“தலைவர் காட்டிய தலைவர் ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம்களின் தேசிய பேரியக்கமாகவும் அரசியல் கலாசார மக்கள் இயக்கமாகவும் நெடிய பயணம் நீளும்”
இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரித்துப்பார்க்க முடியாதவொரு அரசியல் விருட்சமாகியுள்ள நிலையில், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பின் ஊடாக அக்கட்சி நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னுதாரணமாகின்ற தடத்தினை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஹாபிஸ் நசீர் அஹமட்டை நீக்கியமை தொடர்பில், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், அவருக்கு அனுப்பிய கடிதத்தை சவாலுக்குட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் கடந்த ஆறாம் திகதி அறிவிக்கப்பட்டபடி கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை, சரியானதும் சட்டபூர்வமானதுமானதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 17,599 வாக்குகளை பெற்ற ஹாபிஸ் நசீர அஹமட் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். எனினும், அவர் உள்ளிட்ட மூவர் கட்சியின் தீர்மானத்தினை மீறி, வரவு செலவுத்திட்டத்துக்கு வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து ஒன்றுகூடிய முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் குறித்த உறுப்பினர்களிடத்தில் விளக்கம் கோரியிருந்தது. இரு உறுப்பினர்களும் தமது செயற்பாடு தவறு என்று குறிப்பிட்டு மன்னிப்புக்கோரியிருந்த நிலையில் ஹாபிஸ் நசீர் அஹமட் பதிலளிப்புக்களுக்கான காலத்தினைக் கோரியபோதும் முறையான பதில்களை வழங்கத் தவறியிருந்தார்.
குறிப்பாக கட்சி எடுத்த தீர்மானத்துக்கு மாறாக 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை, சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
குறித்த கடிதத்தை ஆட்சேபித்து ஹாபிஸ் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவ்வழக்கில் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களென 97 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனையடுத்து மு.காவின் செயலார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உட்பட பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியதுடன், அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெக்கப்பட்டு ஹாபிஸ் நசீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமையானது முறையானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நபரொருவர் எந்தக் கட்சியினூடாக அல்லது சுயேச்சைக் குழுவின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானாரோ, அந்தக் கட்சியில் அல்லது சுயேச்சைக் குழுவில் அவரின் அங்கத்துவத்தை இழந்தால், அந்த தினத்திலிருந்து ஒரு மாதத்தின் பின்னர் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமையும் இல்லாமல் போகுமென அரசியலமைப்பின் பிரிவு 99(13)(அ) குறிப்பிடுவதற்கு அமைவாக தற்போதைய ஆளும் அரசாங்கத்தில் சுற்றாடல்துறை அமைச்சராகப் பதவி வகித்த ஹாபிஸ் நசீர் அஹமட்டின் – பாராளுமன்ற உறுப்புரிமை ரத்தாகியுள்ளது.
இதேபோன்றே 1991ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த போது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது. அப்போது அமைச்சர்களாகவிருந்த லலித் அத்துலத் முதலி மற்றும் காமினி திஸாநாயக்க உள்ளிட்டோர் அந்த பிரேரணையில் கையொப்பமிட்டிருந்தனர். அதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியிருந்து அவர்கள் நீக்கப்பட்டார்கள்.
அந்தத் தீர்மானத்துக்கு எதிராக லலித் அத்துலத் முதலி மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனாலும், அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை – சட்டப்படி சரியானதென, அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன் பின்னரான காலங்களில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்தத் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போது, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது என்றே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து வந்தது.
குறிப்பாக, கருஜயசூரிய உள்ளிட்ட 16பேர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறியமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பியசேன வெளியேறியமை உள்ளிடவற்றுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளில் மேற்படியான நிலைமைகளே நீடித்திருந்தன.
அதுமட்டுமன்றி மக்கள் விடுதலை முன்னணியானது, கட்சி தாவுகின்ற போது பாராளுமன்ற உறுப்புரிமை ரத்தாகும் சட்டமூலத்தினை இயற்றி நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தபோதும் அது வெற்றியளித்திருக்கவில்லை. இவ்வாறான நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கட்சி தீர்மானங்களை மீறுதல், பதவிகளுக்காக கட்சி தாவுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் உறுதியான முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் பேரியக்கம் உருவாக்கப்பட முன்பு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒற்றுமையின்றி பிரதேசவாதம் தலைதூக்கி இருந்தது. எதற்கெடுத்தாலும் பிரதேசத்தினை மையமாக கொண்ட அரசியல் கலாசாரம் இருந்தது.
இவ்வாறு பிரதேச ரீதியாக பிளவுபட்டு கிடந்த முஸ்லிம் மக்களை ஒன்றிணைப்பது சிரமமான விடயமாகக் காணப்பட்டது. அப்போதுதான் மு.கா என்ற பேரியக்கம் ஆரம்பமானது. மு.கா.வின் வரலாறையும் வந்த தடத்தையும் தடயங்களையும் முற்றாக அழிப்பதென்ற பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலைத் தகர்த்தெறிந்து மீட்பதற்கு பெரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரப் தலைமையை ஏற்றபோதே மு.காவை பிளவுபடுத்தும் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது அவரும் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து நாடினார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. எனினும் அவர் சவால்களுக்கு முகங்கொடுத்து கட்சியை கட்டியெழுப்பினார்.
1988 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 17 ஆசனங்களையும் தென்னிலங்கையில் 12 ஆசனங்களையும் சேர்த்து மொத்தமாக 29 மாகாணசபை உறுப்பினர்களை இக்கட்சி பெற்றது. அதைத் தொடர்ந்து 1989 பொதுத்தேர்தலில் அஷ்ரப்பின் அரசியல் வியூகத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து வந்த 10ஆவது மற்றும் 11ஆவது பொத்தேர்தல்களில் இக்கட்சி முறையே 07, 11 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியது. அவர் விட்டுச்சென்ற அந்த சிறந்த வியூகத்தினால் 12ஆவது பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12 ஆசனங்களை பெற்று வரலாறு படைத்தது.
1994இல் பத்தாவது பாராளுமன்றத்தில் கப்பல்துறை துறைமுகங்கள் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக பதவி வகித்த அஷ்ரப் பல அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தினார். அக்காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது.பெருந்தேசிய கட்சிகளும் அச்சம் கொள்ளும் அளவுக்கு தனது பலத்தை நிரூபித்திருந்தது.
2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி ஹெலிஹொப்டர் விபத்தில் அவர் அகால மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து பல்வேறு கருத்து முரண்பாடுகளும், தலைமைத்துவப் போட்டியும் கட்சிக்குள் உருவாக்கப்பட்டன. அதன் விளைவாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் தோற்றம் பெற்றன. நுஆ கட்சியும் செயற்பட ஆரம்பித்தது.
எனினும் மு.கா.சோர்ந்துவிடவில்லை. தலைவர் காண்பித்த தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம்களுக்காக தனிப்பெரும் சக்தியாக தொடர்ந்தது. நீண்ட காலமாக நாட்டின் ஜனநாயக பாரம்பரியங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
தொடர்ச்சியாக கட்சியில் காணப்பட்ட வெளியேற்றங்கள், குழிபறிப்புக்கள், தீர்மானங்களை மீறிய செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து உள்ளக சவால்களையும் வெற்றி கொள்வதற்காக ரவூப் ஹக்கீம், நீடித்த மௌனத்தை பேணினார். கட்சியை குறைந்தளவு சேதாரத்துடன் மீட்க வேண்டும், பேரம்பேசும் தன்மையை நிலை நிறுத்த வேண்டும், மக்கள் இயக்கமாக தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், தற்போதும் இருக்கின்றார்.
இந்த நிலையில், நீடிக்கும் அரசியல் கலாசர புறழ்வுக்கு மு.கா.வும், அதன் தலைமைத்துவமும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒட்டுமொத்த இலங்கை அரசில் கட்சிகளுக்கும் முன்னுதாரணமாக தடம் பதித்துள்ளது. அது தொடர்ந்தும் முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாகவும், தனிப்பெரும் சக்தியாகவும் மக்களின் பேராதரவுடன் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை. என்றும் முஸ்லிம்களை ஆளும் கட்சி “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்” என்பதை தலைவர் ஹக்கீம், மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஹ்மத் மன்சூர் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் (மு.கா) முன்னாள் பிரதி முதல்வர் கல்முனை மாநகர சபை