இலங்கையர்களில் ஏராளமானோர் மேற்குநாடுகளுக்கு புலம்பெயர்வதில் இப்போது அதிக நாட்டம் கொண்டுள்ளதைக் காண முடிகின்றது. எமது மக்களில் பலர் கனடாவுக்குச் சென்று வாழ்வதில் அதிக விருப்பம் கொண்டுள்ளனர். அவர்கள் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பலர் ஏற்கனவே கனடா உட்பட பல நாடுகளுக்குச் சென்றும் விட்டனர்.
யுத்தம் உச்சத்தில் நிலவிய காலகட்டத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து தமிழர்கள் இவ்வாறுதான் மேற்குநாடுகளுக்குப் படையெடுத்தனர். அதற்கான காரணம் வேறாகும். உயிர்ப்பாதுகாப்பு ஒன்றுதான் அவர்களது நோக்கமாக இருந்தது. வேறெந்தக் குறிக்ேகாளும் இன்றி யுத்த அகதிகளாகவே அவர்கள் அன்று புலம்பெயர்ந்தனர்.
ஆனால் இலங்கையில் இன்று யுத்தம் என்பது இல்லை, அமைதிச் சூழல் நிலவுகின்றது. இவ்வாறான சூழலில் ஏராளமானோர் மேற்குநாடுகளுக்குப் படையெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனரென்றால், அதற்கு ஒரேயொரு காரணம்தான் உள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காகவே அவர்கள் மேற்குநாடுகளில் வாழ்வதற்கு ஆசைப்படுகின்றனர்.
அந்நாடுகளுக்குச் சென்றால் வசதிவாய்ப்புகளுடன் வாழலாமென்று அவர்கள் நினைக்கின்றனர்.
போதுமான கல்வித்தகைமையும், தொழில்வாய்ப்பும் இல்லாதவர்கள் பணமீட்டும் நோக்கில் வேறுநாடுகளுக்குச் செல்ல விரும்புவதென்பது வேறுவிடயம். ஆனால் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் போன்ற உயர்தொழில்களில் உள்ளோரும் மேற்குநாடுகளை நாடுவதுதான் வியப்பாக உள்ளது. இலங்கையில் அவர்களுக்கு போதிய வருமானம் இருந்தும் கூட, அவர்கள் இலங்கையை விட்டு இடம்பெயர்ந்து மேற்குநாடுகளில் வாழ்வதற்கே ஆசைப்படுகின்றனர்.
புலம்பெயர விரும்புவதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் பொருளாதார நெருக்கடி ஆகும். வாழ்க்ைகச் செலவுகள் அதிகரித்து விட்டதாகவும், மேற்குநாடுகளுக்குச் சென்றால் அதிகவருமானம் பெற்று வசதியாக வாழலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றதென்பதற்காக தாய்நாட்டை கைவிட்டுச் செல்ல நினைப்பதென்பது சுயநலம் சார்ந்த சிந்தனையென்பதுதான் உண்மை.
மருத்துவர்கள், பொறியியலாளர்களை உருவாக்குவதற்காக இந்த நாடு எத்தனை தொகைப்பணம் செலவிட்டிருக்குமென்பதைப் பற்றியோ, அப்பணம் நாட்டு மக்களின் வரிப்பணம் என்பதையிட்டோ புலம்பெயர்வாசிகள் ஒருகணம் நினைத்துப் பார்ப்பதில்லை. அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் கற்றுத்தான் மருத்துவர்களும், பொறியியலாளர்களும் உருவாகினர் என்பதை மறந்துவிடலாகாது. அவர்களது நான்கைந்து வருடகால கற்கைநெறிக்காக அரசாங்கம் எத்தனை இலட்ச ரூபாவை செலவிட்டிருக்குமென்பதை பட்டம் பெற்றோர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ, பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு, அந்த வரிப்பணத்தைச் செலுத்திய மக்கள் நோயாளியாகிக் கிடக்ைகயில், அவர்களை மறந்தபடி வெளிநாடு செல்வோரை நினைக்ைகயில் மனம் வெதும்புகின்றது.
நாட்டில் பொருளாதார நெருக்கடியென்பது எக்காலமும் தொடரப் போவதில்லையென்பதை அவர்கள் புரிந்து கொள்வது அவசியம். என்றோ ஒருநாள் எமது நாடு மீண்டெழும் என்பதையும் அவர்கள் நினைவிற் கொள்ளல் வேண்டும்.