நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவெவ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பம்பஹின்ன, சமனலவெவ மற்றும் கல்தொட்டவினூடாக கூரகல புனித பூமி மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்றவற்றை பார்வையிட வரும் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு, சமனலவெவ மற்றும் கல்தொட்ட பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆற்றங்கரைகளில் கூடாரம் அமைத்து தங்குதல், செல்ஃபி எடுத்தல், நீராடுதல், மீன் பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் நில்வள கங்கை பெருக்கெடுத்துள்ளதை தொடர்ந்து, அங்கு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்துகளுக்கும் தடை ஏற்பட்டுள்ளது. அக்குரஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் பரகடுவ பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இந்த வீதியினூடான போக்குவரத்து மேலும் பாதிக்கப்படலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்குரஸ்ஸ – ஹொரகொடவினூடான மாத்தறை வீதியை பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அக்குரஸ்ஸ – சியம்பலாகொட வீதியின் பாணடுகம பகுதியும் நீரில் மூழ்கியுள்ளது. அக்குரஸ்ஸ – கம்புறுப்பிட்டிய வீதி மற்றும் அக்குரஸ்ஸ – மாகந்துர வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வாகனப் போக்குவரத்துகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.