யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை, மாங்கொல்லை பிரதேசத்தில் இராணுவத்தினர் வெளியேறிய இடங்களிலுள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 33 வருடங்களுக்கும் மேலாக மாங்கொல்லை பிரதேசமானது இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவக் கட்டுப்பாட்டினுள் இருந்த நிலையில், அப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கடந்த ஜூன் மாத காலப்பகுதியில் அங்கிருந்து வெளியேறினர்.
இராணுவத்தினர் வெளியேறிய போதிலும், அப்பிரதேசம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாமையால், அப்பிரதேச மக்கள் மீள்குடியேற முடியாத நிலைமை உள்ளது.
இதனால் அப்பிரதேசம் ஆட்களற்ற சூனியப் பிரதேசமாக காணப்பட்டமையை திருட்டுக் கும்பல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வீடுகளை உடைத்து கதவு, ஜன்னல்கள், அதன் நிலைகள் மற்றும் இரும்புகள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக பொலிஸாரிடமும் பிரதேச செயலகத்திடமும் பொதுமக்கள் முறைப்பாடு செய்தும், திருட்டுக் கும்பல்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
யாழ். விசேட நிருபர்