பதுளை நகர் பெற்றெடுத்த தவப் புதல்வர்,
பாரோங்க பணி புரிந்த நவச் செல்வர்,
மதுகரமாய் மொழிகின்ற நேசகர்,
மகோன்னத மனம் கொண்ட தேசிகர்,
புதுப் புனலாய் பாய்ந்திட்ட புரவலர்,
ஸீலானிய்யா கலைகூடத்தின் காவலர்,
எது வந்த போதும் சளைக்காத வித்தகர்,
மாணவர் ஏற்றத்தை மனம் கொண்ட சித்தகர் ,
பொதுப் பணி, அறப் பணி, நம் பணி என்றவர்,
அல் குர்ஆன் நபி வழியே தம் வழி கண்டவர்,
இது தான் இறை பணி என்றே பயின்றவர்,
இதயத்தில் இசுலாத்தை இனிதாக விதைத்தவர்
சர்வ ஆளுமையின் அடையாளம் சர்தார் கான்,
சீரான அவர் வாழ்வை என்றும் அறிந்தோம் காண்,
கர்வம் குரோதம், நெருங்காத அறிவுச் சமுத்திரம்,
காலத்தால் அழியாத காவியமே அவர் சரித்திரம்,
அல் குர்ஆன் நபி வழியில் வாழ்ந்திட்ட நெஞ்சம்,
கூறக் கூற குறையாத சேவையே அவர் தஞ்சம்,
வறுமை, துன்பம் துயரை வென்ற வாழ்வு,
சோதனை சூழ்ந்த போதும் அடையாத தாழ்வு,
சர்தார் கான் நாமம் மாறாத நாமம்
சீரான நற்பணிகள் கோர்த்திட்ட தாமம்,
கற்பித்தலில் துறைபோன பல்துறை பாசறை,
மாணவர் மனந்தனிலே நிதம் வாழும் நேசர்!
அற்புதமாய் இமாம் பணியில் காட்டிட்டார் பாதை,
அடுக்கடுக்காய் நற்கருத்தை நவிலுகின்ற மேதை,
கற்பனையில் வளமிகுந்த அறிவுக் களஞ்சியம்,
மாணவரை கரையேற்றுவதே அவர் இலட்சியம்,
சொற்படியே நடக்கின்ற அவர் கொண்ட நேர்மை,
எத்துறையிலும் மின்னி நின்ற அறிவினது கூர்மை,
உற்றார் மற்றோர் மனங் கவர்ந்த ஓர்மை,
நபி வழி சுன்னாவை சறுக்காத சீர்மை!
நாவலராய் முழங்கிட்ட மிம்பர் மேடை,
சொல் மழையாய் பொழிந்து நீக்கிட்ட மனக்கோடை,
காவலராய், மாணவரை காத்திட்ட பெருமை
காலத்தால் அழியாது; என்றென்றும் அவர் அருமை
பாவலராய் பேசி விரிந்திடும் உம் சிரிப்பு,
பாரெல்லாம் உம் புகழை பரவச் செய்த விரிப்பு,
ஆவலராய் அறிவுப் பணி செய்த சர்தார் கான்
அகலாது அவர் நாமம் என்றும் மனதில் தான்!
புவனத்தில் பணி செய்த உத்தம புத்திரரே
சுவனப் பூங்காவில் மணம் வீச வாழ்த்துகிறேன்
பவனத்தில் கலந்திட்ட மணம் போன்ற உம் சேவை
கவனத்தில் கொள்வோம் உம் பணி மறவோம்!!
சர்வ ஆளுமையின் அடையாளம் சர்தார் கான்
869
previous post