‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த வீடியோ நம்பகத்தன்மை அற்றது. இது குறித்து மக்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்’ என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். எமக்கு வழங்கிய விசேட பேட்டியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கே: 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 இன் அண்மைய வீடியோ வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?
பதில்: ஆம், அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்த பின்னர், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதுடன், இதற்குப் பல வழிகள் உள்ளன.
கே: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியா அல்லது தீவிரவாதிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா என்ற குழப்பமான நிலைமை பல்வேறு தரப்பினர் மத்தியில் காணப்படுகிறது. இதுபற்றி நீங்கள் கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா?
பதில்: இது தொடர்பாக குற்றச்சாட்டுகள் இருப்பதால் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு முன்பு அவர்களின் சதி குறித்த சில தகவல்களை நான் புலப்படுத்தினேன். அது மாத்திரமன்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி, அவர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் 79 பேருக்கு எதிராக 42 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். புதிதாக ஏதேனும் தகவல் கிடைத்தால், அதுபற்றியும் விசாரித்து ஆய்வு செய்வோம்.
கே: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் நீங்கள் கூறியவற்றில் கவனம் செலுத்தியிருந்தால், அது தடுக்கப்பட்டிருக்கும் என சர்வதேச பயங்கரவாத நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன கூறியிருந்தார். அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில்: அது நான் கூறிய கருத்து அல்ல, அது அவர் கூறிய கருத்து ஆகும். ஆனால் அவ்வாறான விடயம் அவரது கூற்றில் தெளிவாகத் தெரிகிறது. நாட்டில் இரத்தக்களரியை உருவாக்க அவர்கள் மேற்கொண்ட சதித்திட்டம் பற்றிய சில தகவல்கள் எனக்குக் கிடைத்தன, அது மிகவும் வெளிப்படையானது.
எவ்வாறாயினும், சனல் 4 ஊடகம் இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைக்கும் போது, அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். எனவே, சந்தேகத்தைப் போக்க வேண்டியது அரசின் பொறுப்பு. குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் உள்ளன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எனவே, நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடத்தை குறித்து அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா என்பதை அறியவும், அவ்வாறு இல்லையெனில் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் விசாரணை நடத்த பிரதம நீதியரசர் மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
கே: அண்மையில் சனல் 4 வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவையும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவையும் முன்னாள் ஜனாதிபதி நியமித்திருந்த நிலையில், இன்னுமொரு குழுவை நியமித்ததன் நோக்கம் என்ன?
பதில்: இது பற்றி இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன், புதிய விசாரணைக்கு தாம் தயாராக இருப்பதாகவும், ஸ்கொட்லன்ட்யாட்டை வரவழைக்கத் தயாராக இருப்பதாகவும் வெளிப்படையாகக் கூறினார். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பேராயர் உட்பட எந்தவொரு தரப்பிலிருந்தும் எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
அதன் பின்னர், விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் முழுவதையும் பேராயர்கள் மாநாட்டில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தோம். அப்போது வெளிநாட்டு விசாரணைக்கு யாரும் சம்மதிக்கவில்லை. உண்மைக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், உண்மையைக் கண்டறிய எந்த மாதிரியான வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து அரசு உரிய முடிவை மேற்கொள்ளும்.
கே: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச உதவி தேவையா அல்லது உள்நாட்டு விசாரணை போதுமானதா?
பதில்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமானது சர்வதேச ஆணையமோ, சர்வதேச நீதிமன்றமோ விசாரணை செய்ய வேண்டிய விடயம் அல்ல. இது உண்மையில் உள்நாட்டுப் புலனாய்வாளர்களின் உதவியுடன் விசாரணை செய்ய வேண்டிய விடயம்.
கே: செப்டம்பர் 15ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ள ஊழல் தடுப்பு புதிய சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் மோசடி செய்து சொத்துக்களை வைப்புச் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத பணத்தைத் திரும்பப் பெறுவது உடனடியாக தொடங்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். இதனை விளக்க முடியுமா?
பதில்: இந்தச் சட்டத்தில் போதுமான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம், அது செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும். செயல்முறையைத் தொடர அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் நாங்கள் செய்துள்ளோம். ஆணைக்குழுவுக்கு அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். பின்னர் அவர்கள் அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கிறார்கள்.
மேலும், உலக வங்கியின் அமுலாக்கப் பிரிவான ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்துடன் சர்வதேச ஆதரவைப் பெறவற்கு நான் கலந்துரையாடியுள்ளேன். அவர்கள் ஏற்கனவே எங்களுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்பார்க்கிறோம்.
கே: புதிய சட்டத்தை இயற்றுவது மட்டும் போதாது என்றும், ஊழலைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகிய இருதரப்பினரின் அசைக்க முடியாத ஆதரவும் அர்ப்பணிப்பும் முக்கியமானது என்றும் நீங்கள் ஊடகங்களுக்குக் கூறியிருந்தீர்கள். இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: சிலர் சட்டத்தை மீறி அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள்தான் குற்றவாளிகள். ஊழலை ஒழிக்க மக்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும், எல்ேலாரும் ஆதரவு தர வேண்டும். அந்த ஆதரவு இல்லாவிட்டாலும் நாங்கள் சுயாதீன ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளோம். எனவே, அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாமலும் அவர்களால் முன்னேற முடியும். அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை, அவர்கள் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
கே: எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துத் தொடர்பான வழக்கின் தற்போதைய நிலைமையை விளக்க முடியுமா?
பதில்: அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில வழக்குகள் உள்ளன. ஒன்று சிங்கப்பூரில் உள்ளது, மற்றொன்று இங்கிலாந்தில் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். இடைக்கால இழப்பீடு வழங்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கே: ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான விடயம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மனித உரிமை குறித்த விடயங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் எவ்வாறான முற்போக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
பதில்: மனித உரிமைகள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய உள்ளோம், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை நாங்கள் வைத்திருக்கிறோம்.
இந்தியா மற்றும் பிறநாடுகளில் இருந்து கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை இல்லாமல் நாடு திரும்புபவர்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ளவர்களின் பிரச்சினையை நாங்கள் நிவர்த்தி செய்துள்ளோம்.
எனவே, இந்த பிரச்சினைகள் அனைத்தையும் நாங்கள் தீர்த்துள்ளோம்.