Home » இராஜினாமா கடிதம் இன்னமும் கிடைக்கவில்லை
நீதவான் சரவணராஜா பதவி விலகல்;

இராஜினாமா கடிதம் இன்னமும் கிடைக்கவில்லை

நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவிப்பு

by Damith Pushpika
October 1, 2023 6:14 am 0 comment

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை இராஜினாமா செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லையென, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். முல்லைத்தீவு நீதவானின் பதவி விலகல் தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலிலேயே, நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான தீர்ப்பை அடுத்து, உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா தனது பதவியிலிருந்து விலகி, நாட்டை விட்டும் வௌியேறுவதாக அறிவித்திருந்தார்.

தனது பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு செயலகத்துக்கு நீதவான் சரவணராஜா கடந்த 23ஆம் திகதி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லையெனவும், நீதி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஐந்து வழக்குகளுக்கு பிரதிவாதியாக நீதவான் ரி.சரவணராஜா பெயரிடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால், ஒரு நீதவானாக அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சரவணராஜாவுக்கு இருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கடந்த வாரம் கொழும்புக்கு பயணம் செய்ததாகவும் அவரது வாகனத்தை விற்பனை செய்துள்ளதாகவும், நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இது மட்டுமல்லாது சரவணராஜாவின் கொழும்பு பயணத்தின் போது, அவர் மேற்குலக நாடுகளின் தூதுவர்களை சந்தித்துள்ளதாகவும், இது தொடர்பாக தாம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதவானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அனைத்து நீதவான்களுக்கும் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division