புவியில் வாழ்கின்ற அத்தனை உயிரினங்களின் நிலவுகைக்கு தாவரங்கள் மிகவும் அத்தியாவசியமானவை ஆகும். மனிதனும் பிராணிகளும் இன்றி தாவரங்களால் பூமியில் வாழ்ந்துவிட முடியும். ஆனால் புவியில் தாவரங்கள் அழிந்து விடுமானால் மனிதனால் மட்டுமன்றி, மற்றைய உயிரினங்களாலும் வாழ்ந்து விட முடியாது. அத்தனை உயிரினங்களும் புவியில் அழிந்து போய்விடும்.
அதனால்தான் புவியில் மரங்களை அழித்தொழிக்க வேண்டாமென்றும், மரங்களை அதிகம் நடுமாறும் சூழலியலாளர்கள் எப்போதும் குரலெழுப்புகின்றனர். காடுகள் அழிக்கப்பட்டு வருவதையிட்டும், அதன் காரணமாக பூகோளம் வெப்பமடைவது குறித்தும் அவர்கள் கவலைப்படுகின்றனர்.
மரங்கள் நிழல் தருகின்றன, பூமியின் வெப்பநிலையை மாறாமல் பேணுவதற்கு உதவுகின்றன, வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட் வாயுவை உள்ளெடுத்துக் கொண்டு, ஒட்சிசனை வெளிவிடுகின்றன, மனிதன் உட்பட அத்தனை உயிரினங்களுக்கும் உணவை அளிக்கின்றன. இவ்வாறெல்லாம் தாவரங்கள் எமக்குத் தருகின்ற நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவேதான் மரங்கள் அதிகம் நடப்படுவதை உலகின் அத்தனை நாடுகளும் ஊக்குவித்து, அதில் கவனம் செலுத்துகின்றன. உலகின் பல நாடுகளில் வீதியின் இருமருங்கிலும் மரங்கள் நடப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளதை நாம் காணலாம். வீதியோரம் நிழலுக்காகவும் குளிர்ச்சிக்காகவும் அழகுக்காகவும் விருட்சமான மரங்கள் நடப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. கொழும்பு நகரிலும் அவ்வாறான பெருவிருட்சங்கள் பல இடங்களில் உள்ளன. கொழும்பு நகரின் சில இடங்களில் வீதியோரம் காணப்படுகின்ற சிலவகை மரங்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் நடப்பட்டவையாகும். நூற்றாண்டு காலத்துக்கு மேல் பழைமையான அம்மரங்கள் ஓங்கி வளர்ந்து பெருவிருட்சமாக அழகும் நிழலும் குளிர்ச்சியும் தருகின்றன.
ஆனால் அந்த அழகின் பின்னால் ஆபத்தும் ஒளிந்திருக்கின்றதென்பதை நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ள துயரமான சம்பவம் எமக்கெல்லாம் எச்சரிக்கை செய்திருக்கின்றது. கொள்ளுப்பிட்டியில் வீதியோரம் மரமொன்று திடீரெனச் சரிந்து இ.போ.ச பேருந்து ஒன்றின் மீது வீழ்ந்ததில் ஐந்து பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். எதிர்பாராமல் இடம்பெற்றுள்ள இச்சம்பவமானது பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக நாம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை பேரின் துயரில் நாம் பங்கு கொள்கின்றோம்.
அதேசமயம் இவ்வாறான சம்பவத்தை நாம் அலட்சியத்துடன் கடந்து சென்றுவிட முடியாது. நகரத்தில் மரங்களை வளர்ப்பதும் அழகுபார்ப்பதும் அவசியமென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அம்மரங்கள் எவ்வேளையிலாவது ஆபத்தை விளைவிக்கக் கூடியனவாக உள்ளனவா என்பதையிட்டு அலட்சியமாக இருந்துவிட முடியாதென்பதை இச்சம்பவம் எமக்கு உணர்த்தியிருக்கின்றது. அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் இது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் குறித்த எச்சரிக்கை எப்போதும் அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.