இலங்கையின் ஆற்றல்மிக்க எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தனது அதிகாரபூர்வ நுழைவை அறிவித்தது சினோபெக்.
இந்த முக்கியமான சந்தர்ப்பம் இலங்கையின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் ஆரம்பத்தையும் குறித்தது.
இந்த நுழைவுடன், சினோபெக் அதன் நன்மைகளை முழுமையாக வழங்குவதற்கும், நாட்டிற்கு நிலையான, நீடித்த மற்றும் உயர்தர எண்ணெய் தயாரிப்புகளை வழங்குவதற்கும், விநியோகஸ்தர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆற்றல் ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது.
சினோபெக் மற்றும் இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக் இலங்கை முழுவதும் தற்போதுள்ள 150 நிரப்பு நிலையங்களை உரிமையாக்குவதற்கும் மேலும் 50 நிரப்பு நிலையங்களில் முதலீடு செய்வதற்கும் 20 வருட உரிமத்தைப் பெற்றுள்ளது.
சினோபெக், இலங்கை மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு வலுவூட்டுவதற்காக, எண்ணெய் வகைகள் கொள்வனவு, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றின் முழு செயல்முறைக்கும் சேவை செய்யும் திறனை தொடர்ந்தும் மேம்படுத்தும்.
உலகின் மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனமாகப் புகழ்பெற்று, வருடாந்த உற்பத்தித் திறனை 250 மில்லியன் தொன்கள் தாண்டிய பெருமையுடன், சினோபெக், அதன் நுகர்வோரின் தேவைக்கேற்ப உயர்மட்ட எரிபொருள் தயாரிப்புகளின் நிலையான விநியோகத்துக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக, அதன் பரந்த வளங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக வலிமையைப் பயன்படுத்த தயாராக உள்ளது. நிலையான மற்றும் உயர்தர எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கான இந்த அர்ப்பணிப்பு இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிப்பதுடன் மட்டுமல்லாமல் மற்றைய தொழில்துறைகளின் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
சினோபெக் புதுப்பிக்கப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகளுடன் உரிமம் பெற்ற பெற்றோல் நிலையங்களின் முறையான மாற்றத்தைத் தொடங்கியுள்ளது.
இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சூழலை படிப்படியாக மேம்படுத்துவதற்கு வசதிகள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்தி, அவற்றின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற செயல்பாட்டை உறுதிசெய்து, விநியோகத்தர்களுடன் ஒப்புக்கொண்டபடி, தளம் மாற்றும் திட்டத்தை நிறுவனம் ஆரம்பிக்கவுள்ள அதேவேளை, சினோபெக் மும்மொழி வாடிக்கையாளர் சேவையை அறிமுகப்படுத்துவதுடன், நிரப்பு நிலையங்களின் சேவைத் தரம் மற்றும் நுகர்வோரின் சேவை அனுபவத்தை மேம்படுத்தவுள்ளது.