கனடாவில் கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அரங்கேற்றிய தீவிரவாதத் தாக்குதல்களை இந்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே இராஜதந்திர மோதல் தற்போது நிலவி வரும் நிலையில், அவர் இந்தியாவில் அரங்கேற்றிய தீவிரவாத செயல்கள் குறித்து இந்தியா அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.
கனடாவில் செயற்படும் பல்வேறு காலிஸ்தான் அமைப்புகளின் தலைவராக செயல்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் கடந்த ஜூன் மாதம் கனடாவின் வான்கூவர் நகருக்கு அருகே மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவமானது கனடாவில் உள்ள காலிஸ்தான் அமைப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இத்தகைய சூழலில், ஹர்தீப் சிங்கின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக அறிவித்தார். அவரது கூற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, “எந்தவித ஆதாரமும் இல்லாமல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது” என தெரிவித்தது.
இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையே வார்த்தை மோதல் தொடர்ந்ததை அடுத்து, இந்தியா மற்றும் கனடாவில் உள்ள இருநாட்டுத் தூதரக அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, கனடாவில் வாழும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு காலிஸ்தான் அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இவ்வாறு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கனடாவில் கொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவில் அரங்கேற்றிய சதி வேலைகளையும், தீவிரவாத செயல்களையும் இந்திய அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பஞ்சாபின் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், காலிஸ்தான் பயங்கரவாதி குர்னேக் சிங்கால் அந்த இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டார். 1980-களிலும், 90-களிலும், காலிஸ்தான் கமாண்டோ படையில் இணைந்து பல சதி வேலைகளில் ஈடுட்டு வந்த ஹர்தீப் சிங், 1996-இல் கனடாவில் தஞ்சம் புகுந்தார்.
பின்னர் அங்குள்ள காலிஸ்தான் இயக்கங்களில் சேர்ந்து, அங்கிருந்தபடியே இந்தியாவில் பல தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றினார். பாகிஸ்தானுக்குச் சென்று ஆயுதப் பயிற்சி பெற்று திரும்பிய ஹர்தீப் சிங், பஞ்சாப்பில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த நிதி திரட்டினார்.
2014 ஆ-ம் ஆண்டு ஹரியானாவில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான தேரா தச்சா செளதாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டார். ஆனால் அவரால் இந்தியாவிற்கு வர முடியவில்லை என்பதால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
பஞ்சாப்பில் உள்ள காடையர் குழுக்களுக்கு பணம் கொடுத்து, காலிஸ்தான் இயக்கத்திற்கு எதிராக இருப்பவர்களை கொலை செய்தார்.
இவ்வாறு இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.
இதுஇவ்வாறிருக்ைகயில், கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பின் மோகா பகுதியைச் சேர்ந்தவர் சுகா துனேகே என்கிற சுக்தூல் சிங். கடந்த 2017 ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டு மூலம் அவர் கனடாவுக்கு தப்பிச்சென்றார். சுக்தூல் சிங் காலிஸ்தான் ஆதரவுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். காலிஸ்தான் சார்பு படையான டேவிந்தர் பாம்பிஹா கும்பலில் இணைந்து செயல்பட்டு வந்தார் சுக்தூல் சிங்.
மேலும் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் டேவிந்தர் பாம்பிஹா கும்பலுக்கு ஆதரவாக நிதியுதவி அளித்து வந்தார் சுக்தூல் சிங். இந்நிலையில் சுக்தூல் சிங் கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவின் வின்னிபெக் பகுதியில் இரண்டு கும்பலுக்கு இடையே இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் சுக்தூல் சிங் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடா உட்பட பல்வேறு நாடுகளிலும் உள்ளனர். இவர்கள் தனித்தனி குழுக்களாகவும் அமைப்பாகவும் உள்ளனர். ஆயுதங்களை கடத்துவது, போதைப்பொருட்களை கடத்துவது போன்ற முறைகேடு சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சுக்தூல் சிங் மீது பஞ்சாப் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் 20 இற்கும் மேற்பட்ட கொலை உள்ளிட்ட குற்றச்செயல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கனடாவில் இருந்தபடியே இந்தியாவில் பல்வேறு சதி செயல்களிலும் சுக்தூல் சிங் ஈடுபட்டு வந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.சாரங்கன்