ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒரு ஈழத்தமிழர் என நம்மவரில் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆயினும் தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரில் பிறந்த ஒரு சிங்கப்பூரியன் ஆவர்!!!
அவரது “பூர்வீகம்” யாழ்ப்பாணம், ஊரெழு எனச் சொல்லப்படுகின்றது. தர்மன் தனது பூர்வீகத்தை பெருமையுடன் வெளிப்படுத்துபவர். தனது பூர்வீகம் பற்றிப்பேசும்போது ஊரெழு என்ற யாழ்ப்பாணத்துக் கிராமத்தைப் பற்றி அவர் குறிப்பிடுவார்.
சிங்கப்பூர்க் குடியரசானது தனது குடிமக்களை நான்கு பெரும் பிரிவுகளாக அடையாளப்படுத்தி வருகிறது. (1) சீனர் (மொத்த சனத்தொகையில் 74.3வீதம்) (2) மலாய்காரர்கள் (13.5 வீதம்), (3) “இந்தியர்கள்” (9.0 வீதம்), (4) “பிறர்” Others (3.2 வீதம்).
மேலே சொல்லப்பட்ட “இந்தியர்” என்ற பதம் ‘பாரத’ நாட்டவர்களை குறிப்பதாக நினைத்து குழம்பிவிடக்கூடாது. (ஈழத்தமிழர் உட்பட தெற்காசியர்கள் நாம் எல்லாருமே பாரத நாட்டினை அடியாகக் கொண்டவர்கள் என்ற வாதம் தனி.)
சிங்கப்பூர் குடிமக்கள் ஆகிக்கொள்ளும் “தமிழகத்துத் தமிழர்கள்”, “தெலுங்கர்” “மலையாளிகள்” “சீக்கியர்” “பஞ்சாபியர்” “குஜராத்திக்காரர்கள்” இன்னபிற. மற்றும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள், “சிங்களவர்” “முஸ்லிம்கள்” அனைவருக்கும் “இந்தியர்” என்ற இனக்குழும பொது அடையாளமே சிங்கப்பூரில் கிட்டும்.
இந்தவகையில் அங்கு வாழும் 9.0 வீத சிங்கப்பூர் ‘இந்தியர்’களுக்கான உத்தியோகபூர்வ மொழி தமிழ் ஆகும்..! ஆனால் மொத்த சிங்கப்பூர் சனத்தொகையில் தமிழரின் எண்ணிக்கை சுமார் 4.9 வீதம் மட்டுமே..!!
இந்த 4.9 அளவிலுள்ள சிறுபான்மையரின் மொழியான தமிழுக்கு, 74.3 வீதமாயிருக்கும் சீனர்களின் சீன மொழியோடு சமஉரிமை கொடுத்து இயங்கிவருகிறது சிங்கப்பூர்.