- எம்மிடம் வளங்கள், தீர்வுகள் உள்ளன; எமக்கு தேவை உறுதிப்பாடு மட்டுமே
- Berlin Global மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
“2024ஆம் ஆண்டு என்பது நாம் செயற்பட வேண்டிய ஆண்டு. இன்றைய உலகளாவிய யதார்த்தங்களை சிறப்பாக பிரதிபலிக்கும் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு பயனுள்ள பிரதிநிதித்துவத்தை வழங்கும் ஒரு புதிய சர்வதேச திட்டத்தை நாம் கொண்டுவர வேண்டும். அதனை நாம் முன்வைக்க வேண்டும். எங்களிடம் வளங்கள் உள்ளன, எங்களிடம் தீர்வுகள் உள்ளன. அவற்றை செயற்படுத்துவதற்கான உறுதிப்பாடே எங்களுக்கு தேவை”
நாம் அதனை விரைவாக செய்ய வேண்டும். இதற்கு மேற்குலகுக்கும் சீனாவுக்குமிடையே ஆக்கபூர்வமான உரையாடல் தேவை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை தேவை. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்குமிடையே ஆக்கபூர்வமான உரையாடல் தேவை. இல்லையென்றால் நாம் முன்னேற முடியாதென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜேர்மனியின் பேர்லின் நகரில் கடந்த வியாழனன்று (28) நடைபெற்ற ‘பேர்லின் குளோபல்’ (Berlin Global) மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாடிய போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றிய போது,
2024ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் ‘ஒரே தீர்மானம் – ஒரே பாதை’ என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும் இதனால், தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இம்மாநாட்டில் ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. 2008ஆம் ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு, இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.
அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்கலனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.
அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.
வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புகள் இல்லை. அதன் விளைவாகவே இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்க தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்படும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.
இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உரமானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.
அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருத்தற்குரிய காரணமாகும்.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக, இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர், அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.
அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்துக்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.
2030ஆம் ஆண்டில் இலங்கைக்கு 26.5 டொலர் பில்லியன்கள் அவசியப்படும். சர்வதேச நாணய நிதியம் கூறுவதை போல நாம் அதிஷ்டமான நாடு என்றால், அடுத்த சில வருடங்களுக்குள் 3.5% பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும் என்றும் எதிர்பார்த்துள்ளோம். அதேபோல் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உலக அளவில் உள்ள தலைமைத்துவங்களும் தொடர்பாடல்களும் போதுமானதல்ல. அதனால் புதிய திட்டமிடல் ஒன்று அவசியப்படுகின்றது.
தற்போதுள்ள சர்வதேச நிதித் திட்டமிடல் 80 வருடங்களுக்கு முன்பாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் சில நாடுகள் வளர்ந்துவரும் பொருளாதாரத்துடன் உலக பொருளாதார வல்லுனர்களாக மாறியுள்ளதன் பலனாக பல்வேறு மாற்றங்களை அவதானிக்க முடிந்தது. இருப்பினும், சர்வதேச திட்டங்களுக்கமைய சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதுள்ள சர்வதேச திட்டமிடல்கள் கடன் நீடிப்பை கடினமாக்கியுள்ளன. அதனால் சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவோம்” எனத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.