நம் நாட்டில் உள்ள கலைஞர்களுள் 200 பேரை தெரிவு செய்து அவர்களுக்கு கலாபூஷணம் விருது வழங்கி கெளரவிக்கும் பெரு விழா கடந்த பதினோராம் திகதி (11 .10 .2023 ) மகராகமையிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கொழும்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர் எம்.கே.எம்.அஸ்வரும் கெளரவிக்கப்பட்டார். சிரேஷ்ட பத்திரிகையாளரான இவர் தினகரன் பத்திரிகையோடு 45 ஆண்டுகளுக்கு மேல் தொடர்புடையவர். சிறிய சிறிய ஆக்கங்களை எழுதி தினகரனில் வளர்ந்த பத்திரிகையாளரான மொறட்டுவை, எகொட உயனை (மோதர) என்ற இடத்தில் வசிக்கும் எம்.கே.எம்.அஸ்வர் என்பவரைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்:
களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை தொகுதியில் ஹேனமுல்லை என்ற இடத்தைச் சேர்ந்த இவர் எழுத்துத்துறையில் சிரேஷ்ட ஊடகவியலாளராக தடம் பதித்துள்ளார், இன்று ஒரு பத்திரிகையாளராக, வானொலிக் கலைஞராக, நாடக நடிகராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், மேடை அறிவிப்பாளராகவும் பரிணாமம் பெற்றுள்ளார்.
இவரது திறமையையும், ஆற்றலையும் கண்ட முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும், கலாசார அமைச்சும் இவருக்கு கலாபூஷணம் எனும் அரசவிருது வழங்கி கெளரவித்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
நம்நாட்டில் பத்திரிகைத்துறையில் இருந்த ஜாம்பவான்களில் ஒருவரான முன்னாள் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அமரர் இ. சிவகுரு நாதன், தினகரனின் முன்னாள் உதவி ஆசிரியரும், நவமணி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் ஆகியோரின் வழிகாட்டலில் பாடசாலையில் கற்கும் காலத்திலேயே ஊடகத்துறையில் அதிக ஆர்வம் கொண்டு செயற்பட்டார். இவர் அன்று சிறு,சிறு ஆக்கங்களை எழுதி அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை பிரசுரம் ஆனது கண்டு இத்துறையிலேயே தன்னை ஈடுபடுத்தினார்.
நம்நாட்டில் பத்திரிகைத்துறை ஜாம்பவான்களில் ஒருவரான முன்னாள் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அமரர் இ. சிவகுரு நாதன், முன்னாள் தினகரனின் உதவி ஆசிரியரும், நவமணி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் ஆகியோரின் வழிகாட்டலில் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் கல்விகற்று, தனது ஆர்வத்தை மேலும் வளர்க்க கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகத்துறையை நிறைவு செய்தார். தான் கல்விகற்ற கல்லூரி தொடர்பான செய்திகள் வெகுஜனத்தொடர்பு சாதனங்களில் வெளிவராததால் கவலை கொண்ட இவர் தனது கல்லூரி தொடர்பான செய்திகளை பத்திரிகை, வானொலிக்கு எழுதி தன்னை இத்துறையில் ஈடுபடுத்தி பயிற்சி பெற்றதுடன் பயனும் கண்டார்.
பாணந்துறை ஜீலானின் மடியில் வளர்ந்த பத்திரிகையாளர் அஸ்வர் தான் படித்த கல்லூரிக்காகச் செய்த இப்பணி இவரை ஒரு செய்தியாளராகவே பிரகாசிக்கச் செய்தது.
தினகரன், தினகரன் வாரமஞ்சரி, வானவில், செந்தூரம், விடிவெள்ளி, தினபதி, சுடரொளி, நவமணி, அல்ஹஸனாத், எழுச்சிக் குரல், உதயம், ஜும்மா போன்ற தமிழ் பத்திரிகைகளிலும் தினமின, ஜனதா, கிரீடா போன்ற சகோதர மொழிப் பத்திரிகைகளிலும் அதேபோல் சண்டே ஒப்ஸோவர், டெய்லி நியூஸ்,போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள், செய்திகள் என்பன வெளிவந்துள்ளன.
பாணந்துறை ஹேனமுல்லையைச் சேர்ந்த மர்ஹூம்களான ஐ.எம்.எம். காலித், சித்தி ஆமினா ஆகியோரின் ஏக (சிரேஷ்ட) புதல்வரான அஸ்வருக்கு இரண்டு தங்கைகள், க.பொ.த. பரீட்சையை நிறைவு செய்ததின் பின் படிப்பை தொடர முடியாதநிலைக்கு இவர் ஆளானார். காரணம் இவரது தந்தை நோயால் பிடிக்கப்பட்டது தான். ஆகவே குடும்பச்சுமை இவரின் கைக்கு மாறியது.
1970 -முதல் 1977ஆம் ஆண்டுகளுக்கிடையில் நமது நாட்டிலே இறக்குமதிகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட காலம். சைக்கிள் (துவிச்சக்கர) இறக்குமதிக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆகவே முழு நாட்டுக்கும் தேவையான சைக்கிள்கள் பாணந்துறையில் தான் உற்பத்திசெய்யப்பட்டன. இதனால் தொழிற்சாலைகளில் அதிக வேலை வாய்ப்புகள் காணப்பட்டன. பாடசாலைவிட்டு பின்னேர வேலைக்கு சென்று குடும்பச் செலவை ஈடு செய்தார். காலம் செல்லச் செல்ல முழுநேரமும் தொழில் செய்யவேண்டிய நிலைக்கு அஸ்வர் ஆளானார். இதன் காரணமாக இவரால் படிப்பை தொடர முடியாதநிலை ஏற்பட்டது. எது எப்படி இருந்தாலும் தான் நேசித்த ஊடகத்துறையை அவர் கைவிடவில்லை.
தினகரனுக்கென்று செய்திகளை மாத்திரம் எழுதிவந்த அஸ்வர் அன்று கட்டுரை ஆசிரியராக இருந்த அருள் சத்தியநாதனின் வழிகாட்டலில் தினகரன் வாரமஞ்சரிக்கு நாட்டில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களை எழுத ஆரம்பித்தார அதன் மூலம் பல பரபரப்பான ஆக்கங்களை வாராந்தம் எழுதி வாசகர்களின் வரவேற்ப்பை பெற்றார்.
தினகரனில் இன்றும் வெளிவரும் ” பாடசாலைகள் அறிமுகம்” எனும் பகுதி அஸ்வரால் தான் ஆரம்பிக்கப்பட்டது. தற்போதய பிரதம ஆசிரியர் தே,செந்தில்வேலவர் அன்று ஆசிரியராக இருந்த காலத்தில் அவரது வழிகாட்டலில் தான் இப்பகுதி ஆரம்பமானது.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நமது வளங்கள் மண் வாசனை நிகழ்ச்சியை அஸ்வரின் ஆசான்களில் ஒருவரான மொயின் சமீனுடன் இணைந்து தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் நடாத்தினார். இதில் தான் படித்த கல்லூரி தான் முதலில் வெளிவர வேண்டும் என்று பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியை அறிமுகம் செய்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக (செயற்குழு) உறுப்பினரான இவர் பாணந்துறை, மொறட்டுவை, பண்டாரகமை பிராந்தியங்களில் இருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன்கருதி கடந்த 17 ஆண்டுகளாக மாதிரிப் பரீட்சைகள், கருத்தரங்குகளை நடத்திவந்துள்ளார். அத்தோடு பாணந்துறை சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தை ஸ்தாபித்து அதன் செயலாளராக இன்றும் சமூகப் பணி செய்து வருகிறார். அவருடைய சமூகப் பணி தொடர வாழ்த்துகின்றோம்.!