உலகத்திலுள்ள அனைத்து பிள்ளைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட தினமான சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும். இன்று சர்வதேச சிறுவர் தினம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும் இலங்கையில் வறுமையில் வாடும் சிறுவர்கள் இத்தினத்தைக் எவ்வாறு கொண்டாடுவர்? பிள்ளை என்பவர் உண்மையில் மலர் போன்றவர். மலர் மென்மையானது, வாசனை மிக்கது, அழகானது. இவ்வுலகத்தில் வாழும் அனைத்து சிறுவர்களும் அவ்வாறானவர்களே.
பிள்ளைகள் சிறுவயதில் முன்பள்ளி பாடசாலையில் இருந்து ஆரம்பக் கல்வியை நிறைவு செய்யும்வரை சிறுவர் உலகத்தில் வலம் வருகின்றார்கள். பிள்ளையின் பார்வையில் இவ்வுலகம் மிகவும் அழகானது. மரஞ் செடிகள், உயிரினங்கள், வானம், காற்று போன்றன அவற்றின் அங்கங்களாகும். பிள்ளைகளிடத்தில் வைராக்கியம், பொறாமை காணப்படுவதில்லை. பிள்ளையின் இதயம் மிகவும் அழகானது. புன்னகை வெளிப்படையானது. வறுமை மற்றும் வசதிகளிக்கிடையிலான வேறுபாடுகள் பற்றி அவர்கள் அறிந்திருப்பதில்லை. எனினும் இன்று இலங்கையில் வாழும் பெரும்பாலான பிள்ளைகள் ‘வறுமை எனும் நச்சு வட்டத்துக்குள்’ வாழும் நிலையிலேயே உள்ளனர். வயிற்றுக்கு போசணைமிக்க உணவின்றியும் உடலுக்கு ஏற்ற உடையின்றியும், கல்விக்குத் தேவையான புத்தகங்கள் இன்றியும் இவ்வறுமையான பிள்ளைகள் இன்று இருதுருவங்களுக்கிடையில் கைவிடப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். விசேடமாக பாதையின் இருபுறங்களிலும், வறுமையான முடுக்குகளிலும் வாழும் சேரிப்புற மக்களின் பிள்ளைகளைப் போன்றே கிராமப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பிள்ளைகளிடத்திலும் இது வெளிப்படுகிறது. பிள்ளைகளுக்கு அழகானவற்றை கேட்டு, பார்த்து, தொட்டு அனுபவிக்கக்கூடிய பொருத்தமான பௌதிக உலகமும் கைநழுவிப் போயுள்ளது.
கொவிட் தொற்றினால் இந்நிலை மென்மேலும் தீவிரமடைந்தது. அத்தொற்று நிலையினால் பாடசாலைகளை மூடவேண்டிய நிலையை உருவாகியது. நிகழ்நிலை ஊடாக கல்வி வழங்கப்பட்டாலும் அதன் பயன்கள் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் வாழும் மத்தியத்தர வர்க்க பெற்றோரின் பிள்ளைகளுக்கே கிடைத்தன. அரை மற்றும் முழுமையான நகரம் போன்றே கிராமங்களில் வாழும் வறுமை மேலோங்கியுள்ள பிள்ளைகளுக்கு நிகழ்நிலை ஊடான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான கருவிகள், இணையப்பொதி போதுமானதாக இருக்கவில்லை. சிலருக்கு சமிக்ஞைகள் கூட கிடைக்கவில்லை. இந்நிலை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நீடித்தமையால் இப்பிள்ளைகளுக்கு கல்வி ரீதியில் ஏற்பட்ட பாதிப்புகளால் அவர்களால் அதனை நிறைவு செய்ய முடியாமல் போயுள்ளது.
வறுமையான பிள்ளைகளின் பெற்றோரும் ‘மிகமோசமான வறுமையால்’ பாதிக்கப்படவும் சில பெற்றோருக்கு நாளாந்தம் மிகக்குறைந்த வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொழில்களும் கூட இல்லாமல் போனமையால் நிலைமை மேலும் மோசமடைந்தது. அத்தோடு தற்போதைய நிலையில் நூல்களின் விலைகளும் வானுயர்ந்துள்ளது. இதனாலேயே ‘வறுமை நச்சு வட்டத்திற்கு’ ஆளாகியுள்ள பிள்ளைகள் அதிலிருந்து விடுபடுவதற்கு மூத்தோராகிய எம்மால் செய்ய முடிந்தது என்ன? கைவிட்ட கல்வியை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது? பரீட்சை மையத்தால் இப்பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வது எவ்வாறு? இப்பிள்ளைகளின் எதிர்கால கல்வியினை மிகவும் சிறந்த முறையில் மாற்றுவது எவ்வாறு? வறுமையினால் இப்பிள்ளைகளிடத்தில் ஏற்பட்டுள்ள மந்தபோசணை நிலையினை சாத்தியமான முறையில் மாற்றியமைப்பது எவ்வாறு? இவ்வாறான பல்வேறு வினாக்கள் ஒட்டுமொத்த வறுமை சமூகத்திலும் உருவாகியுள்ளது. அவ்வாறாயின் சமூக முறைமையினுள்ளேயே வாழும் மூத்தோராகிய நாம் இப்பாரிய பொருளாதாரப் பிரச்சினையின் மத்தியில் இந்த வறுமையான சமூகத்தின் பிள்ளைகளின் கல்வி நிலையினை மிகவும் சிறப்பான நிலையை நோக்கி மாற்றுவதற்கு என்ன செய்ய முடியும்?
உலகின் வளர்ச்சியடைந்த நாட்டுப் பிள்ளைகளின் கல்வியுடன் ஒப்பிடும்போது இலங்கையில் வாழும் வறுமையான பிள்ளைகளுக்காக மூத்தோராகிய எம்மால் செய்ய வேண்டிய சில விடயங்கள் உள்ளன. இன்று சிறிய மலராக இருக்கும் பிள்ளைகள் நாளை மூத்தோராகும்போது அவர்களை கல்வியால் பாதுகாத்து முழுமைப்படுத்த வேண்டும். இது மூத்தோராகிய எமது கடமையாகும்.
பாடசாலை நேரத்திற்குப் பின்னர், மேலதிக வகுப்புகளை விசேட நேர சூசிக்கு ஏற்ப பல்வேறு பாடங்களைக் கற்பிக்கவும், பாடத்திட்டத்தில் நிறைவுசெய்யப்பட வேண்டிய பாடங்களை மீளவும் நிறைவு செய்யவும், முடியுமாயின் மூத்தோரின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு இவ்வறுமையான பிள்ளைகளின் ‘மந்தபோசணை’ நிலையை இல்லாதொழிப்பதற்கும் போசணைமிக்க பகலுணவை பாடசாலையில் பெற்றுக்கொடுக்கவும், பிள்ளைகளுக்குத் தேவையான நூல்கள், பைகள், ஆடையணிகள், பாதணிகள் போன்றவற்றை கொடையுபகாரிகளிடம் இருந்து ஓரளவேணும் பெற்றுக்கொடுக்கவும் முடியும். தேசிய கல்வி நிறுவகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘நெணச’,‘குருகுலம்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் பல்வேறு பாடங்களின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள பாடங்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல், 1ஏபி பாடசாலைகளில் உள்ள பிரபல ஆசிரியர்களின் உதவிகளை வலயக் கல்விப் பணிமனையின் அனுமதியோடு பெற்றுக்கொண்டு பாடசாலை நேரம் தவிர்த்து மேலதிக வகுப்புகளை மேற்கொள்ளல் போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.
அத்தோடு பிள்ளைக்கு அழகியல் இரசனைக்காக சித்திரங்கள், நடனங்கள், இசை வகுப்புகள் மூலம் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்த முடியும். அப்போது சிறுவர் உள்ளங்களும் சமநிலை உடையதாக மாறக்கூடும்.
ரசிக பாலசூரிய, சிரேஷ்ட விரிவுரையாளர், திறந்த பாடசாலை அலகு, தேசிய கல்வி நிறுவகம், மஹரகம.