போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பாக ரயில்வே சாரதி இந்திக்க தொடங்கொடவுக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தில் கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை வெளிட்டமையால் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, கொழும்பு மாவட்ட இலக்கம் 01 நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணிகளால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து விசாரணை நடைபெற்ற போதே, நீதிமன்றம் இந்த தடையுத்தரவை விதித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனத்திடம் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்திக்க தொடங்கொட பொய் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அமைச்சர் பந்துல குணவர்தன தனது சட்டத்தரணிகளினூடாக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி வி.கே.சொக்சி, டி.எஸ்.ரத்நாயக்க மற்றும் மினோலி அலெக்சாண்டர் ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழுவினர், சட்டத்தரணி தம்மிகாவின் ஆலோசனையின் பேரில் நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவுபடுத்தினர்.
இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நீதிமன்றம், ரயில்வே சாரதியான இந்திக்க தொடங்கொடவுக்கு எதிராக இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் அவர் எந்த விதத்திலும் பேச்சுவார்த்தைகளில் கருத்துகளை முன்வைத்தல், தாம் அல்லது வேறு நபர்களினூடாக நேரடியாக அல்லது மறைமுகமாக இழிவுபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அல்லது தொடர்ச்சியாக நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல், ஊடகங்கள் மூலமோ அல்லது சமூக வலைத்தளங்கள் மூலமோ அல்லது வேறுவழியில் முறைபாட்டாளர்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த விடயங்களையும் தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை கிடையாதென நீதிமன்றம் அந்த தடையுத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை ஒக்டோபர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இந்திக்க தொடங்கொடவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன, குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்திலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.