ஆசிய கிண்ணத் தொடர் என்பது இலங்கைக்கு விசேடமானது. வேறு எந்தத் தொடர்களை விடவும் ஆசிய கிண்ணத்தில் இலங்கை அலாதித் திறமையை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் டி20 வடிவத்தில் ஆசிய கிண்ணம் நடந்தபோது ஒப்பீட்டளவில் பலவீனமான அணியாக களமிறங்கிய இலங்கை சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இம்முறையும் இதே கதை தான். நடப்புச் சம்பியனாக இலங்கை ஆசிய கிண்ணத்தில் களமிறங்கியபோதும் ஒருநாள் வடிவத்தில் போட்டி நடைபெறுவது என்பது இலங்கைக்கு சாதகமாக இருக்கவில்லை.
ஆப்கானுடன் லாகூறில் நடைபெற்ற ஆரம்ப சுற்றில் இலங்கை நூலிழையில் வெற்றியீட்டி சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்கும் பாகிஸ்தானுடனான சுப்பர் 4 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்து வரை போராடி வெற்றியீட்டியது.
அதாவது இலங்கை அணி ஆசிய கிண்ணத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்ப இது 13 ஆவது தடவையாகும். வேறு எந்த அணியை விடவும் இது அதிகமாகும்.
அதேபோன்று ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு அடுத்து அதிக முறை சம்பியன் கிண்ணத்தை வென்ற அணியாகவும் இலங்கை உள்ளது. இதில் பாகிஸ்தான் 7 தடவைகள் கிண்ணத்தை வென்றிருப்பதோடு இலங்கை 6 தடவைகள் சம்பியனாகியுள்ளது.
அதாவது ஆசிய கிண்ணத்தில் பலம்மிப்ப பாகிஸ்தான் அணியின் துரதிருஷ்டம் தொடர்ந்து துரத்துகிறது என்று குறிப்பிடலாம். இம்முறை போட்டியை நடத்தும் அணியாக களமிறங்கிய பாகிஸ்தான் உலகின் முதல் நிலை ஒருநாள் அணியாக இருந்தபோதும் இந்தியாவிடம் மோசமாக தோற்று, இலங்கையிடமும் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
இந்தியா இதுவரை இரண்டு முறை தான் ஆசிய கிண்ணத்தை வென்றிருக்கிறது. அதுவும் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை எதிர்த்தாடியதில்லை என்ற சாதனை இந்த ஆண்டிலும் தொடர்கிறது.
இதன்படி இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று (17) ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. அணிகளின் ஏற்றத்தாழ்வுகள் ஒரு பக்கம் இருக்க இறுதிப் போட்டி நினைத்தபடி நடப்பதற்கு காலநிலை கைகொடுக்க வேண்டும்.
கொழும்பில் தொடர்ந்து மழை பெய்தபோதும் முக்கிய போட்டிகளில் அது பெரிதாக தாக்கம் செலுத்தாமல் தவிர்க்க முடிந்திருக்கிறது. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுப்பர் 4 போட்டிக்கு மேலதிக நாள் ஒதுக்கப்பட்டதால் அந்த ஆட்டம் தப்பித்துக் கொண்டது. இலங்கை பாகிஸ்தான் போட்டியும் ஓவர்கள் குறைக்கப்பட்டு அதிகாலை 1 மணி வரை நீடிக்க வேண்டியதாயிற்று.
எவ்வாறாயினும் இறுதிப் போட்டிக்கு திங்கட்கிழமை மேலதிக தினமாக ஒதுக்கப்பட்டிருப்பதால் முடிவு ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி வலுவான அணியாகவே தொடர்ந்து ஆடி வருகிறது. ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், கே.எல் ராகுல், விராட் கொஹ்லி என்று துடுப்பாட்ட வரிசை வலுவாக இருப்பதோடு பும்ரா முதற்கொண்டு பந்துவீச்சு வரிசையும் எதிரணிக்கு கடும் சவாலாக உள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டமே இதற்கு நல்ல உதாரணமாக உள்ளது.
எனவே, இந்திய அணியை வீழ்த்துவதென்றால் அதிக கரிசனையுடன் இன்றைய தினத்தில் ஆடுவது இலங்கைக்கு மிக முக்கியம். இலங்கை அணி தனது இரண்டாவது நிலை பந்துவீச்சாளர்களுடனேயே ஆசிய கிண்ண தொடரில் களமிறங்கியதோடு துடுப்பாட்ட வரிசையிலும் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன.
முதலில் ஆரம்ப வரிசை இன்னும் வலுவாக இல்லை. திமுத் கருணாரத்ன தனது பணியை செய்யாத நிலையில் குசல் ஜனித் பெரேரா பாகிஸ்தானுடனான போட்டியில் அழைக்கப்பட்டார். அவர் தனது வழக்கமான பாணியில் அதிரடியாக ஆடியபோதும் ரன் ஆவுட் ஆனது துரதிருஷ்டமே. எனவே இன்றைய போட்டியிலும் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
பத்தும் நிசங்க இன்னும் தனது திறமைக்கு திரும்பவில்லை என்பதோடு அணித்தலைவர் தசுன் ஷானக்க துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சோபிக்கத் தவறி வருகிறார்.
என்றாலும் குசல் மெண்டிஸ், சதீர மரவிக்ரம, சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வாவின் துடுப்பாட்டங்களே கடந்த போட்டிகளில் உதவின.
துனித் வெள்ளலகேவின் சகலதுறை ஆட்டம் அணிக்கு தீர்க்கமாக அமையும் என்று இந்தியாவுக்கு எதிரான சுப்பர் 4 போட்டியில் உறுயானது.
பந்துவீச்சு வரிசையில் முக்கியமானவராக இருக்கும் மஹீஷ் தீக்ஷன உபாதைக்கு உள்ளாகி இருப்பது பெருத்த பின்னடைவு. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது தொடை பகுதியில் தசைப்பிடிப்புக்கு ஆளான அவர் இன்றைய தினம் களமிறங்குவதற்கு காலநேரம் பொருந்தி வரவேண்டி இருக்கும். இல்லாவிட்டால் துஷான் ஹேமன்த களமிறங்க வாய்ப்பு உள்ளது.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் விளையாடாத நிலையில் புது நம்பிக்கை தரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண இன்றைய தினம் சோபிப்பது இலங்கை அணி இந்திய துடுப்பாட்ட வீரர்களை மிரட்டுவதற்கு தீர்க்கமாக இருக்கும்.
கடந்த போட்டியில் கசுன் ராஜித்தவுக்கு பதில் களமிறக்கப்பட்ட பிரமோத் மதுஷான் சிறப்பாக செயற்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. துனித் வெள்ளாலகேவின் சுழற்பந்தும் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று நம்பலாம்.
எல்லாவற்றுக்கும் மேலே சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடுவது இலங்கை அணிக்கு மற்றொரு சாதகமான சூழலாகும்.
எனவே இலங்கை தனது திறமையுடன் அது ஆசியக் கிண்ணத்தில் காட்டிவரும் பிரத்தியேக திறமையும் கைகொடுத்தால் இன்று தனது நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.