது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஒற்றைத் தேர்தல் தொகுதி முறைக்கு பதிலாக மாவட்ட விருப்புவாக்கு முறைஅறிமுகம் செய்யப்பட்டது. அங்கு, வேட்பாளர் ஒருவர் மட்டுமல்ல, ஆரம்பத்தில் கட்சிஒன்றுக்கும் வாக்களித்தல் இடம்பெறும். பாராளுமன்ற உறுப்புரிமையுள்ள கட்சிக்கா அல்லது பாராளுமன்ற உறுப்பினருக்கா உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் கட்டளைகளுக்கு கட்டுப்படல் வேண்டும்? மனச்சாட்சிக்கு அமைவாக வாக்களிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்புஇல்லையா? எனும் கோட்பாட்டு வாதம் 14 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னர் வெளிப்படுத்தப்படுகிறது.
சட்டம், பொது அறிவு, தலைமைத்துவம் மற்றும் குற்றப்பிரேரணை:
ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையொப்பமிட்ட லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க, ஜீ. எம்.பிரேமசந்திர ஆகிய அமைச்சர்கள் மற்றும் லக்ஷ்மன் செனவிரத்ன, சந்திரா கங்கந்த, பிரேமரத்ன குணசேகர, சமரவீர வீரவன்னி, வின்சென்ட் பெரேரா ஆகிய 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் 1991.09.06 ஆம் திகதி ஐ.தே.கட்சி செயற்குழுவின் தீர்மானத்தின்படி ஐ.தே.கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
நீக்கப்பட்டமைக்கு எதிராக, மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் (Dissanayake v. Kaleel SC (Special) Nos. 4 முதல் 11/91 வரை) விசாரிக்கப்பட்டன.அந்த வழக்கு, கட்சித் தடைதொடர்பான சட்டபூர்வ நிலைமை பற்றிய ஒரு கலைக்களஞ்சியம்ஆகும். நீதிபதிகளான பெர்னாண்டோ, வடுகொடபிட்டியமற்றும், குலதுங்க ஆகியோர் வழங்கிய தீர்ப்பு 248 பக்கங்களைக் கொண்டிருந்தது.
“தாம் விரும்பியவாறு கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்ய முடியாது. நீதிநிலைநாட்டப்படல் வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்கமுள்ள விடயங்களை முன்வைக்க அவகாசம் வழங்கப்படல் வேண்டும். என்ன குற்றம் என்பதை குற்றப்பத்திரிகை மூலம் தெரிவிக்க வேண்டும். பதில் வழங்குவதற்கு, சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு, விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்” என்பதே காமினி வழக்கின் அடிப்படை ஆகும்.
மறுபுறம், விகிதாசார பிரதிநிதித்துவத்தில் கட்சி பெறும் வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து கட்சி பெற்றுக்கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதால் கட்சி உறுப்புரிமை இழக்கப்படும்போதுபாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டுமென வாதிடப்பட்டது.
ஐ.தே.க “இயற்கை நீதியின் சட்டத்தின்படி செயற்பட்டது” என்பதை ஐ.தே.க சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியதால் லலித்-, காமினி அணியினர் வழக்கில் தோல்வியுற்றனர்.
ஐ.தே.கட்சியின் தலைவர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கான அழைப்புக் கடிதங்களை பதிவுத்தபால் மூலம் அனுப்பியதற்கான பதிவுகள் இருந்த போதிலும், அவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மையான கதை ஆகும்.
ஆர்.பிரேமதாசவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையொப்பமிட்டு பின்னர் தமது கையொப்பங்களை வாபஸ்பெற்ற ஆரியரத்ன ஜயதிலக்க மற்றும் எஸ்.ஏ.முத்துபண்டா ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். உறுப்புரிமை நீக்கப்பட்டமையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதியின் வழக்கறிஞர்களாக லலித் அத்துலத்முதலி உள்ளிட்ட குழு செயற்பட்டது. ஜயதிலக்கமற்றும் முத்துபண்டாஆகியோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து சவால் விட்டவர்களும், இடைநடுவில் மண்டியிட்டவர்களும் ஒரேவிதமான கதிக்கு ஆளாகினார்கள்.
எதிர்க்கட்சி கிளர்ச்சியாளர்களின் கதி:
இதே காலஎல்லையில் (1993), ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஜினதாச நியத்தபால, பிரதீப் ஹபன்கம, திலக் கருணாரத்ன, மேர்வின் சில்வா, ஹேமகுமார நாணயக்கார உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவும் ஏனைய சில உறுப்பினர்களும் கட்சித் தலைமையை மீறிச் செயற்பட்டனர். ஸ்ரீ.ல.சு.கட்சியின் அனுர பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து உயர்கல்வி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவி வகித்தார். ஸ்ரீ.ல.சு.கட்சி இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்கியதுடன் உயர்நீதிமன்றமானது அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை உறுதிசெய்தது. அவர்களை நீக்கும் செயன்முறையின் பலவீனங்களால் அவர்கள் அடைக்கலம் பெற்றனர்.
1993 சிறிமாவோ பண்டாரநாயக்க வழக்கு, பண்டாரகம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் உறுப்பினருமான திலக் கருணாரத்னவினால் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஆகும். ‘தி ஐலண்ட்’, 24.01.1993 ‘லக்திவா’, பிபிசி நேர்காணல்கள் மூலம் ஸ்ரீலசு கட்சியின் ஒழுக்கத்தை பாரதூரமாக மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 31.05.1993 ஆம் திகதி திலக் கருணாரத்ன மாவட்ட நீதிமன்றில் தடை உத்தரவைப் பெற முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.
ஆனால், ஒழுக்காற்று விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை கோரும் தற்போதைய நடைமுறையின் மையமாக திலக்கின் வழக்கு காணப்படுகிறது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்சபை பல வருடங்களாக நடைபெறவில்லை) உரிய நடைமுறையை பின்பற்றாத காரணத்தினால் திலக் கருணாரத்னவை வெளியேற்றியமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, 1994 இற்கு முந்திய காலகட்டத்திலும், இயற்கை நீதிச் சட்டத்தின் படிமுறைகளைப் பின்பற்றுவதா இல்லையா என்பதை உயர்நீதிமன்றத்தை நம்ப வைக்கும் திறன்/இயலாமையின் அடிப்படையிலேயே எம்.பி.க்களை நீக்கும் திறன்/இயலாமை உறுதிசெய்யப்பட்டது என்பது தெளிவாகிறது.
கலாநிதி விமல் விக்கிரமசிங்க மற்றும் சங்கைக்குரிய எல்லே குணவன்சதேரர் உள்ளிட்ட குழுவொன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சிறிசேன குரேயின் தலையீட்டுடன் 1999 ஆம் ஆண்டு ‘புரவெசி பெரமுன’ என தனியாக தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டது. ஆனாலும் அக்கலந்துரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் சரத் அமுனுகம, சுசில் முனசிங்க, நந்தா மெத்தியூ, விஜேபால மென்டிஸ், சூல பண்டார, ஸ்டான்லி கல்பகே உள்ளிட்ட 35 பேர் ‘தேசிய அரசாங்கத்தை அமைப்போம்’ என்று கூறி சந்திரிகா அரசில் இணைந்தனர்.
‘கட்சியில் இருந்து நீக்குவதற்கான காரணம் குறிப்பிடப்படாமை, குற்றப்பத்திரிகை காணப்படாமை’ ஆகியவற்றைக் காரணம் காட்டி 1999 நவம்பர் மாதம் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானதென உயர்நீதிமன்றம் (SC SPL.(E) NO. 4/99) முடிவு செய்தது. சரத் அமுனுகம மற்றும் பலருக்கு எதிராக கரு ஜயசூரிய வழக்குக்குப் பின்னர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு மற்றும் அதன் மூலம் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை நீக்குவதற்கு அரசியல் கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் நசீர் அஹமட் வழக்குத் தீர்ப்பு மூலமாகவே வெற்றியளித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நீக்குவதற்கான முறையியல் என்ன?
ஓர் அரசியல் கட்சி தனதுகட்சி உறுப்பினர் ஒருவரை நீக்கும் முடிவை கட்சியின் பொதுச்செயலாளர் மூலம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் போது தேர்தல் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு அதுபற்றி எழுத்துமூலம் அறிவிக்கும். ஏனெனில், கட்சி உறுப்புரிமையை இழப்பதன் காரணமாக உரிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். எவ்வாறாயினும், தேர்தல் ஆணைக்குழு 21 நாட்கள் செல்லும் வரை சம்பந்தப்பட்ட உறுப்பினரை நீக்காது. சட்டத்தின்படி கட்சியின் முடிவிற்கு எதிராக ஏற்புடைய கட்சித் தலைமையகத்துக்கு மாவட்ட நீதிமன்றத்திடம் உத்தரவினைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.எவரேனும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 21 நாட்களுக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்காவிட்டால், அந்த பாராளுமன்ற உறுப்பினர் நீக்கப்படுவார்.
மாவட்ட நீதிமன்றம் ஒன்றின் மூலம் இடைக்காலத் தடை உத்தரவு பெற முடியுமாயின், அதன் போது பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
மக்கள் விடுதலை முன்னணி – புலேகொட வழக்கு:
மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் பின்னர், ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி கட்சியின் செயலாளர் ஆரிய புலேகொடவினால் நீக்கப்படாமல், ‘கட்சி உறுப்பினர் கட்டணம் செலுத்தவில்லை’ என்ற குற்றச்சாட்டின் கீழ் வெளியேற்றப்பட்டார். கலப்பத்தியின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்குத் தயாராக உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட கலப்பத்தி எதிர் புலேகொடவழக்கிலும் (1997 1 SLR 393), இயற்கை நீதியின் கோட்பாடுகளின்படி விசாரணைமேற்கொள்ளாமை, மனுதாரருக்குரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமையினால் சட்ட விரோதமானதென தீர்ப்பளிக்கப்பட்டது.
2/3 பெரும்பான்மையுடன் ஜனாதிபதியின் கைகளில் அதிகாரத்தை வழங்கும் 18வது அரசியலமைப்புத் திருத்தத்தை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். பதுளை லக்ஷ்மன் செனவிரத்ன, பொலனறுவை ஏர்ல் குணசேகர, காலி மனுஷ நாணாயக்கார, கம்பஹா உபேக்ஷா சுவர்ணமாலி, குருநாகல்நிமல் விஜேசிங்க மற்றும் கண்டி அப்துல் காதர் ஆகியோர் அந்த உறுப்பினர்களாவர். ஐக்கிய தேசியக் கட்சியானது இந்த உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை தடைசெய்திருந்த போதிலும், அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்க முடியவில்லை
ஐக்கிய தேசிய முன்னணி (உண்மையான பெயர் ஐக்கிய தேசியக் கட்சி) என்ற பெயரளவிலான கட்சியின் கீழ் போட்டியிட்ட ரவூப் ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 உறுப்பினர்களும் 18வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் எவருக்கும் எதிராக ஐக்கிய தேசியகட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்த் தேசியகூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவும் 18இற்கு ஆதரவாக வாக்களித்தார். 2010நவம்பர் 28ம் திகதி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தன்னைக்கட்சியிலிருந்து நீக்கியமைக்குஎதிராக பியசேன யாழ் மாவட்ட நீதிமன்றத்தில்(DC Jaffna case No. 38/2010 (Misc) வழக்குத் தாக்கல் செய்தபோதும் அவரால் தடை உத்தரவினைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னைக்கட்சியிலிருந்துநீக்கியமைக்குஎதிராக, பியசேன உயர்நீதிமன்றத்தில் (SC Application Special [Expulsion] No. 03/2010) மனுத்தாக்கல்செய்ததுடன், 2011 பெப்ரவரி 08ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு பியசேனவின் கட்சி உறுப்புரிமைக்கு தடைவிதித்தமை சட்டத்திற்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமையினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பாதுகாக்கப்பட்டது.
ஹக்கீம் – ரிஷாட் முரண்பாடு
இயற்கை நீதிக்கான சட்டம், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கட்சித் தடையை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமீர் அலி, ரிஷாத் பதியுதீன் மற்றும் நஜிம் ஏ. மஜீத் ஆகியோர் வெளியேற்றப்பட்டமை ஆகும். மேற்குறித்த உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை விமர்சித்து கட்சிக்கு கடிதம் அனுப்பினார்கள்.
ரிஷாத் உள்ளிட்ட குழுவை கட்சி நீக்கியமையை எதிர்த்து ஷிராணி பண்டாரநாயக்க எழுதிய வழக்குத்தீர்ப்பில், ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படுவதற்கு முன்பே, “நீங்கள் சொல்வது தவறு. முஸ்லிம் சமூகம் கூட மன்னிக்காது ”எனக் கூறியதன் மூலம்” நீக்கப்படுவதற்கு முன்னர் நீங்கள் உரியபாராளுமன்ற உறுப்பினர்களைக் குற்றவாளிகளென முற்கூட்டியே முடிவு செய்துள்ளீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
02/2005, 03/2005, 04/2005 உயர்நீதிமன்றத்தின் மூன்று வழக்குகளையும் ஒன்றாக விசாரித்து 2005 ஜூலை 01ஆம்திகதி அலி, ரிஷாத் மற்றும் மஜீத் ஆகியோரின் கட்சித் தடை சட்டபூர்வமானது அல்ல என உயர்நீதிமன்றத்தின் சரத் என் சில்வா உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.முஸ்லிம் காங்கிரஸின் ஒழுக்காற்று நடைமுறையின் பிரகாரம் கட்சி உறுப்பினர் ஒருவரை நீக்கும் அதிகாரம் கட்சியின் உயர்பீடத்திற்கே உள்ளது.இருந்த போதிலும், கட்சித் தலைவர் குற்றம் தொடர்பாக தனது முற்கூட்டிய தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டார் என்பது வழக்கின் முக்கிய வாதமாக இருந்தது.
நஸீர் அஹமட் வழக்குத் தீர்ப்பில் அன்று தமக்கு தவறிய இடத்தை, சட்டத்திற்கு பாதகம் ஏற்படாதவாறு அமைத்துக் கொள்வதற்கு இம்முறை முஸ்லிம் காங்கிரஸால் முடிந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமானது கட்சியின் செயற்பாடுகளை கட்சியின் யாப்பின் பிரகாரம் தீர்மானித்துள்ளதாகவும், முறையான நடைமுறைகளை பின்பற்றி பாராளுமன்ற உறுப்பினரைக் கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நஸீர் அஹமட் வழக்குத் தீர்ப்பு கூறுகிறது.
நஸீர் அஹமட் வழக்குத் தீர்ப்பின் பின்னர், ஒருசில அரசியல் கட்சிகளின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ.ல.சு.கட்சி யாப்பின் சட்டபூர்வமான தன்மை நீதிமன்றத்தால் ஆராயப்பட்டு வருவதனாலும் ஐக்கிய மக்கள் முன்னணியின் 32 பக்கங்கள் கொண்ட யாப்பில் உறுப்பினர்களை நீக்குவதற்கான ஏற்பாடுகளில் உள்ள பலவீனம் காரணமாகவும் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழப்பதற்கான அபாயம் குறைவாகவே காணப்படுகிறது.
யாப்பின் ஏற்பாடுகள் வலுவானதாக அமையாத, உரிய முறையியல்களைப் பின்பற்றாத மற்றும் இயற்கை நீதிக்கு முரணாக கட்சிகள் செயற்பட்டுள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இதுவரை எச்சந்தர்ப்பத்திலும் இடமளிக்கவில்லை.