Home » சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியை தோற்கடிக்குமா?
இந்தியா முன்வைத்துள்ள பொருளாதார வழித்தடம்

சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியை தோற்கடிக்குமா?

by Damith Pushpika
October 8, 2023 6:16 am 0 comment

பிராந்திய மட்டத்தில் ஆதிக்கம் செய்த இந்தியா சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கனடாவின் இறைமையில் தலையீடு செய்யும் நடவடிக்கை இந்தியாவின் சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செய்யும் செய்முறையாகவே தெரிகிறது. அதனால் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடியை இந்தியா அணுகும் விதத்தை அவதானிக்கும் போது இந்தியாவின் மேலாதிக்க செய்முறையை உணரமுடிகிறது. அதிலும் இராணுவ மற்றும் புலனாய்வு நடவடிக்கையாகவே இந்தியாவின் நகர்வு சர்வதேச அரசியலில் விளங்கிக் கொள்ளப்படுகிறது. இந்தியாவின் சந்திரனை நோக்கிய சந்திரயான் பயணம் இந்தியாவின் பிற கோள்களை நோக்கிய நகர்வை வெளிப்படுத்துகிறது. புவிக்கோளத்தில் பிற கண்டங்களை நோக்கி இந்தியா நகர்வது போலவே பிற கோள்களை நோக்கிய அதிகார நகர்வை விளங்கிக் கொள்ள வேண்டும். சந்திரனிலுள்ள வளங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையாகவே சந்திரயானின் வெற்றிகரமான பயணம் அமைந்துள்ளது. இதே நேரம் இக்கட்டுரை புதுடில்லியில் நடைபெற்ற ஜி-20 மகாநாட்டில் இந்தியா முன்வைத்துள்ள பொருளாதார வழித்தடம்; பற்றிய தேடலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஜி-20 மகாநாடு 9,10.09.2023 இல் நடைபெற்ற மகாநாட்டில் மேற்கு நாட்டின் தலைவர்களது வருகையும் ரஷ்யா மற்றும் சீனத் தலைவர்கள் கலந்து கொள்ளாமையும் அதிக மேற்குலகத்தின் ஆதிக்கத்தை மகாநாட்டில் காணக்கூடியதாக அமைந்திருந்தது. ஆனால் உக்ரைன் விடயத்தில் இந்தியாவின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட மேற்குலகம் மறுபக்கத்தில் சீனாவுக்கு எதிரான நகர்வுகளை இந்தியா பக்கமிருந்து நகர்த்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. அதன் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ள புதிய புவிசார் தந்திரோபாயத்தையும் புவிசார் பொருளாதாரத்தையும் மையப்படுத்திய இந்தியா – மேற்காசியா- ஐரோப்பா பொருளாதார தாள்வாரம் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜி-20 மாநாட்டின் நிறைவில் இந்தியா-அமெரிக்கத் தரப்புக்களால் முன்மொழியப்பட்டுள்ளது.

இது இந்தியாவினாலும் அமெரிக்காவினாலும் திட்டமிடப்படுவதாக விவாதிக்கப்பட்டாலும் முழுமையாக சீனாவுக்கு எதிரானதாகவே இந்திய ஆய்வாளர்கள் அதிகம் முதன்மைப்படுத்தி வருகின்றனர். சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கான நகர்வை தோற்கடிப்பதற்கான கட்டமைப்பாகவே விவாதிக்கப்படுகிறது. இதில் மேற்காசிய நாடுகளான சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் என்பனவும் ஐரோப்பாவுக்கான தரைவழி மற்றும் கடல்வழிப் பாதையூடாக வர்த்தகம் சந்தை மற்றும் பொருளாதார உறவை கட்டமைப்பாதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை தெரியவருகிறது. இதனால் இத்தகைய நகர்வை மேற்குலக புவிசார் அரசியல் விமர்சகர்கள் ஸபைக்மன் 1944 இல் முன்வைத்த விளிம்புநிலக் கொள்கைக்கு ஒப்பானது எனவும் இது ரஷ்யாவின் இருதய நிலக் கோட்பாட்டுக்கு மாறானது எனவும் விவாதிக்கின்றனர்.

குறிப்பாக 1919 இல் மைக்கிண்டரால் முன்வைக்கப்பட்டுள்ள இருதய நிலக் கோட்பாட்டை வேறு ஒரு தளத்தில் முதன்மைப்படுத்திய ஸ்பைக்மன் விளிம்பு நிலக் கோட்பாட்டை அடையாளப்படுத்தினார். அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பனிப்போர்க் காலத்தில் மோதுண்ட போது மைக்கிண்டரின் இருதயநிலக் கருதுகோள் நியாயப்படுத்தப்பட்டது.

தற்போது அதன் புதிய வடிவம் எழுச்சி பெற்றுள்ளதாகவும் அதற்கான அடிப்படை ஸ்பைக்மனின் பழைய கோட்பாட்டில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதாவது ரஷ்ய- அமெரிக்க அதிகாரப் போட்டி பலவீனமடைந்து பலசக்திகளின் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதனையே ஸ்பைக்மன் முன்வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இது புதிய அதிகார மையங்களுக்கான திறவுகோலாக அமைந்திருப்பதுடன் ரஷ்யாவை கையாளுவது பற்றிய விவாதமாக உள்ளது. அதனால் ஸ்பைக்மன் Who controls the rimland rules Eurasia; Who rules Eurasia controls the destinies of the world என்ற முடிவுக்கு வந்தார். ஸ்பைக்மன் யூரேசியாவை சுற்றியுள்ள நிலப்பகுதியையும் கடல்பகுதிகளையும் அதற்கு உட்பட்ட அரசுகளையும் விளிம்பு நிலக்கொள்கைக்குள் உள்ளடக்கியிருந்தார். இதில் மேற்கு ஐரோப்பாவுக்கும் தென் சீனக்கடலோரத்தைக் கொண்ட நீண்ட பகுதியை உள்ளடக்கியுள்ளது என்றார். இதில் மேற்காசியா உள்ளடங்குவதுடன் இந்தியாவும் சீனாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பொருளாதார வழித்தடத்தின் வடிவம் அதிக அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாக தெரிகிறது. சீனாவால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பட்டுப்பாதையை முறியடிப்பதென்பதே நோக்கமாக அமைந்தாலும் வெளிப்படையாக சீனா- இந்தியா- ரஷ்ய கட்டமைப்பை உடைப்பதாகவே தெரிகிறது. இதன் இன்னோர் வளர்ச்சியாகவே பிறிக்ஸ்ம் அதன் பிந்திய நகர்வும் காணப்படுகிறது. பிறிக்ஸின் விரிவாக்கமானது மேற்காசிய நாடுகளை உள்ளடக்கியதுடன் வலுவான புவிசார் அரசியல் பலத்தைக் கொண்ட மூன்று நாடுகளது பலமான கட்டமைப்பாகவே அமைந்துள்ளது. அது மட்டுமன்றி ஆசியா ஆபிரிக்கா மற்றும் இலத்தீனமெரிக்க நாடுகள் அமெரிக்க எதிர்ப்பினை கட்டமைக்கும் போது வலுவான அமைப்பாகவும் உலக ஒழுங்கை மாற்றும் அமைப்பாகவும் பிறிக்ஸ் மாறியுள்ளதாகவே தெரிகிறது. அது முழுமையாக மேற்குக்கு எதிரானதாக அமையும் அதே நேரம் டொலருக்கு எதிரான புவிசார் பொருளாதார கட்டமைப்பும் நாடுகளின் நாணயங்களை கொண்டதான வர்த்தகப் பரிமாற்றமும் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்திவருகிறது. அதனாலேயே ரஷ்யா பொறுத்து இந்தியா எத்தகைய கொள்கையைக் கொண்டிருந்தாலும் மேற்கு, இந்தியாவுடன் இணங்கிப் பயணிக்கும் உபாயத்தை வகுத்து ஜி-20 ஐ தெளிவாக கையாண்டுள்ளது எனலாம்.

இது மேற்காசியாவுடன் மேற்குலகத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசலை முடிவுக்கு கொண்டுவரும் என்ற எதிர்பார்க்கையும் காணப்படுகிறது. அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தினால் ஏனைய நாடுகளுடனான உறவு வலுவடைகிறதோ இல்லையோ மாறாக இந்திய- மேற்கு உறவும் அமெரிக்க- இந்திய நட்புறவும் பலமானதாக அமைவதே நோக்கமாகத் தெரிகிறது. ஜி-20 இவ்வாறு பலதிட்டங்களை முன்மொழிந்துள்ளது. கடந்த காலங்களில் உலகத்தை மாற்றும் திறனுடன் ஜி-20 செயல்பட்டதாக அதிக உரையாடல் காணப்பட்டது.

ஆனால் நடைமுறையில் நியாயமற்ற தன்மைக்குள்ளால் பொருளாதார சுரண்டலும் ஆக்கிரமிப்புமே நிகழ்ந்துள்ளது. காணமுடிகிறது. அது மட்டுமன்றி சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டமானது பாரிய நிதித் திட்டமிடலில் நகர்த்தப்பட்டுள்ளத. ஏறக்குறைய ஆசிய-பசுபிக் பிராந்தியத்தையும் ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க கண்டத்தையும் தனது வழித்தடத்தில் சீனா நிலைநிறுத்திவிட்டது. அதன் வளர்ச்சியும் நகர்வும் அதீதமானதாக மாறியுள்ளது.

ஆனால் இது பற்றிய இஸ்ரேலின் நிலைப்பாடு தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு குறிப்பிடும் போது பொருளாதார இராணுவ மற்றும் சமாதானத்திற்கான திட்டமிடலாக இத்திட்டம் அமைந்திருப்பதுடன் முழுமையான புதிய மத்திய கிழக்கை உருவாக்கும் எனவும் ஐரோப்பாவை ஆசியாவுடன் இணைக்கும் என்று மிகப்பலமான திட்டம் எனவும் அதிக மாற்றங்களைத் தரக்கூடியதெனவும் இஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதில் இஸ்ரேலின் வருகையே அதிக குழப்பத்தை தருவதாக விமர்சகர்கள் விவாதிக்கின்றனர். காரணம் இஸ்ரேல் ஏற்கனவே ஈரானின் அணுவாயுத உற்பத்திக்கான நகர்வுகளால் அதிக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அது மட்டுமன்றி ரஷ்யா சீனாவின் மேற்காசிய நகர்வுகள் இராணுவ ரீதியில் அதிக பாதிப்பினை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதனால் இத்தகைய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் பலமான இஸ்ரேலை கட்டமைக்க திட்டமிடுவதாகவே தெரிகிறது.

அதாவது குவாட் நாடுகளின் விரிவாக்கம் அதிக அரசியல்- இராணுவ வடிவமாக அமைவது போல் ஜி-20 இன் விரிவாக்கமும் சாத்தியமான இராணுவ வலுவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதனால் இதன் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாக உணரப்படுகிறது.

எனவே ஜி-20 புதுடில்லி மாநாடு தெளிவான நகர்வொன்றை முன்வைத்துள்ளது. வர்த்தக அடிப்படையிலும் அதனால் பொருளாதார ஒருமைப்பாட்டை ஏற்படுவதுடன் புதிய மாற்றத்தை உலகளாவிய போக்கில் ஏற்படுத்துமென எதிர்பர்க்கப்படுகிறது. அதே நேரம் இது சீனாவுக்கு மாற்றீடானதாக அமைய வாய்ப்பில்லை எனவும் இந்தியாவையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை ஒன்றிணைக்கும் திட்டமெனவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division