வெளிநாடு செல்வதற்காக வருகை தந்த பெண் ஒருவரின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமானசேவை பாதுகாப்பு பிரிவில் ஸ்கானிங் இயந்திரத்தை பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை, ஹீனடிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாடு செல்ல விமான நிலையம் வந்த பெண்ணின் தங்கமாலை மற்றும் பென்டனை இச்சந்தேக நபர் திருடியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், திருடியதாக கூறப்படும் தங்க மாலையை நகைக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்த போது, சந்தேகநபர் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் தங்கமாலையானது, விற்பனை செய்யப்பட்ட பின்னர் உருக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
மேலும், இந்தப் பெண்ணிடமிருந்து திருடிய பென்டன் மற்றும் இன்னுமொரு பெண்ணின் கைப்பையிலிருந்து திருடியதாக தெரிவிக்கப்படும் சிறியளவிலான தங்க மோதிரங்கள் மற்றுமொரு நகைக் கடையொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.