காலிஸ்தான் தீவிரவாத முக்கியஸ்தரான ஹர்தீப் சிங் கனடாவில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே உருவெடுத்த மோதல் தற்போதும் தொடருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக அமெரிக்கா சில முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா_ அமெரிக்கா இடையேயான நல்லுறவில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவுகின்ற மோதல் இன்னுமே தணிவு நிலைமைக்கு வரவில்லை. கனடாவில் தங்கியிருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்ததையடுத்தே இந்த இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் உருவாகியுள்ளது. படுகொலைச் சம்பவம் மற்றும் கனடா பிரதமரின் கருத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது.
காலிஸ்தான் தீவிரவாதியின் கொலைக்கு இந்தியா காரணமென்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு சொன்னாலும் கனடா எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
‘5 ஐஸ்’ என்ற உளவுக் கூட்டமைப்பில் இருந்து வந்த தகவலின் அடிப்படையிலேயே கனடா இந்தக் குற்றச்சாட்டைக் கூறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ‘5 ஐஸ்’ உளவு கூட்டமைப்பில் இருக்கும் அமெரிக்காவே, இந்த விவகாரத்தில் கனடாவுக்கு உளவுத் தகவல்களைக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், என்ன ஆதாரம், எந்த மாதிரியான தகவல்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவைப் பொறுத்தவரை நேரடியாகப் பெரியளவில் அந்நாடு தலையிடவில்லை. ஏனென்றால் ஒரு பக்கம் அமெரிக்காவும் கனடாவும் அண்டை நாடுகள் ஆகும். இருநாடுகளுமே நீண்ட கால உறவைக் கொண்டுள்ளன.
அமெரிக்க_ சீன உறவு ஆரோக்கியமானதாக இல்லை. மற்றொரு புறத்தில் சீனாவுக்குப் பதிலடி கொடுப்பதாயின் இந்தியாவின் நட்பும் அமெரிக்காவுக்குத் தேவையாகின்றது. இதனால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் இந்தியாவைக் கண்டிக்கவில்லை என்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள். அதேநேரம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மட்டும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இதற்கிடையே இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் கார்செட்டி இப்போது கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது கனடாவுடனான மோதல் போக்கு காரணமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைய வாய்ப்புள்ளதாகத் தனது குழுவிடம் எரிக் கார்செட்டி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுஒருபுறமிருக்க, மீண்டும் அறிவிப்பு வரும்வரை இந்திய அதிகாரிகளுடனான தொடர்புகளை அமெரிக்கா குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கார்செட்டி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான செய்தியை அமெரிக்கச் செய்தி நிறுவனமான ‘பொலிட்டிகோ’ வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா சற்று முன்னெச்சரிக்கையாக இருக்கவே விரும்புவதாக ‘பொலிட்டிகோ’ தெரிவித்துள்ளது.
பைடன் நிர்வாகத்தில் சிலர், பிரதமர் நரேந்திர மோடியுடனான அமெரிக்காவின் உறவு, அடுத்துவரும் காலத்தில் மிகவும் மோசமாகிவிடும் என்று நம்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது எனத் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது அதற்கு நேர்மாறான தகவலொன்று வந்துள்ளது. இது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆனாலும் இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதார நல்லுறவைக் கொண்டுள்ள நட்புநாடுகளாகும். இவ்விரு நாடுகளும் ஒன்றையொன்று பகைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு முற்றாகவே கிடையாதென்று சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டுக்கு கனடா எவ்வளவு தூரம் முக்கியமோ அவ்வளவு தூரம் இந்தியாவும் முக்கியம் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
எஸ்.சாரங்கன்