இந்த ஆண்டு சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கடந்த வருடம்வரை வருடாந்தம் 65 பில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்தத் தொகை தற்போது நான்கு மடங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறுவோரை மேம்படுத்தும் வகையில் சமூக நலன்புரி பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அரசாங்க வருமானத்தில் 95% வருமானம் வரி மூலம் பெறப்படுவதாகவும், அனைத்து வரிகளும் குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியின் பக்கவிளைவாக பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அதற்கு தீர்வாக பாடசாலை உபகரணங்கள் தொடர்பாக தனிப்பட்ட ரீதியில் கவனம் செலுத்தி ஏற்கெனவே சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.