இலங்கையின் பொருளாதாரம் சிக்கலான தோற்றத்தைப் பெற்றுள்ளது. வருவாய் குறைந்துள்ளதுடன், அந்நிய செலாவணிப் பற்றாக்குறை வெளிநாட்டு வர்த்தகத்தைப் பாதித்துள்ளது. இதனால், பொதுமக்களின் வாழ்வு சிரமமாக உள்ளது.
கைக்குக் கிடைக்கும் வருமானம் அன்றாடச் செலவுக்கு ஈடுகொடுப்பதில்லை. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருவதுடன், சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. உணவு, மருந்து, எரிபொருள் ஆகியவற்றின் விலைவாசி உயர்வால் பாதிப்படைந்த மக்கள், துன்பமான நிலைமையை மாற்றக் கோருகின்றனர். பொருளாதார நெருக்கடியின் விளைவாக எழுந்துள்ள இந்நிலைமையைக் கட்டுப்படுத்த சர்வதேச நாணய நிதியம் உதவியுள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானங்களினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை தவிர்க்க முடியாதது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மத்தியில், ஏழை மக்கள் அதிக அழுத்தத்தில் உள்ளனர், குறைந்த வருமானம் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகர மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் உள்ள ஏராளமான மக்கள், வீடு கட்டுவதற்கு வாங்கிய கடனையும், கல்விக்கான செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், ஏழைகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்ைககள் முன்வைக்கப்படுகின்றன.
‘அஸ்வெசும’ என்ற உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் உதவி கிடைக்காத, ஆதரவற்றவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மூலம் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வாழ்வுக்கான போராட்டம் என்பது பொறுப்பு வாய்ந்த துறைகளின் கவனத்திற்கு உரிய விடயமாகும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அதிகளவு அர்ப்பணிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு பின்னர் பொருளாதாரம் ஸ்திரம் அடைந்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளின்படி, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் வருமானத்தை அதிகரிக்க ஒரு திட்டம் தேவை.
சர்வதேச அளவில் நவீன, போட்டித் தன்மை கொண்ட பொருளாதார அமைப்புகளைக் கருத்தில் கொண்டு, காலாவதியான அமைப்புகளைக் கைவிட வேண்டும். கோஷமிடும் அரசியலால் நாட்டுக்கும் மக்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்துள்ளன.
இலங்கையின் தேசிய வருமானத்தில் நூற்றுக்கு 80 வீதம் அரசாங்க ஊழியர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படுகிறது. கடன் வட்டியில் எழுபது சதவீதத்தை மீளச்செலுத்த வேண்டும். இந்த இரண்டு பிரிவுகளை மட்டும் கருத்தில் கொண்டாலும், இலங்கையின் பொருளாதாரத்தின் தலைவிதி தெளிவாகத் தெரிகிறது. தேசிய வருமானத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக பின்பற்றப்படும் கொள்கைகளே தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்துள்ளன. ஸ்திரப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், இது வெற்றிகரமாக செயல்படுத்தப்படாத பிரிவாகும்.
அத்தியாவசிய சேவைகளின் விலைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன, மேலும் இந்த நிறுவனங்களின் செயல்திறனின்மை, முகாமைத்துவ பலவீனம். ஊழல் மற்றும் வீண்விரயம் போன்ற அனைத்து சுமைகளும் நுகர்வோர் மீது சுமத்தப்படுகின்றன. ஒரு யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கான செலவு மற்றும் கட்டணம் அல்லது எரிபொருள் இறக்குமதி செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கட்டணங்களை நிர்ணயிப்பதில் நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமத்தை புறக்கணிப்பது பொருத்தமானதல்ல. நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய உற்பத்திகளைப் பயன்படுத்தும் சர்வதேச சமூகம் எரிபொருள் செலவைக் குறைக்கும் முறைகளைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை இலங்கையை விட குறைவு. கைத்தொலைபேசி டேட்டாவிற்கு மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. குறைந்த விலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கும் நோக்கில் புதிய முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் செலவுகள் குறைக்கப்படும் போது சமூகம் பயன்பெறுகிறது. பொதுப்போக்குவரத்தில் தள்ளுபடி கட்டணம் உண்டு. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். அரச திட்டங்களை நடத்துவதில் இருந்து அரசாங்கம் பின்வாங்கி முக்கிய பொருளாதார மையங்கள் கூட தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை மக்கள் அரச நிறுவனங்களைப் பாதுகாத்து அவற்றின் வேறுபாடுகளை ஈடுசெய்ய உலகின் ஏனைய நாடுகளில் உள்ள போட்டி முறைமைகளை ஆராய வேண்டும். சில அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை தேசிய வளங்கள் என்று அழைக்கின்றனர். அவற்றின் பலவீனங்கள், பொருளாதாரத்திற்கு செய்யும் கேடு மற்றும் மக்கள் மீது செலுத்தும் அழுத்தம் போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஸ்ரீலங்கா டெலிகொம் மறுசீரமைப்பின் பின்னர் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அடைந்துள்ள முன்னேற்றத்தை கருத்தில் கொள்வது பொருத்தமானது. இங்கே இரண்டாவது நடவடிக்கைக்காக முடிவெடுப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஐந்தாம் தலைமுறை வேகமான தரவு பரிமாற்றத்துடன் உட்கட்டமைப்பைப் பெறலாம். பொருளாதாரம் ஸ்திரமான பிறகு, சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
வருமானத்தை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை விரைவுபடுத்தவும் முதலீடுகள் தேவை. தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை அதிகரிப்பதோடு ஏற்றுமதி உற்பத்திக்கான திட்டமொன்று தேவை. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தொழில்முனைவோருக்கு புதிய முதலீடுகளுக்கு இடம் தேவை. இது வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அரசின் வரி வருவாயை அதிகரிக்கலாம். நாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பம் கிடைக்கும். தற்போதுள்ள சிக்கலான வரி முறைகள், அதிகாரத்துவம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பு இல்லாமை என்பன முதலீட்டிற்கு உகந்தவை அல்ல. மேலும் வர்த்தகத்துக்கு அதிக வரிகள் விதிக்கப்படுகின்றன. அவற்றில் வேலை செய்யும் முகாமையாளர்களுக்கு சம்பாதிக்கும் போது செலுத்தும் வரியை அதிகளவு செலுத்த வேண்டியுள்ளது. திறமையானவர்கள் இதனை தாங்க முடியாது வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.
பெட்ரோலியம், தண்ணீர் கட்டணங்களின்படி, கைத்தொழில், விவசாயம் மற்றும் சேவைத் துறைகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல்வேறு வழிகளில் வணிகங்களையும், தொழில்களையும் பாதித்துள்ளன. முதலீடு செய்வதற்கு பதிலாக, வங்கியில் பணத்தை வைப்பு செய்து வட்டி பெறலாம். மற்றைய நாடுகளில் குறைந்த செலவில் தொழில் தொடங்கலாம் அதற்கு பங்களாதேஷும் வியட்நாமும் உதாரணம். கடந்த ஆண்டு பங்களாதேசத்தின் ஆடை ஏற்றுமதி வருமானம் 50 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். பல இலங்கையர்கள் அங்கு ஆடைத் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றனர். பங்களாதேசத்துக்கு வியாபாரத்தை கொண்டு செல்வது குறித்து ஆராய வேண்டும்.
தமிழில்: வீ.ஆர்.வயலட்