அன்னையின் கருவறையில்
அரிவைக்கே முதலிடம்!
ஆண்டவன் கருவறையில்
அவளுக்கே தனியிடம்!
தன்னை வருத்தித்
தலை நிமிர்வாளே பாரிடம்!
தரணியிலே பெறுவாளே
துணிவாலே பேரிடம்!
முன்னை வினைகடந்து
மிளிர்வாளே ஊரிடம்!
முன்னேற்ற வழியதனை
மொழிவாளே பலரிடம்!
ஆண்மையின் அடக்குமுறைகளை
உடைப்பாளே தங்கையாள்!
அகிலத்துத் துரோகங்களை
அறுத்தெறிவாளே நங்கையாள்!
பெண்மையின் வல்லமைகளைப்
பெருக்குவாளே பெருந்தகையாள்!
புல்லர்களின் வன்முறைகளைப்
பொசுக்குவாளே
காரிகையாள்!
நன்மைகளையே தேடுவாளே
நவயுகத்துத் தேவிகையாள்!
நடுங்கா நெஞ்சுடையவளே
நட்சத்திர தேவதையாள்!
அடுப்படியிலே படைப்பாளே
அனுதினமும் அமுதை!
ஆக்கியே காப்பாளே
அன்புடனே அறிவை!
எடுப்பாகவே நிற்பாளே
எங்குமே நிறைந்து!
ஏக்கதாக்கம் விலக்கிடவே
நடப்பாளே விரைந்து!
நடுவாளே நடுகல்லை
நாடாளத் துணிந்து!
நீள்வானிலே விண்கலமும்
செலுத்துவாளே தனித்து!