உக்ரைன்- ரஷ்யப் போர் புதிய திசையில் நகரத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய அதனை முழுநீளப் போராக மாற்றும் முயற்சியில் ரஷ்யாவும் மேற்குலக நாடுகளும் இயங்குகின்றன. ரஷ்ய-– உக்ரைன் போரை நீடிப்பதில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான நேட்டோ அணியினரும் அதிக கவனம் கொண்டுள்ளனர். ஐரோப்பாவின் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி இரண்டாம் உலக போர்ச்சூழலை நினைவு கொள்வதாகவே தெரிகிறது. இதனால் போர் ஒன்றுக்கான களத்தை ஐரோப்பா விரும்புகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இக்கட்டுரையும் மேற்கு -ரஷ்யப் போருக்கான சூழல் பற்றிய தேடலாக அமையவுள்ளது.
ஓன்று, ரஷ்யா தனது பாதுகாப்புச் செலவை 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. 28.09.2023 ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா இரட்டைப் போரை எதிர் கொண்டிருப்பதாகவும் அதாவது உக்ரைனை மட்டுமல்ல மேற்குல நாடுகளின் கூட்டணியையும் எதிர் கொண்டு போர் புரிய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் பாதுகாப்புச் செலவினத்தை 10.8 கோடி ரூபிளால் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட பாரிய அதிகரிப்பாகவே உள்ளது.
இரண்டு, அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் செய்த உக்ரைன் ஜனாதிபதி (21.09.2023) ஜெலன்ஸ்கி பாரிய இராணுவ நிதி உதவியையும் அதற்கான ஆயுத தளபாடங்களையும் பெற்றுக் கொண்டார். 128 மில்லியன் அ.டொ. நிதியுதவியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியாவிலுள்ள ரஷ்ய இராணுவ தளம் மீதான உக்ரைன் தாக்குதலுக்கு பின்னர் அதிக நம்பிக்கை உக்ரைன் இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் மீட்டெடுக்கப்படும் எனவும் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
மூன்று, அதேநேரம் ஜெலன்ஸ்கியின் கனடா விஜயம் அதிக முக்கியத்துவம் (22.09.2023) உடையதாக மாறியுள்ளது. ஜி-20 மாநாட்டை அடுத்து கனடா -இந்திய இராஜதந்திர முறுகல் ஏற்பட்டதுடன் ரஷ்யாவை கண்டிக்காத வகையில் கூட்டுப்பிரகடனம் வெளியானதை அடுத்து ஜெலன்ஸ்கியின் கனடா விஜயம் நிகழ்ந்துள்ளது. அதேவேளை ஜெலன்ஸ்கியுடன் கனடா சென்ற மூத்த நாஜி படைகளின் இராணுவ வீரர் கனடா பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டமையால் அதிக நெருக்கடியை கனடாப் பிரதமர் எதிர்கொண்டுள்ளார். அதற்காக அவர் இஸ்ரேலிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். மறுபக்கத்தில் உக்ரைன்- – கனடா உறவு ஜெலன்ஸ்கியின் விஜயத்தினால் பலமடைந்துள்ளதாகவே தெரிகிறது. கனடா நேட்டோவின் அங்கத்துவ நாடு என்ற வகையில் ஜெலன்ஸ்கியின் விஜயம் முக்கியமானதாக அமைந்துள்ளது.
நான்கு, பிரித்தானியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் (28.09.2023) கிரான்ட் ஹெப்ஸ் உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அடுத்துவரும் குளிர்காலத்துக்கு முன்னர் உக்ரைனின் வான் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என இரு தலைவர்களும் உரையாடியுள்ளனர். ரஷ்யாவின் வான் தாக்குதலை முறியடிக்கும் விதத்திலும் அதனை எதிர்கொள்ளும் நோக்குடனும் உக்ரைனை பலப்படுத்த வேண்டும் என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐந்து, ரஷ்யாவின் முன்னாள் பிரதமரும் ஜனாதிபதியாவும் விளங்கிய டிமிற்ரி மெட்வடோவ் மேற்கு நாடுகளின் கூட்டணியான நேட்டோ நாடுகளை நோக்கி எச்சரிக்கை செய்துள்ளார். முழுமையான போருக்கு தயாராகுமாறும் ரஷ்யா போருக்கு தயாராக (22.09.2023) உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் ரஷ்ய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ரஷ்யா உக்ரைனுடன் மட்டும் போர் புரியவில்லை அனைத்து மேற்கு நாடுகளுடனும் போர் புரிவதாகவும் நேட்டோவின் ஆயுத தளபாடங்களையும் அதன் போரியல் உத்திகளையும் ரஷ்யா எதிர் கொண்டு போர் புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு, ரஷ்யாவின் கூட்டு நாடான வடகொரியா தனது அணுவாயுதங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என அதன் தலைவர் கிம் ஜோன் உன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய பனிப்போர் ஒன்றுக்காக உலகம் தயாராகிவிட்டது. அதில் அமெரிக்காவை எதிர்கொள்வதற்கும் கொரியக் குடாவில் ஏற்பட்டுவரும் பதற்றத்தை கையாளவும் வடகொரியா தனது அணுவாயுதங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது ரஷ்ய விஜயத்தின் பின்னர் இத்தகைய தகவல் வெளியாகியுள்ளமை கவனத்திற்குரியதாகும். இத்தகைய தகவல்கள் அனைத்தும் ரஷ்யாவை மட்டுமல்லாது மேற்கு நாடுகளும் போருக்கு தயாராகும் சூழலை வெளிப்படுத்துவதாக தெரிகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு செலவீனம் பாரியளவில் அதிகரிக்கப்படுவதும் புதிய வகை ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற ரஷ்ய ஜனாதிபதியின் திட்டமிடலும் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் உக்ரைன் போரை எதிர் கொள்ள முடியாது அத்தகைய நகர்வுகளை மேற்கொள்கியதாக கருதினாலும் மேற்கு நாடுகளுடன் ஒரு போரை உக்ரைனுக்குள்ளால் ரஷ்யா நிகழ்த்தி வருகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். உக்ரைனின் அண்மைக்கால தாக்குதல்களால் ரஷ்யா போரில் அதிக நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிகிறது. ஆனால் மறுபக்கத்தில் மேற்கு ஊடகங்களும் நேட்டோவின் ஆயுதங்களும் உக்ரைனுக்கு கைகொடுப்பதாக அமைந்தாலும் களநிலையானது அடிக்கடி மாற்றத்தை எதிர் கொள்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவின் நகர்வுகளை அவதானித்தால் முழுநீள போருக்கு தயாராவதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். உக்ரைனுடன் நிகழ்த்தும் போர் என்பது ரஷ்யாவுக்கு சுலபமானதாக அமைந்தாலும் நேட்டோவுடன் நிகழ்த்தும் போரானது அத்தகையதாக அமைய வாய்பில்லை என்றே தெரிகிறது.
உக்ரையின் நேட்டோவில் இணைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே ரஷ்யா போரைத் தொடக்கியது. ஆனால் தற்போது உக்ரைன் இராணுவ ரீதியிலும் ஆயுததளபாட உதவி அடிப்படையிலும் நேட்டோ நாடாகவே இயங்குகிறது. தற்போது நேட்டோ எதிர் ரஷ்யா எனும் நிலையே காணப்படுகிறது. ஆனால் ஒரு வாய்ப்பு மட்டுமே ரஷ்யாவுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. அதாவது நேட்டோ படைகளும் ஆயுதங்களும் வெளிப்படையாக இல்லாது மறைமுகமாக வழங்கப்படுவதும் அதற்கு எதிராக ஒரு போரை ரஷ்யா நிகழ்த்துவதுமே முக்கியமான பக்கமாகும்.
ஏனைய தளத்தில் உக்ரைன் நேட்டோ நாடாகவே செயல்படுகிறது. இந்தப் போர் பிராந்தியத்தில் நேட்டோ மீதான தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளவும் வாய்ப்பினை தந்துள்ளதாகவே தெரிகிறது.
மறுபக்கத்தில் நேட்டோ அணியினதும் குறிப்பாக அமெரிக்காவினதும் உலகளாவிய வியூகம் பலவீனமடைந்துள்ளதாக விமர்சனங்கள் உண்டு. ஆனால் அமெரிக்காவும் அதன் இராணுவக் கூட்டணியும் ரஷ்யாவின் விஸ்தரிப்பினை தடுத்து விட்டதாகவும் ரஷ்ய, -சீன, -இந்தியக் கூட்டு பலவீனப்படுத்தப்பட்டு விட்டதாகவும் கருதுகிறது. ஏறக்குறைய இரண்டுமே அரங்கேறியுள்ளது. ஒருபக்கம் ரஷ்யாவின் பொருளாதாரம் நெருக்கடிக்குள் நகர்கிறது. மறுபக்கத்தில் இராணுவ ரீதியில் பாரிய சவால்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதேநேரம் தனது நட்புச் சக்திகளுடன் சுமுகமான உறவை பேணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் ஆட்சிக் கட்டமைப்பையும் குழப்பமாக்கியுள்ளது. புட்டினுக்கு பின்னர் ரஷ்யா என்ற கேள்வி அதிக நெருக்கடியை எதிர்கொள்ள முனைகிறதா என்ற சந்தேகத்தை தருகிறது. ஆனால் ரஷ்யாவின் உட்கட்டுமானம் அதிக குழப்பகரமானது அல்ல. அது உள்நாட்டுத் தேவைகளை நிரப்பீடு செய்யும் திறனுடையது. அதற்காக அந்த மக்கள் இரண்டாம் உலக மகா யுத்த காலத்து ரஷ்யர்கள் கிடையாது என்பதும் அமெரிக்கா மீதும் மேற்கு மீதும் அவர்கள் கொண்டுள்ள கோபம் தனித்துவமானதாக நீடிக்குமா என்பதும் கேள்வியாகவே உள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ அணியினரைப் பொறுத்தவரை ரஷ்ய, -உக்ரைன் போரால் பொருளாதார இழப்பீடுகள் அமைந்தாலும், அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலும் மேற்குலகத்தின் மேலாதிக்கத்தை பாதுகாப்பதில் கவனமாக செயல்படுகின்றன. ரஷ்யாவின் எழுச்சியானது மேற்குலகத்துக்கு ஆபத்தானதாக மாறும் நிலையை தடுத்துள்ளதாகவே அவர்கள் கருதுகின்றனர். ரஷ்யா தனது புவிசார் அரசியலை கட்டமைக்கும் முயற்சியில் பிராந்திய நாடுகளை மேற்கிடமிருந்து பிரிப்பதற்கும் ரஷ்யாவின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கும் முயன்றது. அதனையே சோவியத் யூனியனின் மீளுருவாக்கம் என்ற கோசத்தினால் மேற்கு முறியடித்துள்ளது. ஆனாலும் போலந்து உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதில்லை என்ற முடிவு அதிக குழப்பத்தை நேட்டோவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு பிராந்திய நாடுகள் செயல்படுமாயின் உக்ரைன் போர் நேட்டோவுக்கு சுமையாக மாறுவதுடன் உக்ரைனது தனிமை உறுதிப்படுத்தப்படும். ஏற்கனவே நேட்டோவுக்குள் குழப்பம் நிலவுகிறது. பிராந்திய நாடுகளும் குழப்படைந்தால் உக்ரைன் போர் மேற்குக்கு அபாயமாக அமையும். தற்போதைய நிலை மேலும் மோசமடையும். இவை யாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு இயங்கும் சீனா, ரஷ்ய – -உக்ரைன் போரில் சாதகத்தை அனுபவித்து வருகிறது. சீனா –அமெரிக்காவுடன் ஒரு பனிப்போரை எதிர்கொள்ளவே முனைகிறது. ரஷ்ய- உக்ரைன் போரின் விளைவும் உலகளாவிய ரீதியில் அதுவாகவே தெரிகிறது.
எனவே உலகம் முழுமையான போருக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தயாராகிறது என்பதை அவதானிக்க முடிகிறது. அதிலும் அணுவாயுதமே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றது. அது போராக அமைவதைவிட எச்சரிக்கையாக அமையலாம் என்ற எதிர்பார்க்கை காணப்படுகிறது. அமெரிக்காவின் போர் உத்திகள் மீளவும் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை கடந்தகாலத்திலும் நிகழ்ந்துள்ளன. இது அமெரிக்காவின் பலவீனத்தை மட்டுமல்ல அதன் உலகளாவிய வலுவை பலவீனப்படுத்துவதாகவே தெரிகிறது. ரஷ்ய – உக்ரைன் போர் பாரிய பொருளாதார நெருக்கடியை தந்துள்ளது மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் மீளவும் நாடுகளுக்கிடையிலும், முழுநீள போரையும் ஆரம்பிக்க முனைகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. ஐரோப்பா இரண்டாம் உலக போருக்கான சூழலை நோக்கி நகர்வதாகவே உணரப்படுகிறது.