காலை பொழுதினில்
கவிதை கிறுக்க நினைத்து
காகிதத்தையும் பேனாவையும்
கையில் எடுத்தேன்
என்னவென்று எழுதுவது
எதைப்பற்றி எழுதுவது
எண்ணங்கள் அலைபாய
எழுத எத்தனித்தேன்
என்னைப் பற்றி எழுதவா
உன்னைப் பற்றி எழுதவா
என்னையும் உன்னையும் படைத்த
எம்மிறைவன் பற்றி எழுதவா
அருளாக அனுப்பப்பட்ட
அல்குர்ஆன் பற்றி எழுதவா
அருள் மறையை கற்றுத்தந்த
அண்ணல் நபி பற்றி எழுதவா
உயர்திணையில் எழுதவா
அஃறிணையில் எழுதவா
ஐந்தறிவு பற்றி எழுதவா
ஆறறிவு பற்றி எழுதவா
ஐம்பொறி பற்றி எழுதவா
ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி எழுதவா
பஞ்சபூதங்களைப் பற்றி எழுதவா
பஞ்சபாண்டவர்கள் பற்றி எழுதவா
வலை வீசி வசியம் செய்யும்
வலைத்தளங்களைப் பற்றி எழுதவா
வானளவில் உயர்ந்திருக்கும்
வண்ண தாமரை கோபுரம் பற்றி எழுதவா
தொல்லை தரும்
தொலைபேசி பற்றி எழுதவா
மொழிகளிலே சிறந்த மொழி
தமிழ் மொழி பற்றி எழுதவா
வரண்ட பூமிதனில் மழை பெய்து
வெள்ளம் பெருகுவதை பற்றி எழுதவா
வரட்சி நிமித்தம் நித்தம் இறக்கும்
உயிரினங்கள் பற்றி எழுதவா
தாய் பற்றி எழுதவா இல்லை
சேய் பற்றி எழுதவா
வனம் பற்றி எழுதவா இல்லை
வானம் பற்றி எழுதவா
படைத்தவன் பற்றி எழுதவா
படைப்பினங்கள் பற்றி எழுதவா
பாய்ந்து ஓடும் நதி பற்றி எழுதவா
பாராமல் போகும் காதலியை பற்றி எழுதவா
இயற்கை பற்றி எழுதவா
இயந்திரங்கள் பற்றி எழுதவா
இயக்கும் மனிதனைப் பற்றி எழுதவா
இவ்வையகம் பற்றி எழுதவா
இளைஞர்களின்
இன்றைய நிலை பற்றி எழுதவா
இல்லங்களில் இன்னல் படும்
முதியவர்களின் நிலை பற்றி எழுதவா
போர் தொடுத்த
மன்னர்களைப் பற்றி எழுதவா
பெயர் போன
மகாராஜாக்கள் பற்றி எழுதவா
கம்பன் பாடிய
கவி பற்றி எழுதவா
கவிக்கோ அப்துல் ரஹ்மானின்
கவிப்புலமை பற்றி எழுதவா
கார்மேகம் பொழியும்
காதல் பற்றி எழுதவா
காகத்தினதும் குயிலினதும்
கதை பற்றி எழுதவா
பணம் பற்றி எழுதவா
மனம் பற்றி எழுதவா
போதையில் பாதை மாறிப்போன
பேதைகள் பற்றி எழுதவா
அரசியல் அரசியல்வாதிகள்
ஆட்சி அதிகாரம் அராஜகம்
பாசம் நேசம் வேஷம் தேசம்
இதில் எதை பற்றி எழுத
நிலம் நிறம் நீதி நேர்மை
ஒலி ஒளி வலி வழி
அலை கலை மலை மாலை
இதில் எதைப் பற்றி எழுத
வைத்த பேனாவின்
மை கூட ஊறவில்லை
காலை போய்
வீட்டுவேலை தொடங்கிவிட்டது
எழுத நினைத்த எனக்கு
எதைப்பற்றி எழுதவென்று தெரியவில்லை
தெரிந்த நீங்கள்
தெரிவித்துச் சென்றால்
தெவிட்டா இன்பம்-அது
எதைப் பற்றி எழுத
1.1K
previous post