உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணிகளின் பலம், பலவீனத்தை தீர்மானிப்பதில் காயங்களும் முக்கிய அம்சமாக இருக்கிறது. எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் தமது 15 பேர் கொண்ட வீரர் விபரத்தை வெளியிட்டிருக்கிறது. பெரும்பாலான அணிகளுக்கு அணித் தேர்வில் வீரர்களின் காயம் முக்கிய பிரச்சினையாக மாறி இருப்பது நன்றாகத் தெரிகிறது.
இலங்கை
இலங்கை அணி தனது முன்னணி வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க இன்றியே களமிறங்குகிறது. இருவரும் அண்மையில் நடந்த லங்கா பிரீமியர் லீக் போட்டியின்போது காயத்திற்கு உள்ளான நிலையில் அதில் இருந்து மீள முடியாமல்போயிருக்கிறது.
காயத்திற்கு உள்ளான லஹிரு குமார மற்றும் டில்ஷான் மதுஷங்க அணிக்குத் திருப்பியபோதும் ஆசிய கிண்ண போட்டியின்போது உபாதைக்கு ஆளான மஹீஷ் தீக்ஷனவின் நிலைமை பற்றி இன்னும் சற்று கவலை இருக்கிறது. என்றாலும் நடந்து முடிந்த ஆசிய கிண்ணத்தில் இந்த இழப்புகளோடேயே இலங்கை ஆடிய நிலையில் இறுதிப் போட்டி தவிர்த்து ஏனைய போட்டிகளில் சற்று நன்றாகவே ஆடியது.
எனவே, உலகக் கிண்ணத்திலும் இலங்கை அணியால் தக்குப்பிடிக்க முடியும் என்று நம்பலாம்.
தென்னாபிரிக்கா
எப்போதும் போல் தென்னாபிரிக்கவுக்கு உலகக் கிண்ண துரதிருஷ்டம் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே துரத்த ஆரம்பித்துவிட்டது. தென்னாபிரிக்காவின் இரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிட்ஜ் நொர்ட்ஜே மற்றும் சுசன்டா மகலா இருவரும் உபாதையால் உலகக் கிண்ணத்தில் இடம்பெறவில்லை.
குறிப்பாக மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் உலகின் அதிவேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நோர்ட்ஜேவின் காயம் அணிக்கு பேரிழப்பு. என்றாலும் அவர் 2019 இல் இங்கிலாந்தில் நடந்த கடந்த உலகக் கிண்ணத்திலும் உபாதைக்கு உள்ளாகி ஆடவில்லை.
அதேபோன்று பந்தை அதிகம் சுவிங் செய்பவரும் தேவைப்பட்டால் துடுப்பாட்டத்தில் பங்களிப்புச் செய்பவருமாக மகலா இருக்கிறார். இந்த இருவருக்கும் பதில் சகலதுறை வீரர் அன்டிலே பெஹலுக்வாயோ மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸ் அழைக்கப்பட்டிருப்பது மூலோபாய ரீதியில் கச்சிதமான முடிவு என்று தென்னாபிரிக்கா நம்புகிறது.
நியூசிலாந்து
கடந்த முறை உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை முன்னேறி இறுதி ஓவர் வரை பரபரப்புக் காட்டி தோற்ற நியூசிலாந்தின் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதீ உபாதையால் அவதிப்படுகிறார்கள்.
கடந்த ஐ.பி.எல் போட்டியின் போதும் உபாதைக்கு உள்ளான கேன் வில்லியம்சன் அதில் இருந்து மீண்டு வருகின்ற நிலையில், அணியில் இடம்பெறுவது இன்னும் நிச்சயமில்லை. டிம் செளதியின் காயம் இதனை விடவும் சற்று நம்பிக்கை தரக்கூடியது.
இருவரும் உலகக் கிண்ணத்திற்காக நியூசிலாந்து குழாத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் போட்டியில் பங்கேற்பதில் இன்னும் முழுமையாக உறுதியில்லை. எப்படி இருந்தபோதும் நியூசிலாந்து இம்முறை உலகக் கிண்ணத்திலும் சவாலான அணியாகவே இருக்கப்போகிறது.
இந்தியா
சொந்த நாட்டில் வலுவான அணியாக களமிறங்கும் இந்திய அணியில் காயங்கள் பெரிதாக இல்லை. காயம் ஏற்பட்டாலும் மாற்றாக அதற்கு சமமான திறமை படைத்த மற்றொரு வீரர் இருப்பார். விக்கெட் காப்பாளரான ரிசப் பாண்ட் வீதி விபத்தில் காயமடைந்து இன்னும் மீளாதபோதும் அது இந்திய அணியில் பெரிய தாக்கம் செலுத்துவதாக இல்லை.
ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட பதினைந்து பேர் கொண்ட குழாத்தில் சுழற்பந்து சகலதுறை வீரர் அக்சார் படேல் இருந்தார். ஆசிய கிண்ண போட்டியின் போது காயமடைந்த அவருக்கு ஆட முடியாது என்ற நிலையில் கடைசி நேரத்தில் அவருக்கு பதில் ரவிச்சந்தர் அஷ்வின் அழைக்கப்பட்டிருக்கிறார்.
எனவே, இந்தியாவுக்கு காயம் என்பது முட்டுக்கட்டையாக இருக்கப்போவதில்லை என்று கூற வேண்டும்.
பங்களாதேஷ்
உலகக் கிண்ணத்திற்கு சற்று தளம்பலுடன் தயாராகி வரும் பங்களாதேஷுக்கு பெரும் இழப்பு அதன் முன்னாள் அணித் தலைவர் தமீம் இக்பால் இல்லாதது. ஒருநாள் அணித் தலைமை பொறுப்பில் இருந்து விலகி, ஓய்வையும் அறிவித்து பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியபோதும் தமீம் இக்பாலை அவரது காயம் உலகக் கிண்ணம் ஆடாவிடாமல் தடுத்துவிட்டது.
அதேபோன்று முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இபாதொத் ஹுஸைனினால் அதில் இருந்து மீள முடியாமல் போயிருக்கிறது. என்றாலும் ஷகீப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணி திறமையை வெளிப்படுத்த தன்னளவில் வலுவான அணி ஒன்றுடனேயே களமிறங்குகிறது.
பாகிஸ்தான்
இந்தியாவில் உலகக் கிண்ணம் நடப்பதால் அதன் பிரதான போட்டியாளரான பாகிஸ்தான் மீது அதிக அவதானம் சென்றிருக்கிறது. பாகிஸ்தான் அணியின் முக்கிய பலம் அதன் வேகப்பந்து முகாம். என்றாலும் ஆசிய கிண்ணத்தின்போது தோள்பட்டை காயத்திற்கு உள்ளான நசீம் ஷா உலகக் கிண்ணத்தில் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஷஹீன்ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா இருவரும் புதுப்பந்தில் ஆரம்ப ஓவர்களை வீசுவது பாகிஸ்தானுக்கு எப்போது அதிரடி முடிவுகளை தரக்கூடியது. எனவே நசீம் ஷா இல்லாதது அணித் தலைவர் பாபர் அஸாமுக்கு பெரும் தலையிடிதான். என்றாலும் பாக். அணியின் திறமையை காயங்களை வைத்து கணிக்க முடியாது என்பதுவே உண்மை.
அவுஸ்திரேலியா
உலகக் கிண்ணம் நெருங்கும் வரை அவுஸ்திரேலிய அணியில் ஏகப்பட்ட காயங்கள் பற்றிய கவலை இருந்தது. ட்விஸ் ஹெட்டுக்கு கையில் காயம், ஸ்டீவ் ஸ்மித்துக்கு மணிக்கட்டில் காயம், பட் கம்மின்ஸுக்கு அதே மணிக்கட்டில் காயம், மிச்சல் ஸ்டார்கிற்கு இடுப்பு பகுதியில் காயம், கிளென் மெக்ஸ்வெல்லுக்கு வலது காலில் அசெளகரியம் என்று காயப் பட்டியல் நீண்டிருந்தது. என்றாலும் உலகக் கிண்ணத்திற்காக இவர்கள் முழுமையாக அல்லது நம்பிக்கை தரும் அளவுக்கு உடல் தகுதி பெற்றுவிட்டார்.
ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் காயத்தால் கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட அவருக்கு பதில் துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லாபுசாக்னே அழைக்கப்பட்டிருக்கிறார்.
எது எப்படி இருந்தபோதும், அவுஸ்திரேலியாவின் சவாலை எப்போதும் போல் எதிரணிகள் சந்திக்க வேண்டி இருக்கும்.
இங்கிலாந்து
நடப்பு உலகச் சம்பியனாக களமிறக்கும் இங்கிலாந்து அணிக்கு முக்கிய இழப்பு ஜேசன் ரோய் இல்லாதது. அதிரடி ஆரம்ப வீரரான ரோயின் ஆட்டம் கடந்த முறை இங்கிலாந்து கிண்ணத்தை வெல்ல உதவியது. என்றாலும் முதுகுப் பிடிப்பு உபாதையால் அவதியுறும் அவர் இம்முறை இங்கிலாந்து உலகக் கிண்ண குழாத்தில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதில் ஹரி ப்ரூக் அழைக்கப்பட்டிருக்கிறார்.
என்றாலும் கடந்த உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித்தந்த டெஸ்ட் அணித் தலைவர் பென் ஸ்டொக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் அணிக்குத் திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. எனவே தனது நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போதுமான பலத்துடனேயே இங்கிலாந்து களமிறங்குகிறது.
ஆப்கானிஸ்தான்
தொடர்ச்சியாக மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரிதாக காயங்கள் பற்றிய கவலை இல்லை. அனுபவம் பெற்ற வீரர்கள் மற்றும் திறமையான வீரர்களுடன் அது இம்முறை களமிறங்குகிறது. குறிப்பாக 2015இல் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது தொடக்கம் ஆடும் சில வீரர்கள் இம்முறை உலகக் கிண்ணத்திலும் களமிறங்குகிறார்கள். எனவே, உலகுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தானுக்கு இதுவே பொன்னான தருணம்.
நெதர்லாந்து
மேற்கிந்திய தீவுகள், சிம்பாப்வே போன்ற வலுவான அணிகளை பின் தள்ளி உலகக் கிண்ணத்தில் ஆட வந்திருக்கும் நெதர்லாந்து அணியில் தனிப்பட்ட வீரர்களின் சுக துக்கங்கள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படுவதாக இல்லை. இந்த ஆண்டு நடந்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் நீக்கப்பட்டிருந்த அனுபவம் பெற்ற ரொலொப் வான்டர் மேர்வ் மற்றும் கொலின் அக்ரமன் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
என்றாலும் நெதர்லாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிரெட் க்ளாசன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் டிம் பிரிங்கில் காயத்திற்கு உள்ளாகி இருப்பது அந்த அணியை பொறுத்தவரை பெரிய இழப்பு.