உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இருப்பது இன்னும் ஒரு வாரம் தான். போட்டிகளில் பங்கேற்பதற்கு இலங்கை அணி வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி இந்தியாவை நோக்கி புறப்படவிருக்கிறது. ஆனால், முழுமையான திருப்தியோடும் உற்சாகத்தோடும் இந்தியா செல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஏகப்பட்ட குழப்பங்களுக்கு பின்னரே இலங்கை அணியின் உலகக் கிண்ண பயணம் ஆரம்பிக்கிறது.
ஆரம்பத்தில் தகுதிகாண் போட்டியில் ஆடியே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற வேண்டும் என்று இருந்தபோது சிம்பாப்வே சென்று அனைத்துப் போட்டியிலும் வெற்றியீட்டி தகுதியை உறுதி செய்து கொண்ட இலங்கை ஆசிய கிண்ண இறுதிப் போட்டி வரையில் தனது நிலை பற்றி அளவுக்கு விஞ்சிய உத்வேகத்துடனேயே இருந்தது.
அதாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வெற்றியீட்டி அந்த சாதனைப் பட்டியலில் அவுஸ்திரேலியாவுக்கு (21) அடுத்து இரண்டாவது இடத்தை பிடிப்பது என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது.
என்றாலும் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிவிட்டது. கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டி அனைத்தையும் மாற்றியது. வெறுமனே 50 ஓட்டங்களுக்கு சுருண்டு இந்தியாவிடம் 10 விக்கெட்டுகளால் தோற்பது என்பது இதுவரை வந்த பயணத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய தருணமாகிவிட்டது.
என்றாலும் அதற்கு போதுமான அவகாசம் இல்லை. உலகக் கிண்ணத்தை காலடியில் வைத்துக்கொண்டு அதிரடி முடிவுகளை எடுக்க முடியாது. குறிப்பாக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க மீதே பரவலான விமர்சனங்கள் எழுந்தன.
தொடர்ந்து துடுப்பட்டத்தில் சோபிக்கத் தவறிவருவது, ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் அவர் எடுத்த முடிவுகள், அவரது துடுப்பாட்டம் என்று தசுன் மீது ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன.
கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான அதிரடி சதம் பெற்ற பின் அவர் துடுப்பை சரியாக சுழற்றவே இல்லை. கடைசியாக ஆடிய 17 இன்னிங்ஸ்களில் ஒரு அரைச் சதத்தை கூட பெறவில்லை. அதிகட்சமாக பெற்ற ஓட்டங்களே 31 தான். பந்துவீச்சில் அவ்வப்போது சோபித்ததற்கு என்ன அணித் தலைவருக்கு அப்பால் அவர் அணியில் நிலையாக சோபித்ததில்லை.
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவரது முடிவும் பொதுவாக விமர்சனத்திற்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளானது. என்றாலும் இவ்வாறான விமர்சனங்கள் என்பது நின்றாலும் குற்றம்… நடந்தாலும் குற்றம்… என்ற ரகத்தை சேர்ந்தது என்பதால் அதனை பெரிதாகக் கருத்தில்கொள்ள முடியாதில்லை.
என்றாலும் தசுன் ஷானக்கவின் தலைமை பற்றி பெரிதாக கேள்வி எழுந்தது என்பது மாத்திரம் நிச்சயம். ஒரு கட்டத்தில் அவரை அணித் தலைமை பதவியில் இருந்து நீக்குவது என்பது உறுதியாகி இருந்தது. அதாவது கடந்த புதன்கிழமை (20) இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் உலகக் கிண்ண அணித் தேர்வுக்காக ஒன்று கூடியபோது தசுன் ஷானக்கவை நீக்கவிருப்பதாக அரசல் புரசலான செய்திகளும் கசிந்தன.
அது உண்மையாகக் கூட இருந்தது. பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழுவினரின் சந்திப்பில் தசுனை நீக்குவது தொடர்பில் உறுதியான கருத்துகள் எழுந்திருக்கின்றன. தேர்வாளர்கள் இருவர் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகவும் தெரிகிறது. என்றாலும் கடைசி நேரத்தில் தசுன் ஷானக்கவை உலகக் கிண்ணத்தில் அணித் தலைவராக நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
உண்மையில் விரும்பியோ விரும்பாமலோ இப்போது அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய முடியாது. அதுவும் அணித் தலைமையை மாற்றுவதென்பது முதிர்ச்சியற்ற வேலை. தசுன் ஷானக்கவின் தனிப்பட்ட ஆட்டத்தில் குறைபாடு இருந்தபோதும் அணித் தலைவராக அவரது நடத்தையை குறை சொல்ல முடியாது.
அணி வீழ்ந்திருந்தபோது அதனை கட்டி எழுப்பியதில் தசுன் ஷானக்கவின் பங்கு மிக முக்கியமானது. இப்போது ஸ்திரமான நிலையில் இருந்தபோதும் மஹேல ஜயவர்தன மற்றும் சங்கக்காரவின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை அணி வீழ்ச்சியின் அதலபாதாளத்தையே தொட்டது. தசுனின் தலைமைக்கு பின்னரே அணி ஸ்திரமான நிலைக்கு வந்திருக்கிறது.
என்றாலும் அண்மைக் காலத்தில் இலங்கை அணியின்் போட்டி அட்டவணையை பார்த்தால் வலுவான அணிகள் எதிர்ப்படவில்லை. எனவே அதனால் தொடர்ச்சியான வெற்றிகளை குவிக்க முடிந்தது. அதாவது இலங்கை அணி 13 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியீட்டி சாதனை படைத்தது என்று கூறியபோதும் அது வெற்றியீட்டிய அணிகள் என்று பார்த்தால் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், அயர்லாந்து, நெதர்லாந்து சிம்பாப்வே ஆகிய நாடுகள் தான். இந்தக் காலத்தில் சற்று வலுவான பங்களாதேஷையும் தொடர்ந்து பாகிஸ்தானையும் வென்றது மாத்திரமே முக்கியமான வெற்றிகள்.
வலுவான இந்தியாவை எதிர்கொண்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கையால் தோல்வியை சந்திக்க முடிந்தது.
எனவே, இந்த சாதனையை வைத்து உலகக் கிண்ணத்திற்கு வலுவாக தயாராகிவிட்டதாக குறிப்பிட முடியாது. மற்றபடி இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது ஒரு வகையில் உலகக் கிண்ணத்திற்கு தயாராவதற்கு உதவுவதாகவே இருக்கும்.