உலக பொருளாதாரம் இயல்புநிலைமைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லையென்றே நினைக்கத் தோன்றுகின்றது. உலகின் நிலைமை கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வாறுதான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் இன்னுமே மீண்டெழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
2019 டிசம்பர் மாதத்தில் கொவிட் பெருந்தொற்று உலகநாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் சர்வதேச பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு வீழ்ச்சியடையத் தொடங்கியது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எந்தவொரு நாடுமே தப்பிக் கொள்ளவில்லை. அதன் தாக்கம் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
உலகை விட்டு கொவிட் பெருந்தொற்று ஏறக்குறைய விடைபெற்றதும், உலக பொருளாதாரம் பெரும் பிரயத்தனத்துடன் மீண்டெழுந்து வரத் தொடங்கிய வேளையில், ரஷ்ய- உக்ரேன் யுத்தம் திடீரென வெடித்தது. அதன் காரணமாக உலக பொருளாதாரம் மீண்டும் ஆட்டம் காணத் தொடங்கியது. உலகில் கோதுமைத் தானியத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதில் ரஷ்யாவும் உக்ரேனும் பிரதான இரு நாடுகளாகும். இவ்விரு நாடுகளும் உலகின் கோதுமைத் தேவையில் மூன்றிலொரு பங்கைப் பூர்த்தி செய்கின்றன.
கோதுமையை மாத்திரமன்றி, உலகநாடுகளின் பிறதேவைகள் பலவற்றை ரஷ்யாவும் உக்ரேன் பூர்த்தி செய்து வந்ததனால் அவ்விரு நாடுகளுக்குமிடையில் கடந்த ஒன்றரை வருடகாலத்துக்கு மேலாக தொடருகின்ற யுத்தமானது உலக பொருளாதாரத்தை மறைமுகமாகப் பாதித்த வண்ணமே உள்ளது.
ரஷ்ய_ உக்ரேன் போர்த்தாக்கம் தணிவதற்கிடையில், இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்குமிடையில் இப்போது கடும்போர் மூண்டுள்ளது. ரஷ்ய_ உக்ரேன் யுத்தத்தைப் பார்க்கிலும், இஸ்ரேல்_ ஹமாஸ் யுத்தமானது உலக பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தைச் செலுத்துமென்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இப்பாதிப்பிலிருந்து இலங்கையும் விதிவிலக்காகப் போவதில்லை.
உலகசந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பதால் இலங்கையிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும், சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும், பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும்.
இவ்வாறெல்லாம் இலங்கையும் பாதிப்புகளை எதிர்கொள்ளத்தான் போகின்றது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்குமிடையிலான யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்துவிடுமென்று எதிர்பார்க்க முடியாது. இருதரப்புமே பலம் பொருந்தியவை என்பதால் தீவிர யுத்தம் தொடரத்தான் போகின்றது.
கொவிட் தாக்கத்தின் பின்னர் உலக பொருளாதாரத்தில் உலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்ற மூன்றாவது காரணியாக இஸ்ரேல்_ ஹமாஸ் யுத்தத்தைக் குறிப்பிடலாம்.
உலக பொருளாதாரத்தைப் பாதிக்கின்ற யுத்தம் இவ்வாறு அடுத்தடுத்து உருவெடுக்கும் போது, உலகநாடுகள் எப்போதுதான் அமைதிக்காற்றைச் சுவாசிக்கப் போகின்றன? போட்டாபோட்டிகளும் யுத்தங்களும் உலகைவிட்டு முற்றாக நீங்குவது எப்போது? அமைதியை விரும்புகின்ற உலகமக்களின் ஏக்கம் இதுதான்!