உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டின் பத்தாம் ஆண்டு விழா அடுத்த ஆண்டு ஐம்பெரும் விழாவாக ஜனவரி 6 மற்றும் 7ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் கலை, கலாசாரம், பாரம்பரிய உணவு, உடை போன்ற நிகழ்வுகளும் தமிழ் மொழியின் மேன்மைகளையும் பண்டைய கால தமிழரின் வரலாறுகளையும் பிரதிபலிக்கும் விதமாக இந்நிகழ்வு அமையவுள்ளது. மேலும் தமிழர்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்காக சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்களை ஒன்றிணைக்கும் விதமாக சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள சிறு குறுந்தொழில் அதிபர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தும் மற்றும் சந்தைப்படுத்தும் விதமாக அமையவுள்ளது. தமிழ்மொழி அயல்நாடுகளில் சென்றடைய சினிமா ஒரு பாலமாக இருப்பதாலும், இவ்வாண்டு கலைஞரின் நூற்றாண்டு விழா என்பதாலும், கலைஞரும் சினிமாவும் என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது.
தமிழர்கள் உழவுத் திருநாளை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்ற நேரடி காட்சிகளை உலகத் தமிழர்கள் அறியும் வகையில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெறும் உழவர் திருநாள் விழாவும், பண்டைய காலங்களில் மறந்து போன வீர விளையாட்டுகளையும், அறிவுசார் விளையாட்டுகளையும் காட்சிப்படுத்தும் விதமான நிகழ்வும் நடைபெற உள்ளது. தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்யவும் பறைசாற்றும் விதமாகவும் நிகழ்ச்சியை நடத்த உள்ளோம் என உலகத்தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். இந்நிகழ்வில் பல்வேறு நாட்டு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், மேயர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் சாதனை புரிந்த தமிழர்களுக்கு ‘சாதனைத் தமிழன்’ விருதும், தமிழ் மொழியை போற்றி காக்கும் வகையில் மொழியின் பெருமைகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசான் விருதும், கடல் கடந்து சென்று வாழும் தமிழர்களுக்கு ‘தலை நிமிர்ந்த தமிழன்’ விருதும் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என செல்வகுமார் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு +60166167708 என்ற பகிரியில் (Whatsapp) அணுகவும்.