‘நாம் எமது மதியைப் பயன்படுத்தியும், கலந்துரையாடல்கள் மூலமுமே பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இதனை விடுத்து மாணவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடாது. நாடு பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும் கல்வித்துறையைத் தொடர்ந்தும் முன்னேற்றிச் செல்வதற்கு அரசாங்கம் உறுதியுடன் உள்ளது’ என்று கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இலங்கையின் உயர் கல்வித்துறை வாய்ப்புக்களை விஸ்தரிப்பது குறித்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கே: கல்வியே மாணவர்களின் எதிர்காலமாகக் கருதப்படும் சூழ்நிலையில் உயர்கல்வியை நோக்கி மாணவர்கள் செல்லும் வாய்ப்புகள் பற்றி நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: பல தசாப்தங்களின் பின்னர் கல்வி என்பது தற்பொழுது சேவை மாத்திரமன்றி, அடிப்படை மனிதஉரிமைகளில் ஒன்று என்பது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியானது இலவசமாக அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை அமரர் கன்னங்கராவினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்காலத்துடன் ஒப்பிடுகையில் தற்பொழுது கல்வித்துறையானது இலங்கையிலும், உலகிலும் பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டதாக பரிணமித்துள்ளது.
கல்வியானது பொதுமக்கள் உடைமையாக்கப்பட்டுள்ளமையால் கட்டாயப் பாடசாலைக் கல்வி என்பதன் ஊடாக பாரபட்சமின்றி பல இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.
இலங்கையின் புள்ளிவிபரங்களை எடுத்துக் கொண்டால் சனத்தொகையில் 8.8 மில்லியன் பேர் பாடசாலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். இலங்கையில் காணப்படும் இயற்கை வளங்களுக்கு அப்பால் மனிதவளம் முக்கியமானதொன்றாக விளங்குகிறது. நாட்டில் சிறந்த மனித வளத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தக் கல்வித்துறை முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறான பின்னணியில் நாடு பொருளாதா ரீதியில் சவால்களை முன்னெடுத்திருந்தாலும் அரசாங்கம் கல்வித்துறையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களில் முதலாவது பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒன்றரை இலட்சம் மாணவர்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பட்டங்களைப் பெறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும் காணப்படுகின்றனர். சிறந்ததொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதலீடாகவே கல்விக்கான முதலீட்டை நாம் பார்க்கின்றோம்.
கே: உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை என்பன மாறுபட்டுவரும் சூழ்நிலையில், இதனை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
பதில்: இலங்கை தீவாக இருந்தாலும் உலக நாடுகளிலிருந்து தனிமைப்பட்டு நாம் முன்னேறிச் செல்ல முடியாது. உலகத்துடன் இணைந்து முன்னேறக்கூடிய கல்வித்துறையை நாம் உருவாக்க வேண்டும். ஜேர்மனின் பேர்லின் சுவர் உடைக்கப்பட்ட பின்னர் சந்தை தீர்மானிக்கும் அல்லது சந்தையால் தீர்மானிக்கப்படும் பொருளாதாரப் போக்கு ஒன்று உருவாகியது. நுகர்வுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாடொன்று காணப்படுகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இதன்போது, நுகர்வுக்கு ஏற்ற வகையிலான உற்பத்தி என வரும்போதே தகவல் தொழில்நுட்பம் என்ற விடயம் முன்னோக்கி நிற்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்பத்தை நோக்கி கல்வி செல்ல வேண்டும் என்ற நிலைப்பாடு பெரும்பாலும் காணப்படுகிறது.
அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டம் தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகிறது. உயர்தரத்தை முடித்த பின்னர் மாணவர்கள் வேலையின்றி இருப்பதைவிட, உயர்கல்வி கற்கும்போதே தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் கல்வி மறுசீரமைக்கப்பட வேண்டும் என கல்வியியலாளர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், கல்வி என்பதை தொழில்வாய்ப்பை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகப் பார்க்க முடியாது. ஒருவர் வளர்ச்சியடைந்து வரும்போது உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான மூளைப் பயிற்சியே கல்வியின் ஊடாக நாம் வழங்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். விமர்சன ரீதியான சிந்தனை மற்றும் பிரச்சினைத் தீர்வு என்பன கல்வியின் ஊடாக மாணர்களுக்குப் புகட்டப்பட வேண்டும். அத்துடன், மாணவர்கள் நாட்டின் பிரஜைகளாக வளர்ந்து வரும்போது அவர்களின் ஊடாக நாட்டுக்குப் பெற்றுக்கொள்ளக் கூடிய சேவைக்கு ஏற்ற வகையிலான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். எனவேதான் தொழில்வாய்ப்புக்களை மாத்திரம் இலக்குவைத்து இந்த மாணவ சமூகத்தைக் கட்டியெழுப்பக் கூடாது.
இலங்கையில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கலைத்துறையிலேயே அதிகமான மாணவர்கள் காணப்படுகின்றனர். ஆரம்பம் தொட்டு இலங்கை இடதுசாரிக் கொள்கையில் அதிக நாட்டம் காட்டி வந்தமையால் மனிதநேயம் தொடர்பான கலைத்துறை மீதான கற்பித்தல்களிலேயே ஈடுபாடு அதிகமாக இருந்தமையால் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கலைத்துறை சார்பான நிகழ்ச்சித்திட்டங்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன. கலைத்துறை என்பது ஒருவரைப் பூரணப்படுத்துவதற்கு அவசியமானது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் தகவல் தொழில்நுட்ப பட்டத்தைப் பெற்று இலட்சக்கணக்கான சம்பளத்தை ஒருவர் பெற்றுக் கொள்ளும்போது அவர்களுக்கான கலைப்படைப்புக்களை யார் மேற்கொள்வது? எனவே, கலைத்துறைக்கான தேவையை முற்றாக நிராகரித்துவிட முடியாது.
கே: இத்துறையை மேம்படுத்துவதற்குக் காணப்படும் சவால்கள் யாவை?
பதில்: இலங்கையின் கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் இதனைப் போல் தொழிற்சங்கங்கள் அதிகம் உள்ள வேறு துறையைக் காண முடியாது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், கொவிட் தொற்றுநோய், அதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி எனப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உயர்தரத்தைப் பூர்த்தி செய்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருந்தனர். தொழிற்சங்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இவ்வாறான தீர்மானத்தை எடுத்திருந்தனர். உலகில் இவ்வாறு இடம்பெற்ற முதல் சம்பவமாக இது அமையும் என நான் நினைக்கின்றேன். இது துரதிர்ஷ்டவசமானது. நாம் மதியைப் பயன்படுத்தியும், கலந்துரையாடல்கள் மூலமுமே பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இதனை விடுத்து மாணவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடாது.
கே: உயர்கல்வியைப் பொறுத்தவரையில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாகப் பெரும்பாலானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா?
பதில்: உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பில் பரந்த கருத்தாடல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் கல்வியியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இதனால் புத்திசாலிகள் இழக்கப்பட்டு வருகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழங்களில் இருக்க வேண்டிய விரிவுரையாளர்களின் எண்ணிக்கையில் 20 வீதப் பற்றாக்குறை காணப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.