மக்களை உருவேற்றி, அதன் ஊடாக அரசியல் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளும் போக்கு எமது நாட்டின் அரசியல்வாதிகள் பலருக்கு கைவந்த கலையாகும். பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையில், மக்களை எவ்வேளையிலும் அரசியல் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசியல்வாதிகள் பலரின் விருப்பம்.
இலங்கையில் அரங்கேறுகின்ற இனவாத சலசலப்புகள் யாவும் அரசியலைப் பின்னணியாகக் கொண்ட நாடகங்கள் என்பது சிந்திக்கத் தெரிந்த மக்களுக்குப் புரிந்த விடயம். அவ்வாறு சுயமாக சிந்திக்கத் திராணியற்ற மக்கள், சுயநல அரசியல்வாதிகளின் வலையில் வீழ்கின்றனர்.
அவர்களது நாடகங்களை நிஜமென்று நம்பி அந்த அரசியல்வாதிகளுக்கே அடிமையாகிப் போகின்றனர். இவ்வாறான அரசியல் அறிவீனம் மக்கள் மத்தியில் உள்ளவரை எமது நாட்டில் இனவாத அரசியல் தாராளமாகவே வாழ்ந்து கொண்டிருக்குமென்பதில் ஐயமில்லை.
வடக்கு, கிழக்கில் சமீப காலமாக இவ்வாறான இனவாத, மதவாத சலசலப்புகள் அதிகம் நடந்துள்ளன. மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி தூண்டிவிடுகின்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியாக பல இடங்களில் சம்பவங்கள் நடந்துள்ளன.
அவ்வாறான இடங்களில் இருதரப்புக்குமிடையில் அமைதியையும் சமரசத்தையும் ஏற்படுத்துவதென்பது தலைமைப் பதவியில் இருப்போருக்கு இலகுவான காரியமல்ல. ஒருபுறத்தில் நாட்டின் சட்டதிட்டங்களை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. மறுபுறத்தில் மதரீதியிலான கொந்தளிப்புகளை அவதானமாகக் கையாள வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் மிகவும் பக்குவமாகவும், முதிர்ச்சியுடனும் செயற்பட்டு வருவதாக மக்கள் கூறுவதை செவிமடுக்க முடிகின்றது.
வடக்கு, கிழக்கு பிரதேச கொந்தளிப்புகளில் ஒன்றுதான் திலீபன் நினைவுதின ஊர்தி பயணம் ஆகும். அந்த ஊர்திப் பயணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவமானது கண்டனத்துக்குரியதாக உள்ள போதிலும், ஜெனீவா கூட்டத் தொடர் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் வடக்கு, கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுவதும், பதற்றங்கள் உருவெடுப்பதும் வழமையென்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
எது எவ்வாறாயினும், மக்களைத் தூண்டி உருவேற்றி அரசியல் நாடகம் நடத்தும் காரியங்கள் அனைத்துமே வெறுப்புக்குரியதாகும்!