கொழும்புத் துறைமுக நகரம் நாளை மறுதினம் (26) பல சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படுமென, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
26ஆம் திகதியன்று டுபாய், அபுதாபி ஆகிய நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு கொழும்புத் துறைமுக நகரம் உத்தியோகபூவர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இந்நிகழ்வில் விசேட அதிதியாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், கொழும்புத் துறைமுக நகரத்தின் பெயரை ‘கொழும்பு நிதி நகரம்’ என மாற்றியமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“கொழும்புத் துறைமுக பொருளாதார நகரம், இலங்கையின் பிரதான முதலீட்டு வலயமாக காணப்படுகிறது. 269 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள இந்த துறைமுக நகரம், ஐந்து பிரதான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 19 வர்த்தக வலயங்களையும் 44 பொது வலயங்களையும் உள்ளடக்கியுள்ளது. 19 வர்த்தக வலயங்களை முதன்மைப்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 17 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, கொழும்புத் துறைமுக பொருளாதார நகரத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. அதனால் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்ட சீன நிறுவனத்துக்கு மேலதிகமாக ஒரு தொகை நிலப்பரப்பை வழங்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அபிவிருத்தி கட்டுப்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளை அதிகமாக பெற்றுக்கொடுக்கும் திட்டமாக கொழும்புத் துறைமுக பொருளாதார நகரம் காணப்படுவதால், எதிர்க்கட்சிகளில் உள்ளவர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்பதே எமது நம்பிக்கை. கொழும்புத் துறைமுக நகரத்தின் பெயர் ‘கொழும்பு நிதி நகரம்’ என்று மாற்றப்படுவதற்கு வாய்ப்புகளுள்ளன. எனினும், இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய விதிமுறைகளுக்கமைய துறைமுக நகரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மாத்திரமே அதன் மூலம் நாட்டுக்கு உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்