சத்தமேதுமில்லாத,
சப்த நாடியும்
அடங்கி ஒடுங்கியதுதான்
மெளனம்!
இல்லையில்லை
மொழி
ஊமையாகிப் போனதுதான்
மெளனம்!
இல்லையில்லை
பாஷைகளின்
பாசாங்கு நித்திரைதான்
மெளனம்!
யார் சொன்னது
இவைகள்தாம்
மெளனம் என்று?
மெளனத்திற்குள்
ஒரு
அழுகை ஒளிந்திருக்கலாம்…
மெளனம்
ஒரு விசும்பலை
ஒளித்து வைத்திருக்கலாம்…
ஒரு
விஷச் சிரிப்பை…
ஒரு
விசமப் புன்னகையை…
பாரியபெரும்
துரோகமொன்றை….
ஆயிரம்
அணுகுண்டு வெடிப்பின்
அதிர்வலைகளை…
ஒரு
இலட்சியம் நோக்கிய
ஓர்மத்தின்
ஆர்ப்பரிப்பை…
மனசாட்சி சமுத்திரத்தின்
பெளர்ணமி நாள்
கொந்தளிப்பு அலைகளை…
ஒரு
கோடைச் சுடுவெயிலின்
தகிக்கும் மணற்பரப்பை…
ஒரு
அடங்காத
ஆசையொன்றின்
ஏக்கத் தவிப்பை…
ஒரு
பிரளயத்தின்
பிரவாகிப்பை…
இங்கே
சொல்லவியலாத
இன்னும் ஏதோவொன்றை…
இப்படி
இவற்றையெல்லாம்
உள்ளடக்கி வைத்திருப்பதை
மெளனமென்று
எவ்வாறு அழைப்பது?
மெளனம்
சம்மதத்தின் அறிகுறியென்று
சதாகாலமும்
நம்பிக்கொண்டிருக்கிறவர்களே!
நீங்கள்
புரிந்துகொள்ள ஞாயமில்லை
இருந்தாலும்
இலகுவாக சொல்வதென்றால்…
மெளனம்!
ஒரு
கடவுளைப்போல.
– காரைநகர்
வ.வடிவழகையன்