மிகப் பண்டைய காலத்தில் இருந்தே மாற்று உலகம் தொடர்பான சிந்தனைகளும் சித்தரிப்புகளும் உலக மக்கள் மத்தியில் அவரவர் அறிவு, இலக்கிய வளர்ச்சிக்கேற்ப வளர்ந்தும் கிளைத்தும் வந்துள்ளன.
பைபிளில் இது தொடர்பான தகவல்கள் குறைவு. எனினும் கிரேக்க, பண்டைய எகிப்து நாகரிகத்தில் இவ்வுலக மனிதன் வெளி உலகம் செல்வது, திரும்பி வருவது போன்ற சித்தரிப்புகள் உள்ளன. வேற்று உலகங்களில் தேவர்கள், ராட்சசர்கள் வாழ்வது, பூமிக்கு வருவது, வெளி உலகங்களை கைப்பற்றுவது தொடர்பாக ஹொலிவுட் திரைப்படக் காட்சிகளுக்கு நிகரான சித்தரிப்புகள் ஏராளம். இவை நீங்கள் அறிந்தவை என்பதால் விவரிப்பு அவசியமில்லை.
விண் தேர்களில் ஏறி வேறு உலகங்களுக்கு பயணிப்பது தொடர்பாக இந்திய இதிகாச, புராணங்களில் நிறைய செய்திகள் உள்ளதால் அன்றைய இந்தியர்களுக்கு வெளிக்கிரக வாசிகள் பற்றிய அறிவு போதுமான அளவு இருந்திருக்க வாய்ப்புண்டு.
கடந்த நூறு ஆண்டுகளை எடுத்துக் கொள்வோமானால், அறிவியல் ரீதியாக கோள்கள் கண்டு பிடிக்கப்பட்டு, சக்திவாய்ந்த தொலைக்காட்டிகள் ஊடாக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை மனிதன் ஆராயப் புகுந்ததன் விளைவாக விண்வெளி ரகசியங்கள் பல அவிழ்க்கப்பட்டன, அவிழ்க்கப்படுகின்றன.
விண்ணில் இருந்து விருந்தினர்கள் பூமிக்கு வருவது நமக்கு சமய, புராண ரீதியாக தெரிந்த விடயமாக இருந்தாலும், வெளிக்கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? அவை ஏற்கனவே பூமிக்கு வருகை தந்துள்ளனவா, நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாமா? இப்போதும் அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்கிறார்களா? எனப் பல கேள்விகள் நவீன விண்வெளி ஆய்வில் கேட்கப்பட்டு வருகின்றன.
1878ஆம் ஆண்டு டலஸ் நகருக்கு வெளிப்புறத்தில் ஒரு விவசாயி பறக்கும் தட்டைக் கண்டதாக செய்தி வெளியானது. பின்னர் 1947 ஜனவரி 24ஆம் திகதி கென்னத் ஆர்னோல்ட் என்ற அமெரிக்க விமானி ஒன்பது ஒளிரும் வட்ட வடிவிலான விண் பொருட்கள் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பறந்து சென்றதைத் கண்டதாகத் தெரிவித்தார். அவர்தான் பத்திரிகை நிருபருடன் போகும் போது Flying Saucers (பறக்கும் தட்டுகள்) என்ற பதத்தை முதல் தடவையாக பயன்படுத்தியவர். ஆங்கிலத்தில் தற்போது இவ்வார்த்கைக்கு பதிலாக அடையாளம் தெரியாத பொருள் (UFO) என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அடையாளம் காணப்படாத முரண்பாடான நிகழ்வு என்றும் அழைக்கிறார்கள்.
இத்தகைய மர்மப் பொருட்கள் வானில் தென்படுவது தொடர்பில் உலகெங்குமிருந்து பலரும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். அவை புகைப்படங்களாகவும், பத்திரிகை மற்றும் வீடியோ ஆதாரங்களாகவும் நூல்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எழுபதுகளில் அமெரிக்காவில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘குளோஸ் என்கவுன்டர் ஒப் தேர்ட் கைன்ட்’ என்பதாகும். Close encounter of Third kind என்ற இத் திரைப்படம் 1977இல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் தடவையாக ஒரு வெளிக்கிரக வாகனம் பூமியில் இறங்குவதாகவும் சண்டைக்கு வராமல் சமாதானமாக திரும்பிச் செல்வதாகவும் அப்படம் சித்தரித்திருந்தது. இதற்கு முன்னர் வெளியான வெளிக்கிரக வாசி படங்கள் அனைத்தும் உலகை அழிக்க வந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருந்தன. வெளிக் கிரகவாசிகளை நண்பர்களாகக் காட்டிய இத்திரைப்படம் உலக ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பைப் பெற்றது.
இரண்டாவது திரைப்படமும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் தயாரித்ததுதான். பெயர் E.T. (Extra Terrestrial).
1982 இல் வெளியானது. அமெரிக்காவில் தறையிறங்கும் வெளிக்கிரகவாசிகள் தம்முடன் அழைத்து வந்த குட்டிப் பையனை தொலைத்துவிட்டு திரும்பிச் சென்று விடுகிறார்கள். அக்குட்டிப் பையனை காப்பாற்றும் சிறுவர்கள் தமது வீட்டில் மறைத்து வைத்து வெளிக்கிரக பெற்றோரிடம் ஒப்படைக்கும் நெகிழ்ச்சியான திரைக்கதையை ஈ.டி. கொண்டிருந்தது.
வெளிக்கிரகவாசிகளின் பூமி வருகையை சாதாரண மக்களிடம் சாத்தியமானதுதான், பயப்படுவதற்கு ஏதுமில்லை என்பதை நிலை நிறுத்திய திரைப்படமாக இவை விளங்கின. நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் நகரங்களில் மீது வானில் நின்று கொண்டு நகரங்களை அழிக்கும் வில்லன்களாக வெளிக்கிரகவாசிகளை சித்தரிக்கும் திரைப்படமாக வெளிவந்து பெரு வெற்றி பெற்றது ‘இன்டிபென்டன் டே’ என்ற ஹொலிவூட் திரைப்படம். பல தோல்விகளின் பின்னர் இறுதி முயற்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதலில் அப் பிரமாண்டமான விண் கப்பல் எப்படி அழிக்கப்படுகிறது என்பதே கதை. 1996இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது.
நாம் தனியாகத்தான் இப் பேரண்டத்தில் வாழ்கிறோமா அல்லது அண்ட வெளியில் எங்கோ ஒரு மூலையில் நம்மைப் போல் அறிவுவிருத்தி பெற்ற உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற மனிதரிடம் நிலவும் சாதாரண சந்தேகமே விஞ்ஞானிகளின் தொடர்ச்சியான தேடல்களுக்கான காரணம்.
இந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை மெக்சிகோவில் நடைபெற்ற ஒரு விசாணையில் காட்சிக்கு வைக்கப்பட்ட இரண்டு வெளிக்கிரக வாசிகளின் கல்லாகிப்போன இரு உடல்கள் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை.
மெக்சிகோ காங்கிரஸ் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிக்கிரகவாசிகளின் பூமி வருகை தொடர்பான ஒரு விசாரணையை நடத்தியது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க காங்கிரசும் இத்தகைய விசாரணையை நடத்தியிருந்தது. அப்போது வெளிக்கிரகவாசிகள் அல்லது அவர்களது வாகனங்களின் வருகை தொடர்பான நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நிகழ்ந்து அவை பதிவு செய்யப்பட்டிருப்பதாக சாட்சியங்கள் அளிக்கப்பட்ட அதே சமயம் அமெரிக்க அரசு, பென்டகன், விமானப்படை என்பன இச்சம்பவங்களை மறுத்தும், மௌனம் காத்தும் வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதேபோன்ற ஒரு விசாரணையே மொக்சிகோவிலும் நடத்தப்பட்டது. அப்போதுதான் நேரடி காட்சியாக இரு பாறைப்படிவங்களான வெளிக்கிரகவாசிகளின் உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இவை இரண்டுமே தோற்றத்தில் சிறியவை. மூன்று விரல்களே காணப்படுகின்றன. கண், மூக்கு, வாய் அனைத்தும் மனித முகச் சாயலில் அமைந்தள்ளதோடு தலையின் பின்புறம் நீண்டதாகக் காணப்படுகிறது. இவற்றின் உடல்கள் எக்ஸ்ரே செய்யப்பட்டபோது ஒன்றின் வயிற்றில் இரண்டு முட்டைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதைபடிவங்கள் இரண்டும் 1700 ஆண்டுகள் பழைமையானவை என்றும் ஆய்வாளர்கள் கொன்ஸ்டான்டின் கொரோட்கோவி, ரஷ்ய மிர் 27 தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மனிதனுக்கு உள்ளதைப் போலவே 23 தொகுதி க்ரமோசம்களைக் கொண்டிருப்பதாகவும் ஆனால் உடற்கூறு ஆய்வு அவை மனிதனுடையது அல்ல என்று கூறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. இணையதளத்தில் அவர் பெயரும் இல்லை என்பதும் சுட்டிக்காட்டுகிறது.
மேலும் இவரது தனிப்பட்ட இணையத் தளத்தில் தேடினால் ‘பயோவெல்’ என்ற பெயருடைய மருந்தொன்று விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அதைப் பயன்படுத்தினால் மனிதரை சுற்றியுள்ளதாகக் கூறப்படும் ஒளியை அடையாளம் காணலாம் எனவும் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவர் ஒரு போலி என்பதையே நிரூபிப்பதாக இத்தரப்பு கூறுகிறது.
பறக்கும்தட்டு ஆய்வாளரான ஜெய்மி முஸானோ, இப்புதைப் படிவங்களின் டிஎன்ஏ மனிதருக்கானவை அல்ல என்றும் மனிதன் என்று கொள்ளமுடியாத உருவங்கள் என்றும் கூறும் இவர், வெளிக்கிரக ஜீவிகள் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாதென்கிறார்.
பெருநாட்டின் கடலோர நாஸியா பாலைவனத்தில் பிரமாண்டமான கோடுகளும் உருவங்களும் பாறைகளில் வரையப்பட்டுள்ளன. பல கிலோமீட்டர் அகலமும் நீளமும் கொண்ட இவை எவ்வாறான தோற்றம் கொண்டவை என்பதை தரையில் நின்று பார்த்தால் தெரியாது. வானில் இருந்து பார்த்தால் மட்டுமே இவற்றின் முழு உருவங்களை அவதானிக்க முடியும். பண்டைய பெருவியன் மக்கள் ஏன் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளையும் ஓவியங்களையும் வரைய வேண்டும்?
இக்கேள்விக்கு எரிக்வான் டெனிக்கன் என்ற ஜெர்மன் ஆய்வாளர் தன் 1968 நூலான ‘செரயட் ஒப் கோட்ஸ்’ (Chariot of Gods) என்ற புத்தகத்தில் பதில் தேடியிருந்தார். விண்வெளிவாசிகள் வந்திறங்கும் விமான நிலையமாக இது இருந்திருக்க வேண்டும் எனவும், அவர்களின் கண்களுக்கு தெரியும் வகையில் இப் பிரமாண்டான ஓவியங்கள் வரையப்பட்டன என்றும் அவர் விளக்கம் தெரிவித்திருந்தார். வெளிக்கிரகவாசிகள் பற்றிய ஆய்வுகளில் இப் புத்தகம் பிரளய புரட்சியை ஏற்படுத்தியது. வெளிக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள் என்றும் அறிவியல் மற்றும் பௌதீகவியல் சார்ந்த பல மாற்றங்கள் ஏற்பட அவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றும், பிரமிட் போன்ற அதிசயிக்கத்தக்க கட்டடங்களை அமைக்க அவர்களது அறிவு பயன்பட்டிருக்கிறது என்றும் அப்புத்தகத்தில் எரிக் நிறுவியிருந்தார்.
மெக்சிகோ காங்கிரசில் காட்சிப்படுத்தப்பட்டவை வெளிக்கிரகவாசிகளுடைய புதைபடிவங்கள் அல்ல என்கிறது இன்னொரு தரப்பு.
பண்டைய பெருவின் நஸ்கா கலாசாரம் மூத்தது என்று கூறும் இவர்கள், இம்மக்களின் புதைகுழிகள் கல்லறைத் திருடர்களினால் சீரழிக்கப்பட்டதாகவும் இப்போதும் மரியோ என்பவரது தலைமையில் புதையல் திருடர்கள் புதைகுழிளை தோண்டி வருவதாகவும் தெரிவிக்கின்றனர், இத்திருட்டுகள் தொடர்பாக பெரு கலாசார அமைச்சுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட போதும் அமைச்சு கண்டு கொள்வதில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். பெருவின் ஒரு பகுதியில் இருந்து 171 ‘மம்மி’கள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும் இவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை என்றும் குறிப்பிடும் இத்தரப்பு, பெருவில் இருந்து பண்டைய பொருட்களை இறக்குமதி செய்வதை அமெரிக்கா தடை விதித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் திருட்டு புனித புதை படிவங்களில் இருந்து உருவாக்கப்பட்ட வேற்றுக்கிரகவாசிகளின் உருவமே தவிர இது அசல் வெளிக்கிரகவாசிகளின் புதைபடிவங்கள் அல்ல என்பது இத்தரப்பின் வாதம்.
பண்டைய நஸ்கா மக்களின் புதைப் படிவங்களை எடுத்து வெட்டியும் ஒட்டியும் இவற்றை உருவாக்கியுள்ளார்கள். ஒட்டு வேலைகள் வெளியே தெரியாவண்ணம் வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளது என்றும் ‘லைவ் சயன்ஸ்’ என்ற அறிவியல் இணையதளம் தெரிவித்துள்ளது. இறந்த மனிதர்களின் சடலங்களை மனித சடலங்கள் இல்லை என நம்பவைப்பது தேசிய மற்றும் சர்வதேச நியமங்களை மீறும் செயல் என ஆய்வாளர்கள் கண்டித்துமிருக்கிறார்கள்.
அமெரிக்க காங்கிரசின் தெரிவுக் குழுவொன்று சமீபத்தில் பறக்கும் தட்டுகள் தொடர்பான விசாரணை ஒன்றை நடத்தியது. அவ்விசாரணையின் போது, அமெரிக்க அரசும், உளவுத்துறையும், நாசாவும், அமெரிக்க கடற்படை, விமானப்படையும் தான் அறிந்த வேற்றுக்கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் பூமியில் இறங்கிய சம்பவங்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிராகரித்துவிட்டனர்.
பூமிக்கு வரும் வெளிக்கிரகவாசிகள் மனிதர்களை சிறைபிடித்து தமது கலங்களுக்கு கூட்டிக் செல்வதாகவும், பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதாகவும், இருவேறு மனிதர்களையும் இணைத்து மனிதர் போல தோற்றமளிக்கும் கலப்பு மனிதர்களை பூமியில் தோற்றுவிக்க முயல்வதாகவும் அமெரிக்காவில் கருத்துகள் உள்ளன.
1947 – 1969 காலப்பகுதியில் 40 ஆயிரத்து 164 பறக்கும் தட்டு சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஸ்கொன்சின் மாநிலத்தில் மட்டும் 2,558 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. அமெரிக்க விமானப்படை, பறக்கும்தட்டு சம்பவங்களை ஆராய நீலப் புத்தகம் என்ற பெயரில் ஒரு ஆய்வைத் தொடங்கியது. ஆயிரத்து 112 வேற்றுக்கிரக வாகனங்கள் தொடர்பான ஆய்வுகள் 1,400 பக்கங்களில் மேற்கொள்ளப்பட்டன. வானில் மிதக்கும் பலூன்கள், சூரிய வெளிச்சம், காலநிலை, சதுப்பு நில வாயுக்கள் என பல சம்பவங்களின் உண்மைப் பின்னணி கண்டறியப்பட்டன. எனினும் விளக்கப்பட முடியாத சம்பவங்களும் அவற்றில் காணப்பட்டன. இந்த நீலப் புத்தக ஆய்வு காரணம் கூறப்படாமல் 1969ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் கொனோவா ஏரியில் இளம் ஜோடியொன்று 1970 இல் படகு சவாரி செய்து கொண்டிருந்தது. அப்போது தூரத்தில் இளஞ்சிவப்பு வர்ணத்தில் ஒரு பந்து வானத்தில் சுழன்று கொண்டிருந்ததாகவும் பின்னர் அவர்களின் தலைக்கு மேலாக நின்று அந்த பொருள் விரைந்து மறைந்ததாகவும் பின்னர் பொலிசாரிடம் அவர்கள் தெரிவித்த போதிலும் அதை அவர்கள் சட்டை செய்யவில்லையாம்.
உலகெங்கும் உள்ள விண் ஆய்வாளர்கள் அண்டவெளியை நோக்கி சமிக்ஞை ஒலிகளை அனுப்பி வருகின்றனர். பதில் சமிக்ஞை கிடைக்கிறதா என்ற எதிர்பார்ப்பில். புதிதாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி ஆழ்விண்வெளியில் தேடுதல் நடத்தி வருகிறது.
உயிரினங்கள் இருந்தால் அவை வெளிப்படுத்தக் கூடிய உயிரியல் வாயுக்களை அடையாளம் காண முடியுமா என்ற வகையில் ஆய்வு நடக்கிறது. இதை உயிரியல் கையெழுத்து என அழைக்கிறார்கள்.
மேலும் நம்மைப்போல முன்னேறிய ஜீவிகள் எங்கேனும் இருந்தால் அவை வெளிவிடக்கூடிய இரசாயன வாயுக்களையும் தேடுகிறார்கள். இதை ‘டெக்னோ சிக்னேச்சர்’ என அழைக்கிறார்கள்
இந்திய, கிரேக்க புராணங்களில் அரக்கர்கள் பற்றிய கதைகள் வருகின்றன. இராவணன், கும்பகர்ணன், தோர், கோலியாத், ஹேர்குலஸ் போன்ற இந்த அரக்கர்கள் யார்? பேரழிவு ஆயுதங்களுடன் இவர்களை அழிக்க வந்தவர்கள் யார்? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா என்ற கேள்வி நீண்டகாலமாக கேட்கப்படுகிறது. பதில்கள் எதுவுமே நிச்சயமானவையாக இல்லை!
அருள் சத்தியநாதன்