உலகில் எந்தவொரு நாடும் அந்நாட்டின் எதிர்கால அபிவிருத்தி அபிலாஷைகளை கருத்தில் கொண்டு தான் தனது கல்விக் கொள்கையை வகுக்கும். ஆனால் எமது நாட்டின் கல்விக்கொள்கை அவற்றைக் கருத்தில் கொண்டு தற்போதைய சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டதாக இல்லை. அதன் விளைவாகத் தான் தற்போதைய பல்கலைக்கழக மாணவர்கள் துரதிர்ஷ்டகர நிலைமைக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். ஆரம்பக்கல்வி முதல் 13 வருடங்கள் வரையும் கல்வி கற்று கடும் போட்டிமிக்க உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி அதிக புள்ளிகளுடன் சித்தியெய்தும் குறிப்பிட்ட தொகை மாணவர்களுக்கு மாத்திரம் தான் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறுகிறது. அப்படியிருந்தும் இம்மாணவர்கள் தொழில் வாய்ப்புக்காக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு முகம் கொடுக்கின்றார்கள். இந்நிலைக்கு இந்நாட்டின் உயர்கல்வி முறைமையில் காணப்படும் குறைபாடுகளே காரணமே அன்றி வேறில்லை.
இன்றைய காலகட்டத்தில் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி மாணவ சமூகம் முகம் கொடுத்துள்ள எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற தன்மைக்கும் சமூக அங்கீகாரம் வீழ்ச்சியடைவதற்கும் கல்வி கொள்கையை வகுக்கும் போது பயன்படுத்திய தூர நோக்கற்ற விடயங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. என்றாலும் தற்போதைய அரசாங்கம் பாடசாலைக் கல்வியை மாத்திரமல்லாமல் பல்கலைக்கழகக் கல்வியையும் மேலும் மேம்படுத்தும் நோக்கில் பாராட்டத்தக்க பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி, இந்நாட்டின் கல்வி முறைமையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை குறிப்பிட்டுக் கூறத்தக்க வேலைத்திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
கல்விக்கான உரிமை என்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையாகும். ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான பிரகடனத்தின் 26ஆவது ஷரத்தின் ஊடாகக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை அடிப்படை உரிமை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஊடாக ஒவ்வொரு பிள்ளையும் அடிப்படைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டாய உரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளது. அந்த உரிமை எந்தவித வரையறைகளுக்கும் உள்ளாகாத வகையில் பெற்றுக்கொள்ள முடியுமான உரிமை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்பிரகடனத்தை இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேநேரம், மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய சாசனத்தின் 13ஆம் 14ஆம் ஷரத்துகளின் ஊடாகவும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை அடிப்படை உரிமை என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பிலும் கல்வி அடிப்படை உரிமை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்நாட்டின் பல்கலைக்கழகக் கல்விக் கட்டமைப்பை மாத்திரமல்லாமல் முழுக் கல்வி முறைமையையும் மேம்படுத்தி இலவசக் கல்விக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் பாரிய நிதியொதுக்கீட்டுடன் அண்மைக்காலமாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பிரதிபலன்களில் ஒன்றாக 92 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவைப் பெற்றவர்களாக விளங்குகின்றனர். இது வளர்முக நாடொன்றில் எதிர்பார்க்க முடியாத எழுத்தறிவு வீதமாக இருப்பதோடு தெற்காசியாவிலேயே உயர் மட்ட எழுத்தறிவு வீதமும் கூட.
தற்போது நாட்டில் 15 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் கொழும்பு, பேராதனை, களனி, மொரட்டுவ, றுஹுனு, ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் முன்னணி பல்கலைக்கழகங்களாக விளங்குகின்றன. என்றாலும் உயர்கல்வித் துறையை மேலும் மேம்படுத்தி விஸ்தரிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் பயனாக சில உயர்கல்வி நிறுவனங்கள் பட்ட கற்கை நெறிகளை முன்னெடுத்து பட்டங்களை வழங்கும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
அதேநேரம், உலகில் அறிவின் கேந்திர நிலையமாக இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உழைத்து வருகின்றன.
இவ்வாறான சூழலில் சவுதி அரேபியாவின் நிதியுதவியில் தனியார் பல்கலைக்கழகமாக மட்டக்களப்பு தனியார் பல்லைக்கழகக் கல்லூரி புனானையில் அமைக்கப்பட்டது. ஆனால் இந்நாட்டின் வரலாற்றில் எந்தவொரு உயர்கல்வி நிறுவனமும் முகம் கொடுக்காத இடையூறுகளையும் தடங்கல்களையும் இக்கல்லூரி எதிர்கொண்டது. இது ஷரிஆ பல்லைக்கழகம் என்றும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் சம்பந்தம் என்றெல்லாம் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களால் அன்றைய அரசாங்கம் இப்பல்கலைக்கழகத்தை 2019இல் இராணுவத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து கொவிட் 19 தனிமைப்படுத்தல் மையமாகவும் கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையமாகவும் இப்பல்கலைக்கழகக் கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத் தலைவரான முன்னாள் ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் கூற்றுப்படி, ‘மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான 35 ஏக்கர் காணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் இப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2013இல் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் தொழிற்பயிற்சி நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழக கல்லூரி, 2014இல் பெற்றிக்கலோ பல்கலைக்கழகக் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதோடு, 2015இல் வர்த்தகங்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் பெற்றிக்கலோ கெம்பஸ் பிரைவேட் லிமிட்டட் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் 2016இல் பெற்றிக்கலோ கெம்பஸ் ஒப் ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இப்பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக சவுதி அரேபியாவின் அலி அப்துல்லாஹ் அல் ஜிபாலி மன்றத்தின் ஊடாக சலுகைக் கடனாக ஆறு தவணை அடிப்படையில் 3600 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்கடனை இப்பல்கலைக்கழகம் செயற்படத் தொடங்கி 15 வருடங்கள் கழிந்ததும் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
ஆனால் இப்பல்கலைக்கழகத்திற்காக செலவிடப்பட்டுள்ள மொத்த செலவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கலாநிதி ஹிஸ்புல்லாஹ், நவீன உலகுக்குப் பொருத்தமானதும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதுமான கற்கைநெறிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வசதிகளைக் கொண்டு இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுக்கவிலுள்ள ஸ்ரீ லங்கா தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்துடன் (Sri lanka Technological Campus) இணைந்து பொறியியல், தகவல் தொழில்நுட்பம், விவசாய தொழில்நுட்பம் போன்ற பல முக்கிய கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த கருத்திட்ட அறிக்கையில், 2019இல் 3670 மாணவர்களும் 2020ஆம் ஆண்டாகும் போது 5380 மாணவர்களும் என்றபடி 2025ஆம் ஆண்டாகும் போது 10 ஆயிரம் மாணவர்களை உள்வாங்குவது இலக்காகக் கொள்ளப்பட்டிருந்தது. என்றாலும் தவறான புரிதல்கள் மற்றும் பிழையான பார்வைகள் காரணமாக அரசாங்கம் இப்பல்கலைக்கழகத்தை பொறுப்பேற்றதோடு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டமை மற்றும் முன்னெடுத்து செல்லும் செயற்பாடுகள் குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் மூலம் விஷேட கணக்காய்வு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் தேசிய மட்டத்தில் பேசுபொருளாக இருந்த இப்பல்கலைக்கழகத்தை அமைத்தல் குறித்து பாராளுமன்றத்தின் பொதுநிறுவனங்கள் குறித்த செயற்குழுவும் விசாரணைகளை மேற்கொண்டது.
கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த இப்பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதாக 2020 நவம்பர் 27ஆம் திகதி அன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இப்பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
‘இவ்வாறு அரசாங்கத்தினால் இராணுவத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகம் குறித்து முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் உண்மைக்கு புறம்பான பொய்கள் என உறுதியானதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தைத் தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தேன். அக்கோரிக்கை குறித்து ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்தினார்’ என்றும் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகமொன்றுக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் வளங்களையும் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகம் மூடப்பட்டுக் கிடப்பது தேசிய குற்றமாக கருதப்படுகிறது. அதனால் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்கு இவ்வளத்தையும் வசதிகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. குறிப்பாக பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் தளமாக இப்பல்கலைக்கழகத்தை பயன்படுத்த முடியும். இந்நிலையில் இப்பல்கலைக்கழகத்தை சட்ட ரீதியாகவே கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி பல மட்ட சந்திப்புக்களும், பேச்சுவார்த்தைகளும், கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.
அந்த வகையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இராணுவத்தினர் இப்பல்கலைக்கழகத்தை மீண்டும் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கலாநிதி ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதிக்கும் இதன் நிமித்தம் ஒத்துழைப்பினை நல்கிய ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் விக்கும் லியனகே உட்பட இப்பல்லைக்கழகம் மீண்டும் எம்மிடம் கிடைக்கப்பெற உதவி, ஒத்துழைப்புக்களை நல்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இலங்கை தொழில்நுட்பவியல் கெம்பஸ் (SLTC) ஊடாக முன்னெடுக்கப்படும். குறிப்பாக பொறியியல், தொழில்நுட்பவியல், விவசாய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல கற்கை நெறிகளை ஆரம்பிக்க ஏற்கனவே உடன்படிக்கை செய்துள்ளோம். அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் மீண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் எஸ்.எல்.ரி.சி பல்லைக்கழகத்தினருடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம். இப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தை எஸ்.எல்.ரி.சி பல்லைக்கழகம் முன்னெடுக்கும். அதற்கேற்ப துணைவேந்தர், பீடாதிபதி, விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு, மாணவர்கள் உள்வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் எஸ்.எல்.ரி.சி மேற்கொள்ளும். விரைவில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆட்சேர்ப்பும் மாணவர் உள்வாங்கலும் இடம்பெறும்’ என்றும் குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், இவ்வருட இறுதிக்குள் இப்பல்கலைக்கழகம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படும்’ என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம் ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய இப் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்படும். அதன் ஊடாக ஜனாதிபதியின் கனவு நனவாவதோடு இலங்கையின் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிகளைக் கொண்ட முதலாவது பல்கலைக்கழகமாகவும் இப்பல்கலைக்கழகம் விளங்கும். உலகளாவிய ரீதியில் தற்போது செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிகள் வளர்ச்சி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உயர்கல்வி வழங்கக்கூடிய பல்கலைக்கழகமல்ல. மாறாக சகல இன, மத மாணவர்களுக்கும் இங்கு உயர்கல்வி பெற்றுக்கொடுக்கப்படுவதோடு கல்வி பெறும் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் தத்தம் சமய வழிபாடுகளில் ஈடுபடவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை முன்னாள் ஆளுநர்.
இவ்வாறான சூழலில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை முன்னாள் தகுதிகாண் அதிகாரியுமான மங்கள சேனரத்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்துடனும் அம்மாவட்ட மக்களுடனும் நீண்ட காலமாகத் தொடர்புகளை பேணிவரும் இவருடன் இப்பல்கலைக்கழகம் குறித்து கலந்துரையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் குறிப்பிடுகையில், ‘முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை 2005 முதல் நான் அறிவேன். அவர் நற்பண்புகளுடன் நெருங்கிப் பழகிச் செயற்படக் கூடியவராவார். அவர் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள், பொதுவசதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெரிதும் சேவையாற்றியுள்ளார். பள்ளிவாசல்களுக்கு மாத்திரமல்லாமல் பௌத்த விகாரைகள், இந்துக் கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பல்வேறு சேவைகளை அவர் செய்துள்ளார். வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கக்கூடியவராக உள்ளார்.
அவர் இப்பல்கலைக்கழகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளார். இது பாரியதொரு தொகையாகும். நாட்டுக்கு சுமை ஏற்படாத வகையில் சவுதி அரேபியாவில் இருந்து இம்முதலீட்டுத் தொகையை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
பொதுவாக சிலர் முதலீடுகளை மேற்கொள்வதற்காக பணத்துடன் வருவர். அவர்களது நேர காலத்தை நாம் வீணடிக்கக் கூடாது. அந்த முதலீடுகள் ஊடாக நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவே முயற்சிக்க வேண்டும்.
இருந்த போதிலும் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் விமர்சனங்கள் மேற்கொள்வதையுமே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். நாடொன்றின் முன்னேற்றத்திற்கு இவை பங்களிக்கக்கூடியவை அல்ல. எமது நாடு தொடர்ந்தும் பின்னடைந்து காணப்படுவதற்கு பணிகள் ஒழுங்குமுறையாக மேற்கொள்ளப்படாமையே காரணமாகும். அதன் விளைவாக பல முதலீடுகளைப் பயன்படுத்த முடியாத நிலைக்குக்கூட கடந்த காலங்களில் நாடு உள்ளானது.
இப்பல்லைக்கழகம் குறித்தும் பலவித விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டன. பேராதனை, யாழ்ப்பாணம், தென்கிழக்கு உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் அந்தந்த பிரதேச கலாசார அடையாளங்களுக்கு அமைய அமைக்கப்பட்டுள்ளமை போன்று இப்பல்கலைக்கழகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். ஆனால் இப்பல்கலைக்கழகத்தின் ஊடாக உச்ச பயனை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி நாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றி வருகின்றார். அதன் பயனாக எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நானறிந்த வகையில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகமானது ஒரு ஷரிஆ பல்கலைக்கழகம் அல்ல. இப்பல்லைக்கழகத்தின் நிர்வாகமும் முகாமைத்துவமும் எஸ்.எல்.ரி.சி இனால் முன்னெடுக்கப்படுகிறது. இது நாட்டுக்கு சுமையான பல்கலைக்கழகமும் அல்ல. சவுதி அரேபியாவில் நிதியுதவி பெற்று அமைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகம், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு உயர்கல்வி பெற்றுக்கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட போதிலும் முழு நாட்டு மாணவர்களும் இங்கு உயர்கல்வி பெற்றுக்கொள்ள முடியும் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
சுமார் பத்தாயிரம் மாணவர்கள் தங்கி இருந்து உயர் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களையும் வளங்களையும் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகத்தை இன, மத பேதங்களுக்கு அப்பால் எதிர்கால பரம்பரையினரின் சுபீட்சத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வது யுகத்தின் தேவை என்றால் அது மிகையாது.
மர்லின் மரிக்கார்