கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் நடைபெறுமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா? என்பது தொடர்பில் இன்று வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
கடந்த சில வாரங்களாகவே அது தொடர்பில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது. மாணவர்களின் வசதி கருதி அந்த பரீட்சை ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால் குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் காலம், அடுத்தடுத்து வரும் பரீட்சைகள், உயர்தர பரீட்சையையடுத்து பல்கலைக்கழகம் செல்லுதல், பட்டப் படிப்பு மேற்கொள்வதற்கான காலம் அதற்கான வயது என அனைத்தும் தாமதமாகும் என்றும், அவ்வாறானால் எதிர்காலத்தில் முழு கல்வித்துறையிலும் வெவ்வேறு சிக்கல்களை எதிர் நோக்க நேரும் என்றும் கல்விமான்கள் மத்தியிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன.
அது தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விரிவான விளக்கமொன்றை வழங்கினார். அத்துடன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம். பி ரோஹிணி கவிரத்ன சபையில் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் ரோஹிணி கவிரத்ன எம்பிக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் அனைவரதும் கவனம் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அவர் விரைவில் அறிவித்தலொன்றை வெளியிடுவார் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் பலரும் அது தொடர்பில் கேள்விகளை எழுப்பிய போதும் முதலில் அது தொடர்பில் கேள்வி எழுப்பிய ரோஹினி கவிரத்ன எம்பி:
பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். பிள்ளைகளின் உரிமைகளை இல்லாமல் செய்து விடக்கூடாது. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கஷ்டப் பிரதேசத்தில் காணப்படும் சில பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளின் பாடத்திட்டங்கள் இன்னும் கூட பூர்த்தி செய்யப்படவில்லை.
அத்துடன் இந்த ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இரண்டரை வருட உயர்தர வகுப்பில் கற்கும் காலமும் கிடைக்கவில்லை.
நவம்பர் மாதத்தில் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கும் போது குறுகிய காலத்தில் பாடங்களை முடிக்கவே அவர்கள் முயற்சிப்பர். அது மட்டுமன்றி இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்கான பாடப் பிரிவுகளை மாற்றும்போது அந்த மாணவர்களுக்கு இதனால் அநீதியும் இழைக்கப்படும்.இந்த விடயத்தில் அதிகாரிகளின் தவறுகளே நடந்துள்ளன.
இதனால் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள பரீட்சையை அந்த திகதியில் நடத்தாது பாடசாலை மூன்றாம் தவணை காலத்தை ஜனவரி 19ஆம் திகதியுடன் நிறைவு செய்து உயர்தரப் பரீட்சையை ஜனவரி 22 முதல் பெப்ரவரி 17 வரையில் நடத்த முடியும்.
அவ்வாறு முடிவை மேற்கொண்டால் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் பாடசாலை முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். அதேபோன்று அடுத்த வருடத்தின் மே மாதத்தில் பெறுபேறுகளை வெளியிடவும் முடியும்.
அவ்வாறு செய்தால் அடுத்த வருடத்தின் பரீட்சையை ஒக்டோபரில் நடத்தவும் முடியும். இதனால் பரீட்சையை ஜனவரி 22ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்று ரோஹிணி கவிரத்ன எம்பி அதை ஒரு ஆலோசனையாக முன் வைத்தார்.
இதன்போது சபையில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர:
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் ஒரு இலட்சம் வரையிலான மாணவர்கள் ஒரே குழுவாக இருந்து இந்த வேலைத்திட்டத்திற்கு பெரும் பலமாக உள்ளனர்.
குறிப்பாக 2010ஆம் ஆண்டு முதல் இந்த பரீட்சைக்காக அதிகளவான காலம் வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் 219 நாட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2021ல் 141 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2023ல் 84 நாட்களே வழங்கப்பட்டுள்ளன. இது அநீதியானது என்றார். அதனையடுத்து அது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்த எதிரணி சுயாதீன எம் பி வீரசுமன வீரசிங்க:
இது ஒரு இலட்சம் மாணவர்களுடன் தொடர்புடைய பிரச்சினை. இது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும் போது அவதானமாக செயற்பட வேண்டும். அது கவனத்திற்கொள்ளப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பரீட்சைகள் ஆணையாளர் உள்ளிட்ட துறை சார்ந்தோரை அழைத்து விரிவாக கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த விளக்கமளித்தார். அது தொடர்பில் அவர் தெரிவித்த போது,
ரோஹினி கவிரத்ன எம்பி சபையில் சிறந்த யோசனையொன்றை முன் வைத்துள்ளார். அதை நான் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன்.
அந்த யோசனை பரீட்சைகள் ஆணையாளரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர் விரைவில் அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்றும் அதன் போது அமைச்சர் தெரிவித்தார். பரிட்சைகள் ஆணையாளரின் கருத்துக்கு மறுநாள் அமைச்சர் சபையில் அந்த வகையில் இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடத்த தீர்மானித்திருந்த 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதிகள் தொடர்பான விபரங்கள் அடுத்த வாரத்தில் பரீட்சைகள் ஆணையாளரால் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன விடயங்களை ஆராய்ந்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு தீர்மானங்களை முன்னெடுப்பது அவசியமாகும். 2023 உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதத்தில் நடத்தவதற்கே முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2022 பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கையில் ஏற்பட்ட தடைகள், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டங்களால் அந்த நடவடிக்கைகள் 3 மாதங்கள் தாமதமடைந்தமையினால் பெறுபேறுகள் செப்டம்பரிலேயே வெளியாயின. எனினும் அதற்கு முன்னரே 2023 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில் பெறுபேறுகள் வெளியான பின்னரும் மேலும் 44,473 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இதன்படி மொத்தமாக 342,842 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இந்நிலையில் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பெருமளவானவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். பாராளுமன்றத்திலும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன்படி பரீட்சையை ஒத்தி வைக்கும் போது சில விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும். கடந்த வருடங்களில் கொவிட் உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பெற்றோர்களும் மாணவர்களுமே பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறாக பரீட்சைகள் தாமதமாகி, பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் பல்கலைக்கழக அனுமதி, உயர் கற்கைநெறிகளுக்கு உள்வாங்கல், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்தல் என்பனவும் தாமதமாகி குறித்த வயதில் கற்கைகளை தொடர முடியாது போயுள்ளது. அவ்வாறே இந்த வருடத்திலும் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நாம் அனைவருமே கவனத்திற் கொள்ள வேண்டும். அவ்வாறு தீர்மானம் எடுத்தால் 2024 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான சாதரண தரப் பரீட்சையை 2024 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஒத்திவைக்க நேரிடும்.
அதேபோன்று 2023ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2024 ஜூலையில் வெளியிடப்பட்டால் 2024ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இது போன்ற கூடுதல் காலம் வழங்கப்பட வேண்டும்.
அப்படியானால், 2024 உயர் தரப் பரீட்சை 2024 டிசம்பர் அல்லது 2025 ஜனவரி வரை தாமதமாகலாம்.
இவ்வாறு பாடசாலை பரீட்சைகள் மாற்றப்பட்டால் பாடசாலை கல்வி அட்டவணைகளும் தாமதமாகும். அதனால், முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதும் காலதாமதமாகலாம். உயர் தரப் பரீட்சை தாமதமாவதால் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் இரண்டு குழுக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டி வரும். இதனால் வகுப்பறைகளில் இடப் பிரச்சினைகள் ஏற்படும்.
அத்துடன் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதால் பல்கலைக்கழக அனுமதியும் தாமதமாகும். அத்துடன் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் புலமைப்பரிசில்களும் கிடைக்காமல் போகும். அத்துடன் உயர் டிப்ளேமா கற்கைகளுக்கு பிரவேசிப்பதும் தாமதமாகும். அதன் ஒரு பிரதிபலனாக அரச துறையில் வெற்றிடங்களுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளும் தாமதமாகலாம்.அதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றும் வயது 18 ஆக உள்ள நிலையில், கடந்த 3 வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளால் அது 18 வயதை கடந்துள்ளது.
எவ்வாறாயினும் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பெறுபேறுகள் வெளியான பின்னர் கிடைக்கப் பெற்ற மீண்டும் பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பங்கள் முன்னைய வருடங்களை விடவும் அதிகரித்த எண்ணிக்கையாக காணப்படுவதாலும் பரீட்சைக்கு தயாராவதற்கு போதுமான காலம் கிடைக்காமையினாலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கருத்திற்கொண்டு, பாடசாலை கால அட்டவணைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயர்தரப் பரீட்சை தினத்தை மறுசீரமைக்க பரீட்சைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி திருத்தப்பட்ட பரீட்சை திகதிகள் தொடர்பாக அடுத்த வாரமளவில் பரீட்சைகள் ஆணையாளர் வெளியிடுவார். எவ்வாறாயினும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் பெருமளவானவர்களும் அவர்களின் பெற்றோரும் பரீட்சையை ஒத்தி வைக்க வேண்டாம் என்று பல்வேறு முறைகளில் கோரிக்கைகளை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும் அநீதிக்குள்ளாகும் மாணவர்களுக்கு அந்த அநீதியை தவிர்த்துக் கொள்ளும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் ஒரு முடிவை எடுக்கும். அந்த திணைக்களத்துக்கு அதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சபையில் தெளிவு படுத்தினார்.