சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் ஏனைய செயற்பாட்டு விவகாரங்களை இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளாக ஷரிஆ பல்கலைக்கழகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப உரிமையாளரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் அதன் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு, பூனானையில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகளை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்த பின்னர், செயற்கை நுண்ணறிவு போன்ற பாடங்களை கற்பிக்கக்கூடிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நடைமுறைக்கமைய செயற்படுவதற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.