என் வீட்டுப் பூந்தோட்டம்
எழில் இழந்து வருவதாக
என் மனைவி புலம்புகிறாள்…!
ஓ…
பூச்சி புழுக்களின் பட்டாளம்
படை எடுக்கும் இடமாக…
அவை, ஆர்ப்பாட்டம் செய்யும்
அமர்க்களமாக…!
பாடுபட்டு வளர்த்த பூஞ்செடிகள்
கேடுகெட்ட பூச்சி புழுக்களால்
“சித்திர வதை” செய்யப்பட்டு
வருவதாக – அவள்
சிணுங்குகிறாள்…
கண் கலங்குகிறாள்…!!
“எழுத்துப் புரட்சி” செய்யும்
உங்கள் அழகிய முற்றத்தில்
இந்தப் படைகளுக்கு எதிராகப்
புரட்சி செய்ய இயலாதோ…?”
என்கிறாள்…!
“புன்னகை சிந்திய பூந்தோட்டம்
புலம்புதே – இன்று தினம் தினம்”
என ஏங்குகிறாள்…!
“புறப்படுங்கள்…
பூச்சிநாசினி வாங்கிவந்து
பூண்டோடு அழியுங்கள்” என்று
போர்க்கொடி ஏந்துகிறாள்…!!
இலையுதிர் காலத்தில்
இலைகள் உதிரும்
இலை துளிர் காலத்தில்
இலைகள் துளிர்க்கும்…!!
பூச்சி புழுக்கள்
அரிக்கும் காலத்தில்
அவைகள் அரித்தே தீரும்…
“எதுவும் கடந்தே போகும்…!!”
எனக்குள் நானே
சொல்லிக் கொள்கிறேன்…
வாழ்வியல் தத்துவங்களாக…
உலகியல் உண்மைகளாக…!!
இப்போது அந்தப்
பூச்சி புழுக்கள் அரித்த
இலைகளைக் “கவி உள்ளம்”
கொண்டு நுணுகிப் பார்க்கிறேன்…!
அரிதட்டுகள் போலவே
அவை தோன்றினாலும்…
அழகாகவே மிகவும் தெரிகின்றனவே…
என் பார்வையிலே…!
இரசிக்கிறேன்…!
எத்தனை எத்தனையோ எண்ணில்லா
வண்ணச் சித்திரங்களாய்
“இந்த இலைகள்” என்
கண்களில் படுகின்றனவே…
நெஞ்சம் குளிர்கிறேன்…!
உலகப் பிரசித்தி பெற்ற
அத்தனை ஓவியர்களும்
சிற்பிகளும் தோற்றே விடுவார்களே
– இத்தனை
சித்திரிப்புகளுக்கும்
செதுக்குதல்களுக்கும் முன்னாலே…!
என் இல்லத்தரசியோ
இதனை அறிவாளோ…?
“சித்திர வதை” அல்ல
சிந்தையைத் தொடும்
சித்திரங்களே
இவையென்பதைப் புரிவாளோ…?
என்ன செய்வேன் நான்…?
பூச்சி புழுக்களுக்கு
எதிராகவும் போராட்டம்
நடத்த முடியுமோ…?
அவளைச் சமாளித்தே
ஆகவேண்டுமே…!
நடக்கிறேன் நகரத்தை நோக்கி…
பூச்சிநாசினி
வாங்குவதற்காக அல்லவே…!
புதிய பூக்கன்றுகள்
வாங்குவதற்காகவே…!
என் வீட்டு
உரப் பைகளிலும்
பழைய கோப்புகளிலும்
எவரது கவனிப்புமின்றியே…
எலிகளாலும் பூச்சிகளாலும்
அரிக்கப்பட்ட நிலையிலே…
தூசுகள் படிந்து கிடந்து வரும்
“என் கவிதைப் பூக்கள்”
பூச்சி புழுக்கள் அரித்த
இலைகளாகவே என்
மனத்திரையிலே
நிழலாடுகின்றனவே…
அழியாத கோலங்களாக…!!
விவேகவெளி தமிழேந்திரன்
(சரவணமுத்து நவேந்திரன்)